கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன் மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க….
தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் ஆகியோருடன் கங்காரு பட நாயகிகளில் ஒருவரான பிரியங்கா கதாநாயகியாக நடிக்க, பழம்பெரும் கதை வசன கர்த்தா இயக்குனர் நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்க … இவர்களுடன் மகாநதி ஷங்கர் , மலேசியா தியாகா மற்றும் திருநங்கை மலைக்கா ஆகியோர் நடிக்க….
ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கி இருக்கும் படம் ‘வந்தா மல’.
அப்போ போனா ? அதை அப்புறம் பேசுவோம்.
ஒரு வழக்கமான படமாகத்தான் இருக்கும்போல என்ற இயல்பான உணர்வில் ஒரு படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்க்கும்போது, அது எதிர்ப்பார்ப்புக்கும் மேலாக இருந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தால் அது எத்தனை சுகமான விஷயம் .!
அப்படி ஒரு சுகமான விஷயத்தை கொடுக்கிறது வந்தா மல படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் .
எப்போதும் ஜாலியாக வாழும் நான்கு இளைஞர்கள்…. சென்னை சேரிப்பகுதியில் வாழும் அந்த இளைஞர்களுக்குள் நிகழும் நட்பு , காதல் , நகைச்சுவை ந , அவர்களை சூழ்ந்த அரசியல் இவற்றின் அடிப்படையில் உருவாகும் படம் இது .
வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு வயதான தாதாவாக நடிக்கிறார். இயக்குனர் இகோர் படத்தில் நடிக்கிறார் . பாடல் எழுதி இருக்கிறார் . ஒரு பாடலை பாடியும் இருக்கிறார் .
மொத்தம் உள்ள ஐந்து பாடல்களில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சென்னைத் தமிழில் இருந்தன . பாடல்களை மிக சுவையாக சுவாரஸ்யமாக படமாக்கி இருந்தார் இகோர் .
ஒரு பாடலில் அறிஞர் அண்ணா, அம்பேத்கார், பெரியார் , எம் ஜி ஆர் இவர்கள் கொண்டாடப்படுகிறார்கள் . 2ஜி அலைக்கற்றை ஊழல் கிண்டல் செய்யப்படுகிறது .
இன்னொரு பாடல், காதலன் காதலி தங்களுக்குள் காதல் தோன்றிய கணத்தை கேள்வியும் பதில்களுமாக சென்னைத் தமிழில் விவரித்துக் கொள்ள , அதனால் தூக்கம் இல்லாமல் பலர் அல்லோலகல்லோலப்படுவதை ரகளையாக எடுத்து இருக்கிறார்கள் .
வெஸ்டர்ன் இசை ஆதிக்கத்தை ஒட்டு மொத்தமாக தள்ளி வைத்து விட்டு, நகர்ப்புற ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும்படியாக சென்னை மாநகர நேட்டிவிட்டி இசையை….. சரியான இசைக் கருவிகள் , அருமையான மெட்டுகள் , பொருத்தமான குரல்கள் மூலம் மிக அட்டகாசமாக கொடுத்து இருக்கிறார் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் . நிச்சயமாக இவர் தமிழ் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கையான வரவு என்பதில் துளியும் சந்தேகமில்லை . வாழ்த்துகள் !
விளம்பர அறிவிப்பு , மற்றும் சித்தரிப்பு அறிவிப்பு பாணியில் பின்னணிக் குரலோடு அமைந்த அந்த முன்னோட்டம்…… செம சோக்காக்கீது மாமே !
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் இகோர் “ஒன்றரை வருட காலம் இந்தக் கதையை செதுக்கி சிறப்பாக உருவாக்கி இருக்கிறோம். கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என்று நம்புகிறோம் ” என்றார், நம்பிக்கையோடு .
“எம் ஜி ஆரின் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கி இருக்கிறேன் . என்னை தேடி வந்து நடிக்க அழைத்தார் இயக்குனர் இகோர். அவர் பணியாற்றிய விதம் மிக சிறப்பாக இருந்தது ” என்றார் வியட்நாம் வீடு சுந்தரம் .
“வசந்தி என்ற நகர்ப்புற, குறைந்த வருவாய்க் குடும்பத்துப் பெண்ணாக என்னை மாற்றி அமைத்த இகோருக்கு நன்றி ” என்றார் பிரியங்கா .
நான்கு ஹீரோக்களும் ஒன்றாக சேர்ந்து நின்று மாற்றி மாற்றிப் பேசி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள் .
திருநங்கை மலைக்கா பேசும்போது
ஐ படத்தில் திருநங்கைகள் கேவலப்படுத்தப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் நான் நடிப்பதை எனக்கு வேண்டிய பலரும் விரும்பவில்லை . எனது மன உணர்வுகளை இயக்குனர் இகோரிடம் சொன்னேன். அவர் சரியாக அதை புரிந்து கொண்டு படத்தின் முழுக் கதையையும் விளக்கி எனக்கு நம்பிக்கை அளித்ததோடு, என்னை எந்த பேதமும் பார்க்காமல் தங்களில் ஒருவராக நடத்தினார் . அதை மறக்க முடியாது ” என்றார்
படத்தை வாங்கி வெளியிடும் வைப்ரன்ட் மூவீஸ் வெங்கடேஷ் ராஜா ” படத்தின் முதல் தோற்றம் வண்ணமயமாக உற்சாகமாக இருந்தது. படமும் நன்றாக இருந்தது . அதனால் படத்தை வெளியிடுகிறேன் ” என்றார் .
எல்லோரையும் கவர்ந்த இசையமைப்பாளர் சாம் டி ராஜ் பேசும்போது
” ஐந்து பாடல்களும் மிக சிறப்பாக வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது . பொதுவாக கானா பாடல் என்றால் பொதுவாக ஆண் பாடகர்களைதான் சொல்வார்கள் . ஆனால் இந்தப் படத்தில் ஒரு பெண் கானா பாடகி பாடி இருக்கிறார். நிச்சயமாக இந்தப் பாடல்களும் படமும் நன்றாக இருக்கும் ” என்றார் .
வந்தா மலை . சரி, போனா ?
பாடலாசிரியர் சுகுமார் அதற்கு பதில்,சொன்னார் ” வந்தா மலை . போனா? உயிர் ! அந்த அளவுக்கு உயிரைக் கொடுத்து படத்தை உருவாக்கி இருக்கோம் ” என்றார்
வந்தா மல கழ்த்துல வுயட்டும் வெற்றி மால!