ஆர்ட்டின் பிரேம்ஸ் மற்றும் டி ஆர் எஸ் குழுமத்தின் டி ஆர் எஸ் ஸ்டுடியோ சார்பில் டி.ஆர்.எஸ். அன்பு மற்றும் வி .சுரேஷ் நாராயண் இருவரும் தயாரிக்க, ‘பாலை’ படத்தில் நடித்த சுனில் குமார், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் இணைந்து நடிக்க,
ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணனிடம் பணி புரிந்த சுகன் கார்த்தி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் மூன்றாம் உலகப் போர்.
இது போரா இல்லை கலகமா? பார்க்கலாம்
1962 இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த போரில் இந்தியாவின் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட அக்ஷய் சின் பகுதியை இந்தியாவிடம் இருந்து சீனா ஆக்கிரமித்துக் கொண்டது . அன்றைய போர்க் கருவிகள் சண்டை முறைகள் வேறு . இன்று எல்லாமே வளர்ந்து விட்டது .
இந்த நிலையில் வரும் 2025 வாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்தால் நவீன கொடூர ஆயுதங்கள் மூலம் நடக்கும் அந்த போரின் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பும் படம் இது
படத்தின் கதைப்படி….
2025 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூள்கிறது .விஞ்ஞான வளர்ச்சியில் உருவான புதிய ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு இரண்டு நாடுகளும் மோதுகின்றன . போரில் வெல்லும் இந்தியா, சீனாவின் சில பகுதிகளைக் கைப்பற்றுகிறது .
ஆனால் போரின் முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் சரவணன் (சுனில் குமார் ) சீனப் படையிடம் சிக்கிக் கொள்கிறார். அவரை சுட்டுக் கொல்லாமல் வதை முகாமுக்குக் கொண்டு போகிறார்கள்
காரணம் ?
போர் சமயததில் சீனப் படையைச் சேர்ந்த நூறு பேரை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கிறான் சீன ராணுவ உயர் அதிகாரி ஒருவன் (வில்சன் என் ஜி ) .
அந்த நூறு பேர்க் குழுவில் உள்ள ஒவ்வொருவனி டமும் தலா பத்து லட்சம் பேரைக் கொல்லக் கூடிய உயிர் வேதியியல் ஆயுத சிப் ஒன்று உள்ளது . அந்த நூறு பேரில் மேற்படி சீன ராணுவ உயர் அதிகாரியின் மகனும் ஒருவன் .
போரில் சீனா தோற்ற பிறகு அந்த நூறு பேரின் கதி என்ன என்றே தெரியாத நிலையில், அது பற்றி விசாரிக்கவே சரவணனை அடைத்து வைத்து , விதம் விதமான ராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகிறான் சீன அதிகாரி .
போர் துவங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்து மதிவதனியை (அகிலா கிஷோர்) திருமணம் செய்து கொண்டு ஒரு மாதம் மட்டும் மனைவியோடு வாழ்ந்து விட்டு போர்க்களம் போனவர் மேஜர் சரவணன்.
அவர் இறந்து விட்டதாகத் தகவல் வந்து விட்ட நிலையில் மதிவதனி , சரவணின் பெற்றோர் , மதிவதனியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீராத சோகத்தில் மூழ்குகின்றனர் . மதிவதனி வயிற்றில் சரவணனின் உயிர் பூக்க ஆரம்பிக்கிறது.
சீன ராணுவத்தின் சித்திரவதைகள் ஒரு புறம் … மனைவி , அப்பா , அம்மா ஆகியோரை மீண்டும் காண்போமா என்ற துடிப்பு ஒருபுறம் என்று மிகுந்த கொடுமைகளுக்கு ஆளாகிறார் சரவணன் .
அதே நேரம் நூறு சீனப் படையினர் பற்றிய விசாரணைக்கு எந்தப் பதிலும் தராமல் இரும்புறுதியாக இருக்கிறார் . ஒரு நிலையில் அந்த நூறு சீனப் படையினரின் கதி என்ன ஆனது என்பது சீன ராணுவ அதிகாரிக்கு தெரிய வருகிறது .
கொந்தளிக்கும் சீன அதிகாரி சரவணனை உயிர் வேதியியல் துப்பாக்கிக் குண்டால் சுட்டு கொல்லத் திட்டமிடுவதோடு தமிழ் நாட்டில் இருக்கும் சரவணனின் குடும்பத்தை அழிக்கவும் திட்டமிடுகிறான் .
அதுமட்டுமின்றி ….
அந்நிய நாடுகளுடன் இந்தியா போடும் ஒரு வணிக ஒப்பந்தத்தின் பின்னணியில் சீனாவின் கையை ஓங்க வைத்து ..
சீனாவில் தயாரிக்கப்படும் தரமற்ற ஆபத்தான விஷம் தோய்ந்த பொருட்களை அந்த ஒப்பந்தத்தின் வழியே இந்தியாவுக்கு அனுப்பி…..
மக்களுக்கு உயிராபத்து , நோய்கள் , ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட வைப்பதோடு , அதன் வழியே இந்தியாவின் பொருளாதாரத்தையும் சின்னா பின்னமாக்க சீனா திட்டமிடுவதும் மேஜர் சரவணனுக்குத் தெரிய வருகிறது.
சீனாவில் எங்கோ ஒரு கடலுக்குள் இருக்கும் நீர் மூழ்கிக் கப்பலில் உள்ள சித்திரவதைக் கூடத்தில் பயோ கெமிக்கல் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இன்னும் பதினைந்து நிமிடத்தில் வெடித்துச் சாகப் போகும் நிலையில் ,
அணு அணுவாகத் துடிக்கும் தனி மனிதனான மேஜர் சரவணனால் …..
தன்னை , தன் குடும்பத்தை காப்பாற்ற முடிந்ததா ? தாய் நாட்டுக்கு எதிரான சதியை முறியடிக்க முடிந்ததா என்பதே இந்த மூன்றாம் உலகப் போர் படம்
1960 களின் இறுதியில் கவியரசு கண்ணதாசன் எழுதித் தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க , தாதா மிராசியின் இயக்கத்தில் வெளி வந்த ரத்தத் திலகம் படம்,
அன்றைய இந்திய சீனப் போரின் பின்னணியில் அமைந்த– காதலை விட தேசப் பற்றே முக்கியம் என்று சொன்னபடம் அது
அதற்குப் பிறகு தமிழில் போர்ப் படம் என்று பேர் சொல்லக் கூட ஒரு படம் வெளிவரவில்லை .
அரை நூற்றாண்டு கடந்த நிலையில் அதே இந்திய சீனப் போரை அடிப்படையாக வைத்து,
அதுவும் 2025 இல் நடக்கும் போர் என்ற வகையில் எதிர்காலப் படமாக ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் இந்தப் படக் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
அதுவும் இந்த வருங்காலப் போரில் சீனாவை இந்தியா வெல்வதோடு , சீனாவின் நிலப்பகுதிகளை இந்தியா கைப்பற்றியது என்று சொன்ன தன்னம்பிக்கைக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட் .
வருங்கால நவீன ஆயுதங்களோடு இந்தியாவும் சீனாவும் மோதிக் கொள்ளும் அந்த ஆரம்பப் போர்க்களக் காட்சி , கம்பியூட்டர் கிராபிக்ஸ் மற்றும் கலை இயக்கத்தால் வாய் பிளந்து பார்க்க வைக்கிறது . சிம்ப்ளி சூப்பர்ப் !
படம் முழுக்கவே கம்பியூட்டர் கிராபிக்ஸ் பிரம்மாதப் பணி செய்து இருக்கிறது . மலைகளைக் கிழிக்கும் விமானங்கள் கடலைப் பிளந்து பாயும் நீர்மூழ்கிக் கப்பல் எல்லாம் பாராட்டுக்குரியவை .
சீன ராணுவ உயர் அதிகாரி, தான் சரளமாகத் தமிழ் பேசுவதற்குச் சொல்லும் காரணத்தை கேட்டால் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல….தமிழ் பேசவே தெரியாத அனைத்து இந்திய மக்களுமே பெருமைப் படலாம் .
படவேண்டும் . அதுதான் நிஜமான இந்திய ஒருமைப்பாடு !
அன்பே அன்பே பாடல் காட்சியை படமாக்கிய விதம் இயக்குனரின் டைரக்டோரியல் டச் மற்றும் ரசனைக்கு உதாரணம் .
‘வரலாற்றை உற்று நோக்கினால் இந்தியா எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமிக்க நினைத்ததே இல்லை என்பது புரியும் ”
”இந்தியாவின் ஒரு முகம் காந்தி என்றால் இன்னொரு முகம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ”
‘இனி இந்தியாவும் சீனாவும் போரில் இறங்கினால் போரின் முடிவை தெரிந்து கொள்ள ஒருவர் கூட உயிரோடு இருக்க மாட்டார்கள் ”
— என்பது போன்ற வசனங்கள் பாராட்டுக்குரியவை
சித்திரவதை முகாம்களின் ஈர இருள் , குடும்பக் காட்சிகளில் வண்ணமயமான வெளிச்சம் என்று தேவாவின் ஒளிப்பதிவு , சூழல் மாறுபாடுகளை சிறப்பாக சித்தரிக்கிறது .
வேத் சங்கரின் பின்னணி இசை காட்சிகளுக்கான வழக்கமான பாணியில் இருந்து வேறு பட்டு வலு சேர்க்கிறது . இந்தியா நாடே பாடல் உணர்ச்சிக் கொந்தளிப்பு . அன்பே அன்பே பாடல் உணர்வுப் படையல்.
நீர் மூழ்கிக் கப்பலின் உள்புற அரங்கம் சிறப்பு . படத்தில் சீன அதிகாரி மற்றும் மதிவதனி ஆகியோர் பயன்படுத்தும் வருங்கால செல்போன் மாடல்கள் அருமை .
வருங்கால இந்தியாவில் லஞ்ச ஊழல் அயோக்கியத் தனத்தை களையும் ஒரே வலிமை மீடியாவுக்கு மட்டுமே இருக்கும் என்ற ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள் .
மேஜர் சரவணனாக நடித்து இருக்கும் சுனில் குமார் மிகவும் உழைப்பக் கொட்டி நடித்துள்ளார் . அதுவும் கடைசி பதினைந்து நிமிடத்தில் ஒற்றை ஆளாக படத்தைத் தாங்கி , மனம் கனக்கும் உணர்வை தருகிறார் . வாழ்த்துகள் சுனில் குமார் .
அகிலா கிஷோர் அழகாக இருக்கிறார் . கடைசி காட்சிகளில் நடிக்கவும் வாய்ப்பு .
சீன அதிகாரியாக வரும் வில்சன் என் ஜி நிஜமான சீனர் என்கிற விசயமே, நமக்கு நம்பகத்தன்மையை எளிதாக ஏற்படுத்தி விடுகிறது .
வசனமாக மட்டும் பேசப்படும் பல விசயங்களை விஷுவலாக சொல்லி இருக்கலாம் …
மேஜர் சரவணனின் குடும்பத்தை கிராமத்துப் பின்னணியில் காட்டி அந்தத் திருமணம் , உறவுகளின் போர்க்கால சோகம் என்று வெயிட் ஏற்றி இருக்கலாம் ,
வில்சனை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக நடிக்க வைத்து இருக்கலாம் ; இன்னும் இயல்பாகவே தமிழ் பேச வைத்து இருக்கலாம்.
மதிவதனியைக் கொல்ல சீன அரசாங்கததுக்கு சில லோக்கல் அரசியல்வாதிகளே உதவுகிறார்கள் என்று காட்சி வைத்து பட்டையைக் கிளப்பி இருக்கலாம் . இப்படி இன்னும் சில விசயங்களை எதிர்பார்க்க வைப்பதை மறுப்பதற்கில்லை
எனினும் ,
நமது அயோக்கிய அரசியல்வாதிகள் மற்றும் ஊழலுக்கு சோரம் போகும் அதிகார வர்க்கத்தின் உதவியோடு பல ஆபத்தான சீனத் தயாரிப்புகள் இந்தியாவுக்குள் வந்து கொண்டு இருப்பதை சமூக அக்கறையோடு பேசுகிறது இந்தப் படம்
இனியும் அவற்றை நாம் கட்டுபடுத்தத் தவறினால் …..