திடுக்கிட வைத்த பேய்கள், கிலி கொடுத்த பேய்கள், நியாயம் கேட்ட பேய்கள் , அழகான பேய்கள், கடவுளோடு சண்டை போட்ட பேய்கள். அலற வைத்த பேய்கள், சிரிக்க வைத்த பேய்கள், அருவருக்க வைத்த பேய்கள் இப்படி எத்தனையோ பேய்களை தமிழ் சினிமா பாத்தாச்சு. (கல்யாணம் நடந்து கொஞ்ச நாள் ஆகிவிட்ட யாரையும் இந்தப் பேய்கள் பெரிதாகப் பயமுறுத்தவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்)
தவிர தமிழ் சினிமாவில் இது விதம் விதமான பேய்கள் கேட் வாக் செய்யும் சீசன்.

அதற்கேற்ப, இரண்டு குழந்தைகளோடு பாசம் காட்டிப் பழகிவிட்டு அவர்களை பிரிய முடியாமல் தவிக்கும் ஒரு பேய்க்கும் அந்த குழந்தைகளின் அம்மாவுக்கும் நடக்கும் பாசப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு ஒரு படம் வருகிறது.
கிரேட் B புரடக்ஷன் தயாரிக்க, பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த வினுபாரதி இயக்க (‘என் இனிய பேய் மக்களேன்னு படத்தை ஆரம்பிக்கலையே ?’) ஜீவா, எம் எஸ் பிரபு, ஓய.என்,முரளி ஆகியோரிடம் உதவியாளராக இருந்த வெங்கடேசின் ஒளிப்பதிவில் நித்தின் , மிஷா கோஷல் இணையராக நடிக்கும் இந்தப் படத்தின் பெயர் மூச்.
ஆனாலும் டோன்ட் வொரி .படத்தைப் பற்றி நிறையவே பேசலாம்.
படத்தில் பாரதிராஜாவின் தம்பியான ஜெயராஜ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பே கத்துக்குட்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார் இவர் .

தம்பியை சிஷ்யர் நடிக்க வைப்பது பற்றி பாரதிராஜா என்ன சொன்னாராம் ? “என்னை ஏன்யா நடிக்க கூப்பிடலன்னு கேட்டார் . அடுத்த படத்துக்கு அவர் கிட்ட ஒரு கதைய சொல்லிட்டு அதுல நடிக்க வைக்கிறேன் சார்’னு சொல்லிட்டு வந்திருக்கேன் ” என்று சிரிக்கிறார் இயக்குனர் வினுபாரதி.
குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம் , மற்றும் சென்னையில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரைலரையும் ஒரு பாடலையும் போட்டுக்காட்டினார்கள் .

‘ஃபிரீ’யாக மிஷா கோஷல் துள்ளி துள்ளி ஆடும் பாடல் ஒரு பக்கம் இருக்கட்டும்.
டிரைலரில் நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை . உன்னை கை விடுவதும் இல்லை என்ற பைபிள் வாசகம் வருகிறது.
“பைபிள் வாசகங்களை பேய் சொல்லலாமா?” என்று கேட்டால்….
” நம்பிக்கையின் உச்சபட்ச உணர்வை தரும் வாசகம் அது. இந்தப் படத்துக்கு அது பொருத்தமாக இருந்ததால் பயன்படுத்தினோம் .
நீங்கள் சொல்வது போல டிரைலரில் அது தவறாக தோன்றலாம் .
ஆனால் படத்தில் அந்த வாசகத்தை அதற்குரிய புனிதத் தன்மையோடு கையாண்டிருக்கிறோம் ” என்கிறார் இயக்குனர் .
நல்லது எனில் நல்லதே !