ஒரு முகத்திரை படத்தில் ஐ டி கம்பெனி அதிகாரி, தீவிர காதலன் , காதல் தோல்வியாளன், மன நோயாளி , கோபக்கார இளைஞன் என்று,
பன்முகம் கொண்ட அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சுரேஷ் . மலேசியாக்காரர் .
மலேசியாவில் சுரேஷின் தந்தை பல தமிழ்ப் படங்களையும் அயல்நாட்டுப் படங்களையும் வாங்கித் திரையிடுபவர் . இந்தியாவில் வெளியாகும் பல ஆங்கிலப் படங்களையும் அவர் வெளியிடுவது உண்டு.
சுரேஷ் பல மலேசிய தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது தமிழ் நாடகங்களிலும் நடித்திருப்பவர் .
தன்னைப் பற்றி சொல்லும் சுரேஷ் ” ஒரு முகத்திரை படத்தின் தயாரிப்பில் எங்களுக்கு வேண்டிய சிலர் இருந்தார்கள். அதன் மூலமாகவும்,
தயாரிப்பில் இணைந்த யசோதா பிலிம்ஸ் மூலமாகவும் எனக்கு அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு படத்துக்கு கதாநாயகிகள் முடிவாகி ரகுமான் மன நல மருத்துவராக நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பெரிய அளவில் நன்றாக வந்தது.
அந்தப் படத்தில் வரும் மன நோயாளி பாத்திரத்துக்காக ஒன்றரை வருடம் தாடி வளர்த்தேன்.
படத்துக்கும் என் நடிப்பிற்கு நல்ல வரவேற்பை கொடுத்த மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி .
அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன்
அவற்றில் முதலாவதாக, ஒரு முகத்திரை படத்தின் தயாரிப்பில் ஒரு பங்குதாரராக இருந்த யசோதா பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் .
அஜீத் நடித்த ஆழ்வார் படத்தை இயக்கிய செல்லா இயக்குகிறார் ” என்கிறார் .
படம் பற்றிக் கூறும் இயக்குனர் செல்லா “இது ,முழுக்க முழுக்க காதல் கதை. தாயம் படத்தில் நாயகியாக நடித்த ஐரா அகர்வால் ஜோடியாக நடிக்கிறார் ” என்கிறார் .
“அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறோம் ” என்கிறார் தயாரிப்பாளர்.