மவுன ராகம் நாயகன் ஆகிய படங்களில் பி சி ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றியவர் ஜி பி கிருஷ்ணா .
பிறகு நியாயத் தராசு உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இவரது படங்களில் இவருக்காக பி சி ஸ்ரீராம் வந்து பணியாற்றும் அளவுக்கு, ஸ்ரீராமின் நெருங்கிய நண்பர் .
இது மட்டுமல்ல… சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணியாற்றியவர் ஜி பி கிருஷ்ணா .
ஆர்.டி.ராஜசேகர், விஜய் மில்டன், விஜய் சக்கரவர்த்தி, மனோஜ் பரமஹம்சா, தங்கர் பச்சன் போன்ற பல சிறந்த ஒளிப்பதிவாளர்கள் (மற்றும் இயக்குனர்கள் ) உருவாகக் காரணமாக இருந்தவர் .
திரைப்படக் கல்லூரியில் இருந்து ஒய்வு பெற்ற நிலையில் இப்போது ஒளிப்பதிவுக்கு என்று பிரத்யோகமாக muybridge film school என்ற பயிற்சி நிலையத்தைத் துவங்கி இருக்கிறார் .
‘ஜி பி கிருஷ்ணா எடுத்திருக்கும் சரியான முடிவு’ என்று பலரும் கொண்டாடும் இதன் துவக்க விழாவில், இயக்குனர் மணிரத்னம் , பி சி ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டு முறைப்படி துவக்கி வைத்தனர் .
திரைப்படக் கல்லூரியில் பி சி ஸ்ரீராம் , ஜி பி கிருஷ்ணா இருவருக்கும் ஆசிரியராக இருந்தவரும் , ஒளிப்பதிவாளரும் , ராபர்ட் — ராஜசேகரன் என்று இரட்டையராக இணைந்து ,
மனசுக்குள் மத்தாப்பு, சின்னப் பூவே மெல்லப் பேசு, பறவைகள் பலவிதம் ஆகிய படங்களை எழுதி இயக்கியவர்களில் ஒருவருமான ராபர்ட் தலைமை தாங்கினார் .
கடம் விக்கு விநாயக் மாணவர்களின் கடம் இன்னிசை நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது .
மணிரத்னம், பி சி ஸ்ரீராம், திருமதி சீதா பி சி ஸ்ரீராம், ராபர்ட், ஜி பி கிருஷ்ணா ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற விழா துவங்கியது .
ஆர்.டி.ராஜசேகர், விஜய் மில்டன், விஜய் சக்கரவர்த்தி, மனோஜ் பரமஹம்சா, தங்கர் பச்சன் ஆகியோர், ஜி.பி. கிருஷ்ணாவை சந்தித்த காரணத்தால் தங்கள் வாழ்க்கை எப்படி மாறியது என்பதையும்….
அவர் கல்லூரியில் நடத்தும் வகுப்புகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதையும்….
அவர் எவ்வளவு சுவையாக , புத்தகங்களுக்கு அப்பாற்பட்டும் பிராக்டிக்கல் உதாரணங்களோடு பாடம் நடத்துவார் என்பதையும் மனப்பூர்வமாக பேசி இருந்த காணொளிகள் திரையிடப்பட்டன.
“அவர் இல்லா விட்டால் நான் இல்லை ” என்றார் ஆர் .டி. ராஜசேகர் .
விஜய் மில்டன் பேசும்போது “கல்லூரியில் சேர்ந்த காலத்தில் எங்கள் படிப்பு என்பது கல்லூரி வளாகத்தில் உட்கார்ந்துகொண்டு , அப்போது பார்க்கிற சினிமா பற்றிப் பேசுவதாக மட்டுமே இருந்தது .
ஆனால் ஜி பி கிருஷ்ணாவின் வகுப்பு என்றால் அந்த காரிடாரே காலியாக இருக்கும் . எல்லோரும் அவரது வகுப்புக்குள் இருப்போம் .
நான் இன்று இந்த ஸ்டேஜில் நிற்கும் நிலைக்கு வந்துள்ளேன் என்றால் காரணம் அவர்தான் ” என்றார் .
“அவர் மட்டும் எங்களுக்கு கிடைக்காமல் போயிருந்தால் நாங்கள் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருக்க முடியாது ” என்றார் மனோஜ் பரமஹம்சா
தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஆந்திர சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி இருப்பவருமான விஜய் சக்கரவர்த்தி , “அண்மையில் ஒரு படப்பிடிப்புக்காக லண்டன் போனபோது,
ஒரு புது கேமராவைக் கையில் கொடுத்து விட்டார்கள் . எனக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது . நான் உடனே ஜி பி கிருஷ்ணாவுக்குதான் போன் செய்தேன்.
போகஸ், அப்பர்ச்சர , லைட் லெவல் உள்ளிட்ட விசயங்களில் செய்யவேண்டிய சிற்சில மாற்றங்கள் பற்றி உடனே சொன்னார் .அப்படியே செய்தேன் . எடுத்ததைப் போட்டுப் பார்த்தால்,
அவ்வளவு பிரம்மாதமாக வந்து இருந்தது . அவர் ஒரு என்சைக்ளோ பிடியா ” என்று வியந்து பாராட்டினர் .
தங்கர்பச்சான் பேசும்போது ” நான் திரைப்படக் கல்லூரியில் படித்த பிறகு சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பிறகு ஜி பி கிருஷ்ணாவை சந்தித்தேன் .
அப்போதுதான் அதுவரை நான் ஒளிப்பதிவு பற்றி ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லை என்று தோன்றியது . அவர் மிகச் சிறந்த ஆசிரியர் .
அடையாறு திரைப்படக் கல்லூரிக்குப் பிறகு ராஜீவ் மேனன் நடத்தும் திரைப்படக் கல்லூரி மட்டுமே சிறப்பானது . ஒழுங்காக கற்றுத் தரும் பணியை செய்கிறது . அந்த வரிசையில் இந்த muybridgeம் சேரும் ” என்றார் .
திரைப்படக் கல்லூரியின் ஆண்டு விழாவில் ஒரு முறை கலந்து கொண்டு பேசிய பி சி ஸ்ரீராம் “ஜி பி கிருஷ்ணா எப்போதும் ஆசிரியராகத்தான் இருப்பார்.
அவருக்குள் ஒரு நிரந்தர ஆசிரியர் எப்போதும் செயல்படுவார் ” என்று பேசியதை இந்த நிகழ்ச்சியில் பொருத்தமாகத் திரையிட்டு அசத்தினார்கள் .
இப்போது muybridge ஐத் துவங்க ஜி பி கிருஷ்ணாவுக்கு ஐடியா கொடுத்தவரும் ஸ்ரீராம்தான் என்பது முக்கியத் தகவல்.
நிகழ்ச்சியில் பேசிய பிரபல ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ” ஜீபி கிருஷ்ணா துவங்கும் இந்த பள்ளி மிக சிறப்பான விஷயம் .
இன்னும் பல சிறந்த ஒளிப்பதிவாளர்களை உருவாக்கும் பணியில் அவர் மாபெரும் வெற்றி பெறுவார் ” என்றார் .
ராபர்ட் பேசும்போது “ஜி பி கிருஷ்ணா என் மாணவராக இருந்து மிகச் சிறந்த ஆசிரியராக உயர்ந்தவர். அவர் நடத்தும் இந்தப் பள்ளிக்குள் நுழையும் மாணவன் எந்த ஒரு கதையையும் கையாளக் கூடிய திறமையோடு,
எந்த ஒரு இயக்குனரோடும் பணியாற்றக் கூடிய தகுதியோடு வெளிவருவான் என்பதில் சந்தேகம் இல்லை .
இந்த muybridge film school பல ஒளிப்பதிவு மேதைகளை உருவாக்கி புகழ் பெற எனது வாழ்த்துகள் ” என்றார்
அடுத்துப் பேசிய பிசி ஸ்ரீராம் ” ஒளிப்பதிவு படிக்கலாம் பேசலாம் கத்துக்கலாம் . ஆனா அதில் ஒரு ஒளிப்பதிவாளனின் பணி என்பது அவன் ஒளிப்பதிவு செய்யும் அந்தக் கணத்தில் நிகழ்வது .
சொல்லப் போனால் அந்தக் கணம்தான் அதை செய்கிறது .அந்த கணத்தை ஒரு ஒளிப்பதிவாளன் எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதுதான் பதிவாகிறது .
அதனால்தான் நான் என்னிடம் பணியாற்றுபவர்களை உதவியாளர் என்று நான் சொல்வது இல்லை . என்னோடு வேலை செய்ய வந்தவர்கள் என்றுதான் சொல்வேன்.
நான் அவர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்கிறேன் என்றும் சொல்லலாம். நான் இப்போது டிஜிட்டல் ஒலிப்பதிவைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்.
மணிரத்னம் எது சொன்னாலும் நான் அப்படியே மெய் மறந்து கேட்பேன் அப்படி என்னை அவர் பேச்சிலேயே மயக்கி விடுவார் . ஜிபி கிருஷ்ணாவும் அப்படித்தான் .
ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . அதை கற்றுக் கொடுக்க ஒரு நல்லாசிரியர் தேவைப்படுகிறது . அதற்கு மிகப் பொருத்தமானவர் ஜி பி கிருஷ்ணா ” என்றார் .
மணிரத்னம் பேசும்போது ” மவுனராகம் படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு ஷாட் எடுத்து முடித்த உடன் ஸ்ரீராமும் ஜி பி கிருஷ்ணாவும் ஒரு ஓரமாகப் போய் குசுகுசுவென்று பேச ஆரம்பித்து விடுவார்கள்.
அடுத்த ஷாட்டுக்கு சரியாக வருவார்கள் . அதை எடுத்து முடித்ததும் மீண்டும் போய் பேச ஆரம்பித்து விடுவார்கள். இப்படியே படம் முழுக்க !
எனக்குக் கூட அப்படி இவர்கள் என்னதான் பேசிக் கொள்வார்களோ என்று தோன்றும் .
ஆனால் ஜி பி கிருஷ்ணாவிடம் இன்னும் கூட பேசுவதற்கு நிறைய விஷயம் இருக்கிறது என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது.
அதுவும் இத்தனை சாதித்த ஒளிப்பதிவாளர்கள் , ‘ தாங்கள் உருவாகவே ஜி பி கிருஷ்ணாதான் காரணம்’ என்று கூறுவதைப் பார்க்கும்போது , அவரைப் பற்றி இப்போதுதான் புரிகிறது .
அவர் எவ்வளவு சிறப்பாக வகுப்பு எடுப்பார் என்று எல்லோரும் கூறினார்கள் . அதுதான் நல்ல ஆசிரியருக்கு இலக்கணம் .
எனக்குக் கூட பள்ளிக்காலத்தில் இயற்கை அறிவியல் என்ற படத்துக்கு ஒரு ஆசிரியர் இருந்தார் . அவர் வகுப்பை கவனித்தால் போதும் . அப்புறம் படிக்கவே தேவை இல்லை .
இத்தனைக்கும் அதுதான் கஷ்டமான சப்ஜெக்ட். ஆனால் அதை நடத்தும் விதத்தில் , எங்களுக்கு அதை அவ்வளவு சுலபமாக மனதில் ஏற்றி விடுவார்.
ஒரு பாடத்தை மாணவன் சுமையாக எண்ணாத அளவுக்கு அதை நடத்துபவரே சிறந்த ஆசிரியர் . அன்று நேச்சுரல் சயின்சுக்கு எங்கள் ஆசிரியர் என்றால்,
ஒளிப்பதிவுக்கு ஜி பி கிருஷ்ணா அப்படிப்பட்டவர் என்பது எல்லோரும் பேசுவதைப் பார்க்கும்போது புரிகிறது .
இந்த muybridge film school எவ்வளவு சிறப்பானதாக விளங்கும் என்பதற்கு இதுவே சாட்சி ” என்றார் .
ஏற்புரை வழங்கிய ஜி பி கிருஷ்ணா பேசும்போது
” என் மனதில் பல சிந்தனைகள் இப்போது அலை மோதுகிறது . மவுனராகம் படத்தின் முதல் நாள் எடுக்கப்பட்ட காட்சி,
நடிகை ரேவதி பெட் ரூமில் இருந்து எழுந்து வரும் காட்சிதான் . அது பி சி ஸ்ரீராமின் வீட்டு பெட் ரூமில் எடுக்கப்பட்டது .
மவுனராகம் படம் முடிந்து அப்போதைய குட்லக் பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் . படம் இன்னும் இரண்டு ரீல் இருக்கும்போதே,
திரையின் ஒளியை அணைத்து லைட்டைப் போட்டு விட்டார் ஆப்பரேட்டர்
என்ன ஏதென்று போய்ப் பார்த்தால் ‘அவ்வளவுதான் பிலிம் இருக்கு . இதுக்கும் மேல ஒண்ணும் இல்லை’ என்கிறார் .
திடுக்கிட்ட நான் ஓடிப் போய், பிலிம் ரோல் கொண்டு வந்த வண்டியை பரிசோதித்தேன் . இரண்டு ரீல்கள் தவறிப் போய் காரின் டிக்கியில் இருந்தது . அப்புறம் எடுத்து வந்து ஓட்டினோம் . .
படம் முடிந்து மணி ரத்னம் என்னிடம் ‘படம் எப்படி இருக்கிறது/’ என்று கேட்டார் . ‘ ஒரு நல்ல படத்தில் பணியாற்றிய சந்தோசம் இருக்கிறது’ என்றேன் .
இதுபோல எவ்வளவோ சம்பவங்களை சொல்லலாம்
அப்புறம் நியாயத் தராசு உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். நியாயத் தராசு எல்லாம் பண்ணிக் கொடுத்தது பி.சி.ஸ்ரீராம்தான்.
ஒளிப்பதிவில் நம் இந்தியாவுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது .
உலகத்திலேயே முதன் முதலில் ஒளிப்பதிவில் பவுன்சிங் லைட்டை ( BOUNCING LIGHT) பயன்படுத்தியது இந்தியாவில்தான். சுபோத்ரா மித்ரா என்ற வங்காள ஒளிப்பதிவாளர்தான் .
இப்படி பல சாதனைகளுக்கு நாம் சொந்தக்காரர்கள்.
திரைப்படக் கல்லூரியில் இருந்து நான் ஒய்வு பெற்ற உடன், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து விவாதித்த போது,
பி சி ஸ்ரீராம்தான் இப்படி ஒளிப்பதிவுக்கு என்று ஒரு பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கும் யோசனையைச் சொன்னார் .
என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து சில பெயர்களை எழுதிக் கொண்டு போனேன் . muybridge என்ற பெயரை அவர்தான் தேர்ந்தெடுத்தார் . அந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது .
ஒரு குதிரை ஓடும்போது எடுக்கப்பட்ட ஸ்டில்களை ஒரு முறைப்படி அடுத்தடுத்து பயன்படுத்தி , குதிரை ஓடுவது போல முதன் முதலில் காண்பித்தவர், இந்த muybridge தான் ,
அதைப் பார்த்து விட்டுதான் தாமஸ் ஆல்வா எடிசன் கைனடாஸ்கோப்பை கண்டு பிடித்தார் . அதனால்தான் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சினிமாவைக் கண்டு பிடித்தவர் என்ற பெயர் கிடைத்தது .
எனவே நாம் muybridge பெயரை வைப்போம் என்று வைத்தோம்.
மணிரத்னமும் பி சி ஸ்ரீராமும் சேர்ந்து இந்தப் பள்ளியைத் துவங்கி வைத்து இருப்பது எனக்குப் பெரிய பெருமை . இதை என்றும் மறக்க மாட்டேன் ” என்றார் .
பிரகாசிக்கட்டும் muybridge film school !