டி எஸ் பி .. மூன்றெழுத்து… மூணு சேதி

 

devi-sri-prasad-latest647x450

“இவரை ஏன் இன்னும் யாரும் ஹீரோவாக நடிக்கவைக்கவில்லை?”  என்று எல்லோரையும் கேட்க வைக்கிற இசையமைப்பாளர்- –   டி எஸ் பி  என்று செல்லமாக அழைக்கப்படும் —  தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கில் ரொம்பவே பிசியாக  இருந்தாலும்  தமிழையும்  விட்டு வைப்பதில்லை . 

சென்ற வருடம் தமிழில் வீரம்,  பிரம்மன் போன்ற படங்களின் மூலம் தனது தமிழ் சினிமா இருப்பை பதிவு செய்த தேவி ஸ்ரீ பிரசாத்… 
செய்தி ஒன்று … வெற்றி !
இந்த வருடம் விஜய் – சிம்பு தேவன் இணைப்பில் பலத்த எதிர்பார்ப்புகளோடும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உருவாகும் புலி படத்தின் இசையமைப்பாளராக புது வருட பாய்ச்சல் பாய்கிறார் . 
“எனக்கும் சிம்பு தேவன் சாருக்குமான முதல் சிட்டிங்கே அவ்ளோ இன்ட்டரஸ்டிங்கா  இருந்தது. ரொம்ப வித்தியாசமான கதை . அதனால படத்தை நீங்க பாக்கும்போதும் அதுல  நான் பண்ணி இருக்கற இசை ரொம்ப பொருத்தமா  இருக்கணும். அதே நேரம் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி நீங்க ஆல்பமா கேட்கும்போதும் எல்லாருக்கும் பிடிக்கணும் . அந்த சவாலில் உற்சாகமா வேலை பார்த்துட்டு இருக்கேன். 
படத்துல மொத்தம் அஞ்சு பாடல்கள். சிம்பு தேவன் சார் அடிப்படையில் ஒரு ஓவியர் கூட என்பதால், படத்துல வரும் அரண்மனை, உடை உள்ளிட்ட பல விஷயங்களை ஓவியமா வரைஞ்சே காமிச்சார். அது எல்லாம் இசை அமைக்க ரொம்ப ப்ளஸ் ஆ இருக்கு. . படத்துல கண்டிப்பா விஜய் பாடுவார் . கதாநாயகிகளை பாட வைக்கற ஐடியா இல்லை . ஸ்ரீதேவி மேடம் பாடுவங்கன்னா கதை அனுமதிச்சா பாட வைக்கலாம் ” என்கிறார் . 
devi sri
செய்தி இரண்டு … உற்சாகம் !
“2014 வருஷம் எனக்கு பல விதங்களில் மறக்க முடியாத வருஷம் . தமிழ்ல வீரம் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப் படங்கள் . அதை விட அமெரிக்காவில் நான் நடத்திய இசை நிகழ்ச்சி செம ஹிட் ஆனது சந்தோசம். ஹிட்னா கமர்ஷியல் ஹிட் மட்டும் இல்ல.. ரொம்ப உணர்வுப் பூர்வமான ஹிட் . 
அந்த நிகழ்ச்சியில பல பாடல்களை மேடையில் இருந்து ஆரம்பிக்காம ஆடியன்ஸ் கூட இருந்தே பாட ஆரம்பிக்கிற மாதிரி பண்ணினோம் . அதுல ஒரு பாட்டி .. வயசுல ரொம்ப பெரியவங்க. ஒவ்வொரு தமிழ் பாட்டுக்கும் டான்ஸ் ஆடி பின்னி பெடல் எடுத்துட்டாங்க. ஒரு பாட்டுக்கு நான் சேர்  மேல ஏறி நின்னு பாட அவங்களும் அவங்க சேர் மேல ஏறி நின்னு பாட ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க கிட்ட அவ்ளோ எனர்ஜி ! 
பொதுவா எல்லோரும் என் கிட்ட ‘மேடையில படும்போது நீங்க டான்ஸ் ஆடியும் கலக்கறீங்க’ன்னு  சொல்வாங்க . ஆனா அந்தப் பாட்டி என்னை பிரம்மிக்க வச்சுட்டாங்க . நிகழ்ச்சி முடியும் போது அவங்க கிட்ட ‘உங்க வயசுல உங்க மாதிரி இருக்கற வரம் வேணும்’ னு சொல்லி ஆசிர்வாதம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் .
 devi-sri-prasad
அதோடு அந்த நிகழ்ச்சியில பல பாடல்களை வெவ்வேறு வெளிநாட்டு இசைக் கருவிகளில் வாசிச்சு ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடிஞ்சது . தெலுங்கில செம ஹிட் அடிச்ச ‘நேநோக்கடின்’ படத்தோட ரீ ரிக்கார்டிங்  ரொம்ப ஃபேமஸ் . உலக கச்சேரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு படத்தோட ரீரிக்கர்டிங்கை மேடையில் வாசிச்சது அதான் முதல் தடவைன்னு சொன்னாங்க . அந்த நிகழ்ச்சி கொடுத்த வெற்றியாலேயே அதே மாதிரி தமிழ் நாட்டுல ஒரு நிகழ்ச்சியை இந்த வருஷமே பண்ணப் போறோம்.அங்கேயே நம்ம பாட்டை அப்படி ரசிச்சவங்க, நம்ம ஊருல எப்படி ரசிப்பாங்க…  ” என்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்  உற்சாகமாக .
செய்தி மூன்று … நன்றிக்கடன் !
மறைந்த இசை மேதை மாண்டலின் சீனிவாஸ் தான்,  தேவி ஸ்ரீ பிரசாத்தின் குரு என்பது பலருக்கும் தெரியாத விஷயம் . சீநிவாசிடம் மாணவனாகப்  போய்தான் ஆரம்பித்தது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை வாழ்க்கை . 
MANDOLIN_PIC__2115502f
” என் குரு., தெய்வம் எல்லாமே அவர்தான் . மறைந்த எம்ஜிஆர் , ராஜிவ் காந்தி மற்றும் முன்னால் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம் போன்றவர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பும் கொடுத்த முக்கியத்துவமும் பிரம்மாண்டமானது. எந்த ஒரு சிறு கெட்ட பழக்கமும் இல்லாத அவர் சின்ன வயசிலேயே இறந்து போனது இசை உலகத்துக்கே பெரும் இழப்பு .
 அவரோட நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு ஒரு இசை அஞ்சலி நிகழ்ச்சி நடத்த இருக்கேன் . அந்த நிகழ்ச்சியை துவங்கி வைப்பவர் கமல்ஹாசன் சார் . இப்படி ஒரு  நிகழ்ச்சி நடத்தப் போறேன்னு சொன்னதும் பல பெரிய இசைப் பிரபலங்களும் ‘ நாங்களும் இதுல கலந்துட்டு அட்லீஸ்ட் ரெண்டு நிமிஷமாவது ஏதாவது வாசிக்கணும்னு ஆசைப்படறோம் .  மாண்டலின் சீனிவாசுக்கு எங்களால் முடிந்த அஞ்சலியா அது இருக்கும் ‘ னு சொல்றதை கேட்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன் ” என்கிறார் குரு பக்தியோடு .  அநேகமாக அந்த நிகழ்ச்சியின் பெயர் THE GREAT MANdolin என்றோ THE MUSIC MANdolin என்றோ இருக்கலாம். 
போனஸ் செய்தி … திரிஷா ! திரிஷா !! திரிஷா !!!
devi-sri-prasad-at-usa-canada-tour-success-press-meet-2
ஒரு கச்சேரியில் இளையராஜா தன்னை அழைத்து தன்னோடு சேர்ந்து பாட வைத்ததை  “எனக்கு கிடைத்த பாக்கியம். அவர் பக்கத்தில் போனாலே எனக்கு கை எல்லாம் நடுங்கும் . ஆனா அன்னிக்கு ரொம்ப பெருமையா இருந்தது ”  என்று சிலிர்ப்போடு குறிப்பிடும் தேவி ஸ்ரீ பிரசாத்,   இன்னொரு பக்கம் த்ரிஷா கல்யாண சேதிக்கு முதன் முதலில் வாழ்த்து சொல்லி முதல் நன்றியையும் வாங்கிக் கொண்டார் . பிரபல நடிகைகள் பலரோடு ஒன்றாக இவர் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பார்த்து பலரும் விடும் ஏகப் பெருமூச்சில் கீ போர்டு தானாக பொறாமை டியூன் போடுகிறது. 
 “சரி.. எப்போ கல்யாணம்?” என்று கேட்டால் “ஒரு மனுஷன் எப்பவுமே சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருந்தா உங்களுக்கு எல்லாம்  பிடிக்காதே ….” என்கிறார் . 
பின்ன.. நாங்க மட்டும் இளிச்சவாயர்களா தேவி ஸ்ரீ பிரசாத் ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →