மிக மிக அவசரம் @ விமர்சனம்

வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து திரைக்கதை எழுதி இயக்க, லிப்ரா புரடக்சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட,

ஜெகனின் கதை  வசனத்தில் பிரியங்கா, செந்தமிழன் சீமான், வழக்கு எண் முத்துராமன்,  ஈ ராமதாஸ் ஆகியோர் நடித்து திரைக்கு வந்திருக்கும் சமூக அக்கறையுள்ள படம் மிக மிக அவசரம் . 

பெண்களை பாலியல் உறவுக்கு சம்மதிக்க வைக்க ஆணாதிக்கம் முயலும் வழிகள் பல . அதில் ஒன்று தனக்குக் கீழ்  பணிபுரியும் பெண்ணை  வசதிகள் காட்டி மயக்கியோ அல்லது கடுமை காட்டி மிரட்டியோ சம்மதிக்க வைப்பது . 

எந்த வகையிலும் சிக்காமல் எதிர்க்கும் பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு வேண்டிய இன்னொரு உயர் அதிகாரி,  அந்த பெண்ணை கொடுமையான கேவலமான கீழ்த்தரமான முறையில் பழி வாங்கினால் அவள் கதி  என்ன ? இது   சூழல் . 

வீடு . அலுவலகம் , பொது இடங்கள் எல்லாவற்றிலும் பெண்களுக்கு சிறு நீர் கழிப்பதில் பல சிரமங்கள் . தன் வீட்டு பெண்களை வெளியே அழைத்துக் கொண்டு போகும் போது, அதற்கான இடம் வரும்போது , தாங்களே பெண்களுக்கு இயற்கை உபாதை கழிப்பதற்கான வாய்ப்பை தர வேண்டும் என்பது பண்பு . அதுவே பலரிடத்தில் இல்லை.  இது  சமூக பிரச்னை. 

இந்த இரண்டையும ஒன்று சேர்த்து….

பந்தோபஸ்து என்ற பெயரில் ஒரு  பெண் காவலரை ( பிரியங்கா)  ஒரு வக்கிரகுணம் கொண்ட உயர் அதிகாரி (  வழக்கு  எண் முத்துராமன்) சிறு நீர் கழிக்க வாய்ப்பே இல்லாத ஒரு பாலத்தில் நாள் முழுக்க  நிற்கவைத்து கொடுமை செய்ய, 

நல்ல மனம் கொண்ட சக காவலர் ( ராமதாஸ்), காதலன் (ஹரீஷ்) சமூக அக்கறை உள்ள உயர் போலீஸ் அதிகாரி ( சீமான்) ஆகியோரால் உதவ முடியாமல் போக, அவளுக்கு நேர்ந்த விபரீதம் என்ன அதன் விடை என்ன என்பதே இந்த மிக மிக அவசரம் 

நிகழ்வில் நடக்கிற ஒரு முக்கியமான  சித்ரவதையை அடிப்படையாக எடுத்துக் கொண்டு,  அதில்  சமூக அக்கறை , தமிழ் மொழியின உணர்வு இரண்டையும் கலந்து அட்டகாசமான படத்தைக் கொடுத்து இருக்கிறார் சுரேஷ் காமாட்சி . வாழ்த்துக்கள் . 

ஒரு பெண் சிறு நீர் கழிக்க அவஸ்தைப் படுகிறாள் என்பது ஒரு உணர்வு . அதை அந்த கதாபாத்திரத்தின் முக மற்றும் உடல் பாவனைளை மட்டும் காட்டி மக்களை உணர வைப்பது போதாது . 

அதை உருவமாக உணர வைப்பது மிக சவாலான டைரக்ஷன் வித்தை.  எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்  காட்சியில் பேயையே காட்டாமல் பேய் இருப்பதை உணர வைப்பதை விட ஆயிரம் மடங்கு சவாலான விஷயம் இது.

அந்த சவாலை சிறப்பாக எதிர்கொண்டு இருக்கிறார் சுரேஷ் காமாட்சி . ஆற்றின் அணைக்கட்டின் ஒரு  பக்கத்தில் மோதி ஊறி உருளும் தண்ணீர், மறு பக்கம் ஷட்டர்கள் வழியே பீய்ச்சி அடிக்கும் தண்ணீர், தண்ணீர் டிராக்டரில் இருந்து மெலிதாக பாய்ந்து விழும் தண்ணீர், சாலையில்  சிதறும் நீர்த் துளி, தண்ணீர் பாட்டில் கொண்டு சொல்லும் குழந்தை , என்று, 

சகல வகையிலும்  சூழலின் இயற்கை நிகழ்வுகளோடு பொருத்தி, ஒரு பெண் சிறுநீர் கழிக்கமுடியாத அவஸ்தையை ,   விரசம் இல்லாமல் ரம்மியமாக அழுத்தமான உணர  வைத்து ஒரு இயக்குனராக ஜொலித்து இருக்கிறார் சுரேஷ் காமாட்சி . பாராட்டுகள்.

படம் பார்க்கையில் ஒரு நிலையில் நம் சிறுநீர்ப் பையும் கனமாகிக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு . 

டைரக்சன் பயில்வோர் முயல்வோருக்கு இதன் மூலம் ஒரு பாடம் நடத்தி இருக்கிறார் சுரேஷ் காமாட்சி .ஒரு இயக்குனராக(வும்) அவருக்கு சிவப்புக்கு கம்பள வரவேற்பு . இன்னும் நிறைய படங்கள்,  கதைகள் காத்திருக்கின்றன . ஒரு பக்கம் வீட்டில் அம்மா என்று அழைக்கும் குழந்தை , அப்பா என்று ஒரு நபர் , இடையில் நாயகிக்கு வேறொரு ஒருவனோடு காதல் என்று பார்ப்பவர்களை  செல்லமாக சீண்டி விட்டு அப்புறம்  ‘ அடடே அப்படியா ?’  என்று ஓஹோ போட வைக்கும் திரைக்கதை! இது போன்ற மேலும் பல சுவாரஸ்யங்கள் படத்தில் . 

இதோடு,  ஈழ இன உணர்வையும் கலந்து காட்சிகள்  அமைத்து  கோபுரம் என உயர்கிறார் சுரேஷ் காமாட்சி . சமூக நலன் பேசும் இளநீர் வியாபாரி  சேகுவரா படம் போட்ட பனியன் அணிந்தபடி இருப்பதை பார்க்கும்போது , இது தமிழினத் தலைவர் பிரபாகரன் படத்தை காட்ட வேண்டிய இடம் ஆச்சே என்று நமக்கு  வந்த  பெரு  மூச்சை ,  அடுத்தடுத்த காட்சிகளில் உற்சாக மூச்சாக மாற்றுகிறார் .

பிரபாகரன் போட்டோவை காட்டினால்தானே சென்சார் தடுக்கும் ? பதிலாக தமிழ் தேசிய தலைவர் என்ற எழுத்துக்களில் பிரபாகரனின் பொன்மொழிகள் கொண்ட வாசகங்கள்  மன நிறைவை தருகின்றன . நன்றி நன்றி நன்றி !

கேவலமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தின் பேரில் உள்ள மொழி அரசியலும்…  ரகசிய ரசனை !

ஜெகனின் (கதை மற்றும் ) வசனமும் அவ்வளவு சிறப்பு . 

” என்ன தங்கச்சி இது .. ஒரு சிங்களவனுக்கு இவ்வளவு பாதுகாப்பு தர்றீங்க . உங்க மொழி பேசுற என்னை இப்படி நடத்தறீங்க ?” என்ற ஈழத் தமிழ் கதாபாத்திரத்தின் கேள்வி நம்மை குத்திக் கிழிகிறது . 

பல நடிகைகள் ஏற்க தயங்கும்  ஒரு கதாபாத்திரத்தில்  — ஒருவேளை தவறான குழுவின் படமாக்கலில் இப்படி ஒரு கதாபாத்திரம் செய்தால் களேபரமாக போக வாய்ப்புள்ள ஒரு கதாபாத்திரத்தில்-  நுண்ணிய முகபாவனைகள், உடல் மொழிகள் குரல் நடிப்பு என்று அசத்தலாக  நடித்துள்ளார் பிரியங்கா . மிக சிறப்பு .

 உயர் காவல் துறை அதிகாரியாக  படத்துக்கு உற்சாக ஊற்று தருகிறார் செந்தமிழன் சீமான்.  நாயகிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்து , தவறு செய்த அதிகாரி முன்பு சட்டென பொங்கி எழுந்து நிற்கும் காட்சியில் சீறல் சீமான்!இயல்பான அதிகாரியாக ராமதாஸ் மிக இயல்பு நடிப்பு  . கொடூர அதிகாரியாக வழக்கு எண் முத்துராமன் பொருத்தம் .ஹரீஷ், அரவிந்தன், லிங்கா, சரவணா சக்தி,  வெற்றி குமரன் ஆகியோரும் சிறப்பாக செய்துள்ளனர் . வி கே சுந்தர் , குணா இருவரின் உற்சாக பங்களிப்புக்கும் பாராட்டுகள்  .

பால பரணியின் ஒளிப்பதிவு மழைக் காட்சிகளில் மனம் நனைக்கிறது . இஷான் தேவின் இசையும் உணர்வுக் கூட்டல் கிடைக்க உதவுகிறது . சுதர்ஷனின் படத் தொகுப்பு உணர்வு சிதறாமல் வேகத்தையும் கூட்டுகிறது 

படத்தின்  கதாநாயகியின் பிரச்னையை வெகு ஜன மக்களை உணர வைக்கப் பொருத்தமான — இன்னும் சிறப்பான லொக்கேஷனை  தெரிவு செய்ய தவறி இருக்கிறது படக் குழு . வள்ளுவரையே துணைக்கு அழைத்தாலும் கூட….  கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் .  ஒரு மனிதன் செய்யும் தவறு இன்னொரு மனிதனால் குறிப்பாக ஒரு பெண் கதாபாத்திரத்தால் களையப் படுவது போல கிளைமாக்ஸ் அமைந்து இருந்தால் படம் இன்னும் சிகரம் தொட்டிருக்கும் .

குழந்தைத்தனமான சில தேவையற்ற பில்டப்புகளையும் வெட்டி  எரிந்திருக்கலாம் .எனினும் இவை எல்லாம் மீச்சிறு குறைகளே !

இது போன்ற சிறந்த படங்களை பார்த்து ஆதரிக்காமல் , தமிழ் சினிமாவில் நல்ல படங்களே அவருவது இல்லை . அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருப்பது , மாவு இன்னும் புளிச்சுப் போகத்தான் உதவும் . 

இப்படி ஒரு நல்ல படத்தை திரைக்குக் கொண்டு வரும் லிப்ரா புரடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திர சேகருக்கு மனமார்ந்த பாராட்டுகள். மொத்தத்தில் மிக மிக அவசரம் …. நல்ல சினிமாவை நேசிப்போர் ரசிப்போர் வேண்டுவோர் விரும்புவோர் மிக மிக அவசரமாக பார்க்க வேண்டிய படம் . 

மகுடம் சூடும் கலைஞர்கள் 

——————————————–

சுரேஷ் காமாட்சி, ஜெகன், பிரியங்கா , ஈ. ராமதாஸ் , ரவீந்தர் சந்திர சேகர் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *