யாமினி ஃபிலிம்ஸ் சார்பில் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, ஷார்மன் ஜோஷி, ஸ்ரேயா சரண், ஷான், கிரேசி கோஸ்வாமி, பிரகாஷ் ராஜ், லீலா தாம்சன் நடிப்பில் இந்தி , தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும் படம்.
பிள்ளைகளை மார்க் வாங்க மட்டும் தயார் செய்யும் பள்ளி ஒன்றுக்கு இசை ஆசிரியராக வருகிறார் ஒரு பெண் மணி (ஸ்ரேயா) . இசை வகுப்பை கூட கணக்கு அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்கிக் கொள்ள , இசை ஆசிரியருக்கு பள்ளியின் வரவு செலவுகளை பார்க்கும் வேலைதான் கிடைக்கிறது .
எனவே சக ஆசிரியர் ஒருவரின் உதவியோடு தனியாக இசை நாடகப் பள்ளி துவங்குகிறாள்.
படிக்க வரும்மாணவர்களிலும் பெற்றோரில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் கொண்டு வரும் பிள்ளைகள் . பயில விரும்பும் மாணவர்களை தடுக்கும் பெற்றோர்கள் அதில் சில பிரச்னைகள்.
எனவே மாணவர்களை கோவா வரை கொண்டு போய் அங்கு தங்க வைத்து பயிற்சி கொடுத்து கொண்டு வர திட்டமிட்டு அழைத்துப் போக , பெற்றோர் அனுமதி தராத நிலையில் ஒரு பையன் மன நலம் பாதிக்கப்பட, கோவாவுக்கு வரும் , போலீஸ் அதிகாரியின் ( பிரகாஷ் ராஜ்) மகள் , காதலனோடு தப்பிக்க, பயிற்சி என்ன ஆனது , பயின்று திரும்பி வந்து இசை நாடகம் போடும் திட்டம் என்ன ஆனது என்பதே படம்.
நல்ல கதை .. சொல்ல வேண்டிய கதை.
இளையராஜாவின் இசையில் அதை பாடல்கள் நிறைந்த மியூசிகல் படமாக கொடுத்து இருக்கிறார்கள் . வசனங்களைக் கூட பாடலில் சொல்லும் வகையில் நிறைய பாடல்கள் அமைந்த படம்.
ஒரு பாடலில் இளையராஜாவே இசை அமைத்த அபூர்வ சகோதரர்கள் பட ‘ராஜா கைய வச்சா’ பாட்டின் பிஜி எம் எல்லாம் வந்து போகிறது .
கலர்புல் ஆக கவர்கிறது கிரண் டியோஹான்ஸ் ஒளிப்பதிவு .
தயாரிப்புத் தர்மும் ஒகே .
ஆனால் நாடகத்தனமான நடிப்பு (பிரகாஷ் ராஜ் மட்டும் வழக்கம் போல மிரட்டுகிறார்) , பல படங்களில் பார்த்த காட்சிகள் , இழுக்கும் திரைக்கதை இவை குறை .