ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜ தயாரிக்க, சிவா கார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கி இருக்கும் படம் மிஸ்டர் லோக்கல் . தரை லோக்கலா ? தரைமட்ட லோக்கலா ? பேசுவோம் .
ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் சேவைப் பிரிவில் பணியாற்றுகிற — அப்பா இல்லாத — அம்மா ( ராதிகா சரத்குமார்) மற்றும் தங்கையுடன் ( ஹரிஜா) வாழ்கிற இளைஞன் மனோகர் ( சிவ கார்த்திகேயன் )
தொலைக்காட்சி சீரியல் ரசிகையான அம்மாவுக்கு ஒரு சீரியல் நடிகையுடனான சந்திப்பை பிறந்த நாள் பரிசாக தர விரும்பும் மனோகர் அதற்காக அம்மாவை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் போகும் வழியில் கீர்த்தனா வாசுதேவன் என்ற பெண் (நயன்தாரா ) , காரில் வந்து மோதுகிறாள் .

அவரை கண்டபடி திட்டிவிட்டு , சீரியல் நடிகையை பார்க்கப் போனால் , அந்த சீரியலின் தயாரிப்பாளரே அந்த காரில் வந்து இடித்த கீர்த்தனாதான். ஆச்சா ?
மிடில் கிளாஸ் மக்களை மட்டமாக கருதும் பணத் திமிரில் செயல்படும் கீர்த்தனா , அதன் உச்சமாக எந்த நடிகையை பார்க்க மனோகர் போனானோ அந்த நடிகையையே சீரியலில் இருந்து தூக்குகிறாள் .
சீரியல் நடிகை கண்ணைக் கசக்க, அவளுக்கு பரிந்து பேச மனோகர் போக , அவனுக்கும் கீர்த்தனாவுக்கும் சண்டை முற்றுகிறது .
சீரியல் நடிகை வேறு சீரியலில் அதிக சம்பளத்தில் பிசி ஆன பின்னரும் , இந்த சண்டை தொடர்கிறது .

ஒரு நிலையில் மனோகருக்கு கீர்த்தனா மீது காதலும் வருகிறது .
மனோகரை பாரிஸ் நகருக்கு அழைத்துப் போகும் கீர்த்தனா , தான் காதலை ஏற்றது போல நடித்து வலை விரித்ததை சொல்ல, மனோகர் அதிர, கீர்த்தனா கேவலமாக பேச , மனோகர் அவளை அடிக்க, மனோகர் பாரிஸ் ஜெயிலில் அடைக்கப்படுகிறான்
மனோகரின் காதல் என்ன ஆனது என்பதே மிஸ்டர் லோக்கல் .
பணக்காரப் பெண்ணின் ஆணவம் அடக்கி , அல்லது அடங்கி ஹீரோ காதல் மலரச் செய்து சுபமாகும் பெரிய இடத்துப் பெண் , குமரிக் கோட்டம் துவங்கி, மன்னன் வரையிலான கதைக் கருவில் வழமையான இன்னொரு படம் .

சிவ கார்த்திகேயன் , நயன்தாரா இருக்க , இதை விட வேறு என்ன வேணும் என்ற எண்ணத்தில் எடுக்கப் பட்டிருக்கிறது படம் .
வழக்கமான சிவா . முன்பை விட பெட்டராக நடனம் ஆடுகிறார்
இன்னும் குறையாத நயன் மேஜிக் .
கனவில் காதலிப்பவரை கண்டு பிடிக்கும் டெக்னிக், சாதாரண வார்த்தையை சாதரணமாகவே சொல்லி ஆனால் கேட்பவரை தவறாக உணர வைத்து , சிவாவும் நயனும் ஒருவரை ஒருவர் மடக்குவது என்று சில சுவையான காட்சிகளும் படத்தில் உண்டு .
சதீஷ், ரோபோ ஓரிரு இடங்களில் சிரிப்பு தூறல் போடுகிறார்கள் .

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அழகு . ஹிப் ஹாப் ஆதியின் இசை ஜஸ்ட் ஒகே .
கதை துவங்கும் விதம் , அந்த முதல் டுவிஸ்ட் வரை இருக்கும் சுவாரசியம் மேலும் தொடரும்படி திரைக்கதை செய்து இருக்கலாம் . ஆனால் செய்யவில்லை .
இன்னும் நல்ல திரைக்கதை . வசனம் தேவைப்படும் படம்.