இந்தியா சீனா இடையே ”மூன்றாம் உலகப் போர் ”

moonraam 8

ஆர்ட்டின் பிரேம்ஸ் சார்பில் டி.ஆர்.எஸ். அன்பு மற்றும் வி .சுரேஷ் நாராயண் இருவரும் தயாரிக்க, ‘பாலை’ படத்தில் நடித்த சுனில் குமார், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் இணைந்து நடிக்க,

ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணனிடம் பணி புரிந்த சுகன் கார்த்தி என்பவர் எழுதி இயக்கும் படம் மூன்றாம் உலகப் போர்.

மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று கூறப்படும் நிலையில், தண்ணீர் விசயத்தைத் தவிர்த்து விட்டு, 2025 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வந்தால் அது எப்படி இருக்கும் என்பதை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

moonraam 2

படத்தின் முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் போட்டுக் காட்டினார்கள். ஒரு காதல் நினைவுப் பாடல், மிக ரசனையோடு எடுக்கப்பட்டு இருந்தது . சித்திரவதை அறையில் நாயகனுக்கும் சீன அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சண்டையை முன் நிறுத்திய ஒரு பாடல் உணர்வுப் பூர்வமாக இருந்தது .

முன்னோட்டம் மிக சிறப்பாக இருந்தது . சண்டைக் காட்சிகளை ஒரு நிஜப் போர்க் களத்திலேயே எடுத்தார்களோ என்று எண்ணும் அளவுக்கு மிக சிறப்பாக கணிப்பொறி வரைகலையில் உருவாக்கப்பட்டு இருந்தது .

” படம் ஷூட்டிங் முடித்து ஒரு வருடம் ஆகி விட்டது . அதன் இந்த சிஜி பணி முடியவே ஒரு வருடம் ஆனது “என்கிறது படக் குழு .

moonram 1

‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மட்டும் நடக்கும் போரை எப்படி உலகப் போர் என்று சொல்ல முடியும்?” என்ற கேள்விக்கு ,

” 2025 இல் இந்தியாவும் சீனாவும் போரில் இறங்கினால் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட சுய லாபக் காரணங்களுக்காகவாவது எதாவது ஒரு பக்கம் உலக நாடுகள் பலவும் இணையும் . அப்போது தானாகவே அது உலகப் போராக மாறும் ” என்கிறார் இயக்குனர் , மிக அழகாக!

தொடர்ந்து ” படத்தின் ஹீரோ பெயர் மேஜர் சரவணன். கார்கில் போரில் உயிர் நீத்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணின் நினைவாக அந்தப் பெயரை வைத்தோம் .

2025 இல் சீனா பயன்படுத்தும் ஆயுதங்கள் எப்படி இருக்கும் என்பதை கூகிளில் கண்டு எடுத்து அதே போல ஆயுதங்களை வடிவமைத்துப் பயன்படுத்தினோம் . (ரிமோட் மூலம் ஹார்ட் அட்டாக்கை கொண்டு வரும்படியான ஒரு ஆயுதத்தை முன்னோட்டத்தில் காட்டி இருக்கிறார்கள்)

moonraam 3

ஹீரோ சுனிலின் உயரத்துக்குப் பொருத்தமான நாயகி கிடைக்க நாள் ஆனது . அப்புறம் அகிலா கிஷோர் ஒப்பந்தமாகி மிக சிறப்பாக நடித்து இருக்கிறார். கதையின் முக்கால்வாசி சீனாவில்தான் நடக்கிறது படத்தின் வில்லனாக நடிக்க சிங்கப்பூரில் வாழும் வில்சன் என்ற நிஜ சீனரையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தோம் .

2025 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சண்டை வந்தால் சண்டையின் முடிவைத் தெரிந்து கொள்ள ஒருவர் கூட உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பதுதான் படம் சொல்ல வரும் விஷயம் ” என்கிறார் .

சென்சாரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது என்று கேட்டால் ” சீனப் போரில் இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதிகளை சீனா அபகரித்துக் கொண்டது அல்லவா?

அதற்கு எதிராக 2025 இல் சீனாவின் சில பகுதிகள் இந்தியா வசம் இருப்பது போல இந்திய மேப் உருவாக்கி படத்தில் வைத்து இருந்தோம் . ஆனால் அது வேண்டாம் என்று சொல்லி காட்சியை நீக்கினார்கள் ” என்றார் .

moonraam 9

உடனே நான் இயக்குனரிடம் ” இன்னும் அருணாச்சலப் பிரதேசத்தை சீனா , தனது நாட்டின் ஒரு பகுதியாகவே மேப்பில் காட்டுகிறது . அப்படி இருக்க , நாம் ‘ சினிமாவுக்காக சீனாவின் சில பகுதிகள் இந்தியா வசம் இருப்பது போல இந்திய மேப் உருவாக்கி காட்சி வைப்பதில் தவறு என்ன ?’என்று கேட்க வேண்டியதுதானே ?” என்றேன் .

”நாங்கள் கேட்டோம் . ஆனால் அதற்கு அவர்கள் “பரவாயில்லை . யார் மண்ணையும் அபகரிக்கமாட்டோம் . சொந்த மண்ணையும் விட மாட்டோம் ” என்பதுதான் நமது நாட்டின் பாலிசி . எனவே அது வேண்டாம் ” என்றார்கள் .

இது போன்ற சில காட்சிகளை நீக்கியபோது ‘ முதன் முதலாக எங்களுக்கு மிகவும் பிடித்த காட்சிகளை நீக்க வேண்டிய உணர்வை இந்தப் படம் கொடுத்துள்ளது’ என்று வருத்ததோடு பாராட்டினார்கள் ” என்றார் .

munru

”2025 இல் இந்தியாவோடு பாகிஸ்தான் இணைந்து விட்டது என்று ஒரு கற்பனையை சொல்லி இருக்கலாமே?” என்றேன் . ”அப்படி செய்யவில்லை . காரணம் நமது முதல் எதிரி நாடு என்றால் அது சீனாதான் . எனவே இந்த அளவில் மட்டும் கதையை எடுத்துக் கொண்டோம் ” என்கிறார் .

 

நாயகன் சுனில் குமார் ” பாலை படம் எனக்கு ஒரு நல்ல அறிமுகம் கொடுத்தது . அதன் பிறகு இயக்குனர் சுகன் கார்த்திகயை சந்தித்தபோது இந்தப் படம் பற்றிக் கூறினார் . சந்தோஷமாக ஒப்புக் கொண்டு நடித்தேன்” என்கிறார் .

அழகு குட்டி செல்லம் படத்தை தன் இசை மூலம் அற்புதமான அனுபவமாக மாற்றி விட்டு, இப்போது இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கும் வேத் சங்கர் ” பொதுவாக போர்ப் படங்கள் என்றால் அதற்கு என்று வழக்கமான இசை பேட்டர்ன் என்று ஒன்றுக்கு பழகி இருக்கிறோம். அதில் இருந்து வேறுபட்டு இசை அமைத்து இருக்கிறேன் .

moonraam 99குறிப்பாக ஒரு சோகக் காட்சி என்றால் வயலினை ஊற்றி நிரப்புவார்கள். அதை எப்படி வேறு மாதிரி இசையால் சொல்லலாம் என்று முயன்று உள்ளேன் ” என்றார் .

 

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் நாராயண் ” படத்தின் ஒரு காட்சியில் நீர் மூழ்கிக் கப்பல் தேவைப்பட்டது . விசாகப்பட்டினத்தில் ஒரு கப்பலை ஒப்பந்தம் செய்து இருந்தோம்.

ஷூட்டிங்குக்கு இரண்டு நாட்கள் முன்பு , ‘இனி சினிமாவுக்கு எல்லாம் அனுமதி இல்லை என முடிவாகி விட்டது ‘ என்று சொல்லி விட்டார்கள் . டைரக்டர் மிகவும் சோர்ந்து விட்டார் .

நானும் அன்புவும் உடனே திட்டமிட்டு இயக்குனருக்கே சொல்லாமல் நீர்மூழ்கிக் கப்பலின் உள்புறத்தை செட் போட்டோம் . அப்புறம் டைரகடரைக் கொண்டு போய் காட்டினோம் . அவர் மிகுந்த உற்சாகமாகி படப்பிடிப்பை நடத்தினார் . இப்படி நாங்களும் ஓர் உதவி இயக்குனர் போலவே செயல்பட்டோம் ” என்றார் .

moonraam 5

தயாரிப்பாளர் டி.ஆர். எஸ் . அன்பு ” இப்படி ஒரு கதை கிடைத்ததால்தான் நாங்கள் படம் தயாரிக்கவே வந்தோம். இல்லாவிட்டால் வந்திருக்கவே மாட்டோம் . சுகன் கார்த்தி மிக சிறப்பாக இயக்கியுள்ளார் . வேத் சங்கர் மிக பிரம்மாதமான பின்னணி இசை கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தை தயாரித்தற்காக மிகவும் பெருமைப் படுகிறோம் . படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் தானும் ஓர் இந்தியன் என்பதற்காகப் பெருமைப் படுவார்கள் ” என்கிறார் .

வரும் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது மூன்றாம் உலகப் போர்.

மிக முக்கியமான கடைசி வரிச் செய்தி ; படத்தில் கதாநாயகியின் பெயர் மதிவதனி.

ஆக, தமிழினத்தின் வீர சரித்திரமும் படத்தில் இருக்கிறது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →