ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் ஒன்பது பத்து கோடி ரூபாய் போட்டு படத்தைத் தயாரிப்பதை விட.. நூற்றுக்கணக்கான நபர்கள் ஆளுக்கு சில லட்சம் போட்டு ஒரு படம் தயாரிக்க தேவையான தொகையை திரட்டி ஒரு படத்தைத் தயாரிக்கும் முறைதான் Crowd Funding .
கன்னடத்தில் வெளியான ‘லூசியா’ திரைப்படமும், ஹிந்தியில் வெளியான ‘முனீர்’ திரைப்படமும், அண்மையில் தமிழில் வெளியான ‘குறையொன்றுமில்லை’ திரைப்படமும் இது போன்ற Crowd Funding முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவைதான்

இந்தப் புதிய முறையை தங்கள் பாணியில் திட்டமிட்டு movie funding என்ற பெயரை வைத்து ஒரு நிறுவனத்தை உருவாக்கி இருக்கும் தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களான முத்துராமலிங்கனும், ஜெய்லானியும் அதன் மூலம் தொடர்ந்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜெய்லானி ஏற்கெனவே ‘கேள்விக்குறி’ என்ற படத்தையும் முத்துராமலிங்கன் ‘சிநேகாவின் காதலர்கள்’ திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்கள் . மேற்படி ‘மூவி பண்டிங் நெட்வொர்க்’ மூலமாக திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் பணம் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அவர்களையும் பங்குதாரர்களாக்கி படம் தயாரித்து, இயக்கவிருக்கிறார்கள்
இதன் முதல் கட்டமாக ஜெய்லானி ‘சவுண்ட் கேமிரா ஆக்சன்’ என்னும் படத்தையும், முத்துராமலிங்கன் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ என்னும் படத்தையும் இயக்குகிறார்கள் .சவுண்ட் கேமரா ஆக்ஷன் என்பது ஜெய்லானிக்கு சொந்தமான இணைய இதழ் நிறுவனம் . ரூப சித்திர மாமரக்கிளியே என்பது சங்கரதாஸ் சுவாமிகளால் எழுதப்பட்ட ஒரு பழைய நாடகப் பாடலின் வரி . நவராத்திரி படத்தில் நடிகர் திலகம் இந்த வரியை நடிகையர் திலகத்தை பார்த்து பாடும் அழகே தனி

இந்த இரண்டு படம் தவிர தொடர்ந்து படம் எடுக்கும் எண்ணத்தில் இருக்கும்போது நல்ல கதைகள் வேண்டாமா?
சவுண்ட் கேமரா ஆக்ஷன் நிறுவனம் மூலம் ஒரு திரைக்கதைப் போட்டி நடத்தப்பட்டு, 150 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் முழு நீள திரைப்படத்துக்கான 5 திரைக்கதைகள் மற்றும் குறும்படத்துக்கான 5 திரைக்கதைகள் சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
சிறந்த திரைக்கதையை எழுதிய அந்தப் படைப்பாளிகளுக்கு தயாரிப்பாளர் சி.வி. குமாரும் இயக்குனர் மீரா கதிரவனும் சான்றிதழ்களை வழங்கினர். இவற்றை படமாக்குவதற்கான முயற்சிகளிலும் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் நிறுவனம் வரும் காலத்தில்உதவி செய்யுமாம்.
இயக்குநர் மீரா கதிரவன் “இப்போது வெற்றி பெற்றவர்களின் கதைகளில் ஒன்றை நிச்சயம் தான் தனது அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வேன்…” என்று கூறியது இந்த நிகழ்ச்சியின் வெற்றி

இயக்குநர் ஜெய்லானி பேசுகையில், “தமிழில் தயாரிப்பாளர்கள் எவ்வித முன் அனுபவமும் இல்லாமல் படம் தயாரிக்க வருவதால்தான் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. ஒவ்வொரு துறைக்கும் அத்துறையைப் பற்றி முன் உதாரணத்துடன் சொல்லிக் கொடுக்க ஆட்கள் உண்டு. ஆனால் சினிமாவில் அப்படி எந்த செட்டப்பும் இல்லை.
படத்தயாரிப்பை முறைப்படுத்துவது எப்படி என்று இங்கே யாரும் யோசிக்கவே இல்லை. அதை நாங்கள் செய்ய இருக்கிறோம் . எங்களை நம்பி பணம் முதலீடு செய்பவர்களுடன் முறைப்படியான, நியாயமான ஒப்பந்தம் செய்து கொண்டு நாங்கள் படத்தை உருவாக்க இருக்கிறோம். நாங்க எடுக்கற படம் கட்டாயம் ஓடும்னு எல்லாம் சொல்லல . ஆனா முறைப்படி நியாயமா இதை செய்வோம். அந்த முறையான உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்த எங்களது ‘மூவி பண்டிங் நெட்வொர்க்’ திட்டம் வெற்றி பெற்றால், பலரும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படுவார்கள்..” என்றார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது, “சினிமால இயக்குநர், தயாரிப்பாளர் இவர்களையும் தாண்டி டிஸ்டிரிபியூட்டர், தியேட்டர்காரர்களும் இருக்கிறார்கள். உண்மையாக சினிமா துறையை கன்ட்ரோல் செய்றது அவங்கதான்.

தமிழ்நாட்டில் முதல் ரவுண்டில் திரையிடுவதற்கு ஏற்ற 800 தியேட்டர்களில்கூட நமக்கு லாபம் தராத தியேட்டர்களும் இருக்கின்றன. இந்த மாதிரியான தியேட்டர்களில் ஒவ்வொரு தியேட்டரிலும் புரமோஷன் செலவுகளையும் தாண்டி, ‘க்யூப்’ போன்ற வேலைகளுக்காக 25,000 ரூபாயாவது தனியாக ஒதுக்க வேண்டும். என் தயாரிப்பில் வெளியான ‘பீட்ஸா’ தமிழகம் முழுக்க நன்கு ஓடினாலும், 35 தியேட்டர்களில் இந்த 25,000 ரூபாய் கூட வசூலாகவில்லை. அப்போ அது எனக்கொரு நஷ்டம்தானே..? சூதுகவ்வும் படத்திலும் அதே நிலைதான் .
நானும் தொடர்ச்சியா படம் எடுக்கிறேன்னு சொன்னாலும் முழுக்க, முழுக்க என்னுடைய சொந்தப் பணத்துல எடுக்கல.. எனக்கு சில பேர் படம் எடுக்க பணம் கொடுக்குறாங்க. நான் அதை செலவழிச்சு படம் எடுத்திட்டு.. அவங்களுக்கு திருப்பிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். திருப்பிக் கொடுத்தால்தானே நாளைக்கு அவங்ககிட்ட வாங்க முடியும்..? ஸோ.. இது மாதிரி மூவி பண்டிங்லேயும் பணத்தைத் திருப்பிக் கொடுக்குற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்திட்டா நிறைய பேர் இது மாதிரி சினிமா துறைல பணத்தை முதலீடு செய்ய முன் வருவார்கள். “என்றார்
சரியான விஷயம்
‘மூவி ஃபண்டிங் நெர்வொர்க்’ பற்றிய விவரங்கள் அறிய www.moviefunding.in என்ற தளத்தை தொடர்பு கொள்ளலாம் .