கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் எஸ்.பி.பி சரண் தயாரிக்க, அர்ஜுன் சிதம்பரம் , அதிதி செல்லப்பா, வெங்கடேஷ் ஹரி நாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், லக்ஷ்மி , கே.பாக்யராஜ் ஆகியோர் நடிக்க , மதுமிதா இயக்கி இருக்கும் படம் மூணே மூணு வார்த்தை . எத்தனை வார்த்தைக்கு பலன் உண்டு என்று பார்க்கலாம் .
நல்ல வேளையில் இருந்தும் ஒழுங்காக வேலை செய்யாததால் வேலையை இழந்த நண்பர்கள் அர்ஜுனும் (அர்ஜுன் சிதம்பரம் ) கர்ணாவும் (வெங்கடேஷ் ஹரி நாதன்)! அர்ஜுனுக்கு அஞ்சலி (அதிதி செல்லப்பா) என்ற பெண் மீது காதல் வருகிறது . அதை வெளிப்படுத்த சரியான சமயம் பார்த்து அர்ஜுன் காத்திருக்கிறான் . அப்பா அம்மாவை இழந்த அர்ஜுனின் தாத்தாவும் (எஸ்.பி.பாலசுப்ரமணியம் ) பாட்டியும் (லக்ஷ்மி ) அவன் வேலை வெட்டி இல்லாமல் சுத்துவதைப் பார்த்து வருத்தப்படுகிறார்கள் .
எனவே அர்ஜுன் தன் நண்பன் கர்ணாவுடன் சேர்ந்து ஒரு புதிய தொழிலை ஆரம்பிக்கிறான் . அதாவது ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம் நேரில் சொல்ல விரும்பாத விஷயங்களை இவர்களிடம் சொன்னால் இவர்கள் போய் சொல்வார்கள். அதற்கு சர்வீஸ் சார்ஜ் பெறுவார்கள். காதலியை கழட்டி விட விரும்பும் காதலன், வேலை தருவதாக சொல்லி விட்டு பிறகு மறுக்கும் நிறுவனங்கள்.. இப்படி எல்லோரும் இவர்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள் .
இந்நிலையில் இவர்கள் சொன்ன ஒரு தகவல் காரணமாக அஞ்சலியின் அக்காவின் திருமணம் அநியாயமாக நின்று போகிறது . அர்ஜுனுக்கு அஞ்சலி காதல் கூடி வரும் வேளையில் அவளுக்கு இந்த உண்மை தெரிய வர, அவள் அர்ஜுனை வெறுக்கிறாள். தவிர, இவர்கள் போய் சொல்லும் தவறான தகவல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரும் இவர்களுக்கே சாபம் விடுகிறார்கள் .
இந்த சிக்கல்களில் இருந்து நண்பர்கள் எப்படி மீண்டார்கள்? அஞ்சலி அர்ஜுனை ஏற்றுக் கொண்டாளா? என்பதே இந்தப் படம் .
வேலைப்,பணியால் ஏற்பட்ட உடல் நலக் குறைபாட்டால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் இயக்குனர் பாக்யராஜிடம் நாயகன் தன் கதையை ஒரு சினிமாக் கதை போல சொல்ல , அதில் இருந்து படம் துவங்கும் விதம் ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது .
அர்ஜுன் ஆர்வமாக நடித்துள்ளார் . வெங்கடேஷ் ஹரி நாதன் சில சந்தர்ப்ப்பங்களில் சிரிக்க வைக்கிறார் . அதிதி செல்லப்பா எப்போதும் புன்னகையில் இருக்கிறார் .
சில காட்சிகளில் இயக்குனர் மதுமிதாவும் வசன கர்த்தா ராம்போவும் சிரிக்க வைக்கிறார்கள்
சீனிவாச வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஒகே ரகம்.
கிளைமாக்சில் சின்ன சின்ன திருப்பங்களுக்கு முயன்று இருக்கிறார்கள்
மூணே மூணு வார்த்தை …நிறைய சிரத்தை தேவை