கிரேட் B புரடக்ஷன் சார்பில் பூபாளன் நடராஜன் பாலா தயாரிக்க, பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த வினுபாரதி இயக்க, ஜீவா, எம் எஸ் பிரபு, ஓய.என்,முரளி ஆகியோரிடம் உதவியாளராக இருந்த வெங்கடேசின் ஒளிப்பதிவில் நித்யன் கார்த்திக் இசையில் , நித்தின் , மிஷா கோஷல் இணையராக நடிக்கும் செண்டிமெண்ட் கலந்த ஹாரர் படம் மூச் .
இரண்டு குழந்தைகளோடு பாசம் காட்டிப் பழகிவிட்டு அவர்களை பிரிய முடியாமல் தவிக்கும் ஒரு பேய்க்கும் அந்த குழந்தைகளின் அம்மாவுக்கும் நடக்கும் பாசப் போராட்டமே படத்தின் அடிப்படைக் கதை . படத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் தம்பியான ஜெயராஜ் போட்டோ கிராபராக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். (இது தவிர கத்துக்குட்டி என்ற படத்திலும் நடிக்கிறார் இவர் )
தாணு , அகத்தியன் , விக்ரமன், சினேகன் , அமீர் , ஆகியோர் பாடல் வெளியீட்டு விழாவில்கலந்து கொண்டு படத்தில் பாடல்களை வெளியிட்டனர் . விழாவில் பேசிய இயக்குனர் விக்ரமன் “வட நாட்டில் இருந்து வந்தாலும் நன்றாகத் தமிழ் பேசுகிறார் கதாநாயகி மிஷா கோசல் ” என்று மனம் விட்டுப் பாராட்டினார் .
பாடல் வெளியீட்டு விழாவை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தையும் நான்கு பாடல்களையும் திரையிட்டார்கள்.
பேய்ப் படத்துக்கே உரிய சகல அம்சங்களோடு முன்னோட்டம் மிரட்டலாக இருந்தது . ”இது உயிரின் ஓசை” என்ற பாடலை மிக அழுத்தமாக நெகிழ்வாக எடுத்து இருந்தார் இயக்குனர் வினுபரதி. ”’காமம் வேறு காதல் வேறு” பாடலில் புகுந்து விளையாடி இருந்தார் நாயகி மிஷா கோஷல். ”மரச்சான் பொம்மை” பாடலின் இசை , பாடகி பத்மலதாவின் குரல் இரண்டும் ஈர்ப்பாக இருந்தது .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பூபாளன் “இது எனது முதல் படம் . சொன்னபடி படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் . இந்தப் படத்தின் பிரண்ட் அம்பாசடர் போல இருந்து எங்கள் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் , இயக்குனர் பாரதிராஜாவை போலவே இருக்கும் அவரது தம்பி ஜெயராஜ் . அவருக்கு நன்றி ” என்றார்.
படப்பிடிப்பு அனுபவங்களை பற்றிப் பேசிய இயக்குனர் வினுபாரதி “கிருஷ்ணகிரியில் ஒரு மாந்தோப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது . அங்கே ஒரு பெரிய குரங்குக் கூட்டம் ரொம்ப நாளாக இருந்து பழங்களை தின்று தோப்புக்காரருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறது.
படத்தில் பேயாக நடிக்கும் நடிகை அதற்கான மேக்கப்போடு அங்கு போனதுதான் தாமதம் .. அவரைப் பார்த்த அந்தக் குரங்குக் கூட்டம் கத்திக் கதறிக் கொண்டு அந்தத் தோப்பை விட்டே ஓடி விட்டது .
அப்புறம் பக்கத்து ஊரு தோப்புக்காரர்கள் எல்லாம் வந்து “எங்க தோப்பிலும் ஷூட்டிங் நடத்தி குரங்கு விரட்டிக் கொடுங்க “என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள் .
அந்த பேய் மேக்கப்பின் பவர் எங்களுக்கே அப்போதுதான் புரிந்தது” என்றார் . (ஒருவேளை மேக்கப் போடாமல் வந்திருந்தால் குரங்குக் கூட்டம் மாவட்டத்தை விட்டே ஓடி இருக்குமோ என்னவோ !)
மூச் படம் திகில் , செண்டிமெண்ட் இரண்டிலும் ஸ்ட்ராங்காக இருப்பது புரிகிறது .