சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் தயாரிக்க, கிஷன் தாஸ், மீதான் ரகுநாத், ஹரீஷ் , அம்ரிதா மேண்டரின், ஷரன் குமார், ராகுல் கண்ணன், மஞ்சுநாத், வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கவுதம் ராஜ், நரேன், ஹரிணி ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில்,
இசை அமைப்பாளர் தர்புக சிவா எழுதி இசை அமைத்து இயக்கி, zee 5 தளத்தில் காணக் கிடைக்கும் படம் முதல் நீ முடிவும் நீ .
தொண்ணூறுகளின் இறுதியில் நகர்ப்புறப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் , அவர்களின் நட்பு, காதல், கிரஷ், பகை , மோதல், குறும்பு, டீன் ஏஜ் செயல்பாடுகள், காதல் தோல்வி., பக்குவமின்மையால் ஏற்படும் புரிதலின்மை இவற்றை சொல்லும் முதல் பாதிப் படம்,

இரண்டாம் பாதியில் எல்லோரும் படித்து முடித்து தங்கள் கேரியரைத் தேர்ந்தெடுத்து, அதில் ஜெயித்து , தோற்று, போராடும் நிலையில் சந்திக்கிறார்கள் . தொடரும் தொடர்ச்சிகளும் தொடராத தொடர்ச்சிகளும் அதன் விளைவுகளும் கொஞ்சம் ஃபாண்டசியுமே இந்தப் படம் .
இதன் முக்கிய திரைக்கதைப் பாதையாக மியூசிக் டைரக்டராக ஆக ஆசைப்படும் ஒரு மாணவன், அவனைக் காதலிக்கும் ஒரு மாணவி, அவர்களுக்கும் ஏற்படும் புரிதலின்மை அதன் விளைவுகள் சொல்லப்படுகின்றன
.நகைச் சுவையாக இலகுவாக போகும் அந்தக் காட்சிகள், இரண்டாம் பகுதியில் அழுத்தமும் கனமும் பெரும் வகையில் வடிவமைவது சிறப்பு . அதன் மூலம் பார்க்கும் ஒவ்வொருவரின் பள்ளி நாட்களையும் நினைவுக்குக் கொண்டு வருவது இந்தப் படத்தின் வெற்றி

அன்றைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மென்மையாக சின்னச் சின்ன காட்சிகளின் மூலம் அழகாக கோர்த்து இருக்கிறார் இயக்குனர் தர்புக சிவா, வித்தியாசமான கேரக்டர்களை எழுதி இருப்பதோடு நடிக நடிகையரிடம் மிக சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் தர்புக சிவா.
அதோடு நெகிழ்வான பின்னணி இசையும் அழகான பாடல்களும் கொடுத்தான் இருக்கிறார் வாழ்த்துகள் தர்புக சிவா.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு முதல் பாதியின் வெளிப்புறக் காட்சிகளில் ஓவியக் கவிதையாக உயிர் பெறுகிறது. மற்ற காட்சிகளில் உணர்வுகளுக்கு கனம் சேர்க்கிறது. ஸ்ரீஜித் சாரங்கின் படத் தொகுப்பு சிறுசிறு காட்சிகளை துளித் துளியாக சேர்த்து அழகு செய்கிறது

நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர் . இரண்டாம் பாதியில் அனைவரின் ட்ரான்ஸ்ஃபார்மேஷனும் அட்டகாசம்
விநோத்தாக நடித்த கிஷன், ரேகாவாக நடித்த மீதா ரகுநாத் இருவரும் காதல் ஜோடியாக ஜொலிக்கிறார்கள் .
குறைவான காட்சிகளுமே என்றாலும் கதபாத்திரச் செறிவு மிகுந்த முகத்துடன் சிறப்பாக நடித்துள்ளார் அம்ரிதா மேண்டரின் .
ஆட்டோ கிராப், உள்ளம் கேட்குமே, சில்லுன்னு ஒரு காதல், 96 , கசட தபற படங்களை நினைவு படுத்துவது கூட இந்தப் படத்துக்குப் பிளஸ்தான் .

கிளைமாக்ஸ் பகுதி மட்டும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் . அதற்கான நிறைய வாய்ப்புகள் இருந்து மிஸ் செய்திருக்கிறார்கள் ,
முதலும் நீயே முடிவும் நீயே .. நினைவுகளின் மயிலிறகால் மனதை வருடும் அனுபவம்