AXESS FILM FACTORY சார்பில் டில்லி பாபு தயாரிக்க, பரத், வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார், ராஜ் குமார் நடிப்பில் எம். சக்திவேல் இயக்கி இருக்கும் படம்.
இரவில் காரில் ஊருக்குப் போகும் வழியில் ஆள் அரவமற்ற இடத்தில் கணவன் (பரத்) அடித்துக் கொல்லப் படுவது போல கனவு காணும் மனைவி (வாணி போஜன்) மற்றும் பள்ளி செல்லும் ஒரு மகன் கொண்ட குடும்பம். அவர்களுக்கு வேறு ஒரு பிரச்னை இருக்கிறது என்பதும் உணர்த்தப்படுகிறது. நிஜத்திலும் ஒரு பெரும் உயிராபத்தில் இருந்து கணவன் மயிரிழையில் உயிர் தப்புகிறான் .
சாதிக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் பெண்ணின் அப்பா ( கே எஸ் ரவிக்குமார்) மற்றும் அந்த வழி உறவுகளுக்கு இன்னும் கோபம் உண்டு.
எனினும் மாமியாரின் அழைப்பின் பேரில் குலதெய்வம் கோவிலுக்குப் போய் வர, மனைவியின் ஊருக்கு போகிறார்கள் . அலுவலக நண்பனும் (ராஜ்குமார்) தன் மனைவி மற்றும் மகனோடு சில நாட்கள் கழித்து ஊருக்கு வருகிறான் .
நாயகனுக்கு பணி நிமித்தம் உடனே சென்னை வர அழைப்பு வருகிறது .

கணவன் மனைவி மகன் மூவரும் இரவில் கிளம்ப வழியின் அமானுஷ்ய உணர்வுகளோடு, ஒரு உருவம் கணவனை அடித்துக் கொன்று உயிரோடு எரிக்க முயல்கிறது . செய்தும் முடிக்கிறதே . இங்கே ஒரு டுவிஸ்ட்.
நடந்தது என்ன என்பதே படம்.
பிரசாத்தின் அருமையான பின்னணி இசை அசத்துகிறது . ஒலியின் ஆதிக்கம் நிறைந்த இசையை அருமையாக செய்து இருக்கிறார். காற்றாலை மின்சாரக் காற்றாடியின் விசிறித் தகடு சுழலத் துவங்கும் போது வரும் ஒலியை வைத்து அவர் அமைத்து இருக்கும் தீம் மியூசிக் அபாரம்
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு சிறப்பு. கிராமம், இருள் , விஸ்தீரணம், விபத்து என்று எல்லா விசயங்களையும் அழகாக கண்ணுக்குள் கொண்டு வருகிறார்.
சந்தீப் குமாரின் ஒலி வடிவமைப்பும் சபாஷ் . திக்கிட வைக்கிறார்.
மணிகண்டன் சீனிவாசனின் கலை இயக்கம் அருமை ,. வைக்கோல் போருக்கும் காரின் ஹெட் லைட் எரிவது உட்பட பல இடங்களில் சிறப்பான வேலை குறிப்பாக அந்த மூகமூடி வடிவமைப்பு பிரம்மாதம் . அந்த முகமூடியை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தாலே நல்ல கதைகள் வரும் வாய்ப்பு உண்டு .

கனவு கண்டு விழிக்கும் வாணி போஜனின் முன்னாள் வீட்டில் இருக்கும் ஓவியம் , கனவில் வந்த முக மூடி சாயலில் இருக்க, அவர் தலையை சட்டென்று திருப்பி வேறு ஓவியங்களைப் பார்ப்பது , காரின் சக்கரத்தில் நசுங்கும் பொம்மைக் கார் ஆகிய ஷாட்களில் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் சக்திவேல்.
பரத் , வாணி போஜன் இருவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர்.
முக்கிய சம்பவம் நடக்கும் லொக்கேஷன் அருமை .
வம்படியாக இறுக்கிப் பிடித்து இழுத்துக் கட்டப்பட்ட- வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப்பட்ட திரைக்கதை , மிக பலவீனமான வசனங்கள் , தேவையற்ற திணிப்புகள் நியாய தர்மமின்மை எல்லாம் இருந்தாலும் கூட, படம் கடைசியில் சொல்லும் விசயத்தில் கவனம் கவர்கிறது . மரியாதை பெறுகிறது.
இன்னொரு பக்கம் பல இடங்களில் நிஜமாகவே மிரள வைக்கிறார்கள்