ஜாய் மூவி புரடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரிக்க, வினீத் சீனிவாசன், சூரஜ் வெஞ்சிரமூடு, சுதிகோபா, தன்வி ராம் , அர்ஷா பைஜூ நடிப்பில் விமல் கோபால கிருஷ்ணனோடு சேர்ந்து எழுதி , அபினவ் சுந்தர நாயக் இயக்கி இருக்கும் படம் .
தகுதி திறமை உழைப்பு தனக்கு உரிய முன்னேற்றம் வரவில்லை என்று எண்ணி மனம் குமைகிற – மற்ற மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி தனக்கு சாதகமான வகையில் யோசிக்கிற – தனக்கு தேவை என்றால் அந்த மதிப்பீட்டை நொடியில் தலை கீழாக மாற்றிக் கொள்ளத் தயங்காத ஒரு வக்கீல் (வினீத் சீனிவாசன்) அடுத்த ஓர் ஆண்டுகளுக்குள் முன்னேறி வசதி வாய்ப்பை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத மன நிலைக்கு வருகிறார் .
நேரடி வக்கீல் தொழிலில் அவருக்கான வாய்ப்புகள் அடிபடுகிற நிலையில் , விபத்துக் காப்பீடு குறித்த ஒரு விவரம் அவரது கவனத்துக்கு வருகிறது. விபத்தில் சிக்கியவரின் பாதிப்புகளை அதிகம் காட்டி அதற்கேற்ப அரசு எந்திரத்தை வளைத்து, அதன் மூலம் காப்பீடு நிறுவனங்களில் இருந்து அதிக காப்பீடு பெற்று கொஞ்ச பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு கொடுத்து விட்டு பெரும்பகுதியை சுருட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் நபரை ( சூரஜ் வெஞ்சிரமூடு) பார்க்கிறார்.
அதே தொழில் இறங்குகிறார் . ஒரு நிலையில் தொழில் போட்டியை நிறுத்தி தனி ஆளாய் சம்பாதிக்க எண்ணி அந்த நபரின் காரில் பாம்பை விட்டு அவரது மரணத்துக்கும் காரணமாகிறார்.
போட்டியாளரே இல்லாமல் கொள்ளை அடிக்க ஒரு நிலையில் அவருக்கு எதிராக சில விஷயங்கள் நடக்கின்றன . அவற்றை முறியடித்து வென்றாரா இல்லையா? ஆம் எனில் எப்படி என்பதே படம்.
நாயகனாக வினீத் சீனிவாசன் மிக பொருத்தமான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார் . முன்னரே அந்த தொழிலை செய்து வந்து , மரணித்து மனசாட்சியாக வந்து பேசும் கதாபாத்திரத்தில் சூரஜ் வெஞ்சிரமூடு சிறப்பாக நடித்துள்ளார் . நடித்த அனைவரின் பங்களிப்பிலும் குறை இல்லை
பெரிய அப்சர்வேசனே செய்து உண்மைக்கு நெருக்கமாக காட்சிகளை அமைத்து இயக்கி இருக்கிறார் .அபினவ் சுந்தர நாயக்
படம் முழுக்க நாயகனின் மைன்ட் வாய்ஸ் வந்து கொண்டே இருந்தும் அது போர் அடிக்காதபடி ரசனையான மற்றும் காமெடியான வசனங்களால் ரசிக்க வைத்து இருக்கிறார்கள் .
விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு , சிபி மேத்யூ அலெக்ஸ், இசை யாவும் பொருத்தம் .
ஒரு அயோக்கியன் பலரை ஏமாற்றி கஷ்டப்படுத்தி துரோகம் செய்து வாழ்வில் உயர்ந்தான் . அவனுக்கு வந்த பிரச்னைகளை எல்லாம் வென்று முடித்தான் என்று சொல்லி முடிக்க ஒரு படம் எதற்கு ?
ஒரு படைப்பு என்பது நீதி நேர்மைக்கு பலம் சேர்ப்பதாக இருக்க வேண்டும் அல்லவா? அது இல்லை என்பது ஒரு பெரும் குறையே .
அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ரசிக்க வைக்கும் படம் .
