ஸ்ரீ ஆர்க் மீடியா அன்ட் என்டர்டைன்மென்ட் சார்பாக சக்ரா மற்றும் ராஜ் தயாரிக்க, தர்ஷன், மகிமா நம்பியார், ஆர் எஸ் சிவாஜி, சிங்கம் புலி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா நடிப்பில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருக்கும் படம்
உச்சியில் இருக்கும் மலைக் கிராமம். அங்கு மருத்துவமனை உண்டு. ஆனால் மருத்துவர்கள் இல்லை. அரசு யாரையும் நியமித்தாலும் அவர்கள் வருவதில்லை. முன்பெல்லாம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆவோர் இப்படி ஏதாவது ஒரு கிராமத்தில் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் இருந்தது . இப்போது சட்டம் மட்டுமே இருக்கிறது. நடைமுறை இல்லை. எனவே யாரை நியமித்தாலும் அவர்கள் மலைக்கு வராமலே மாற்றல் வாங்கிக் கொண்டு கீழேயே தங்கி விடுகிறார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வந்து போகும் ஒரே ஒரு பஸ்.
இதனால் அந்த பகுதி மக்களுக்கு வசதிக் குறைவு என்பதை விட, நோய், விபத்து, ஆபத்து இவற்றில் சிக்கினால் அவர்களைக் காப்பாற்ற அங்கு யாரும் மருத்துவர் இல்லாத நிலை. இதனால் பல உயிரிழப்புகள் .
அப்பா , இறந்த நிலையில் தங்கையையும் நீட் படிப்பு காரணமாக இழந்த ஒருவன் ( தர்ஷன்), அவனது தந்தை ( ஆர் எஸ் சிவாஜி) , ஊர்த்தலைவர் ( சிங்கம் புலி) ஆகியோர் எப்படியாவது ஒரு டாக்டரைக் கொண்டு வர முயல்கிறார்கள்.
கலெக்டரும் (அருள் தாஸ்) உதவ, ஒரு வாரம் மட்டும் பணிபுரியும் எண்ணத்தில் வருகிறார் ஒரு பெண் மருத்துவர் (மகிமா நம்பியார்)
‘டாக்டர் தொடர்ந்து அங்கேயே இருப்பது நீங்கள் அவரைக் கவனித்துக் கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது ‘என்று கலெக்டர் கூற, அவரைப் பார்த்துப் பார்த்துப் பார்த்துக் கொள்கிறார்கள் அந்த கள்ளங்கபடமில்லாத மக்கள் .
அவர் பயந்தால் ஊரே காவலுக்கு இருக்கிறது . அவருக்கு பார்ட்டி பிடிக்கும் என்பதற்காக கல்யாணம் ஆண் ஜோடிக்கு கல்யாணம் ஏற்பாடு செய்து, அவரை தலைமை தாங்க வைத்து கொண்டாடுகிறார்கள். அவர் காலையில் ஜாக்கிங் போனால் கூடவே ஷூ போட்டுக் கொண்டு ஊரே கூடவே ஜாக்கிங் போகிறது. அவருக்காக மட்டும் மலை உச்சியில் காபி டே போல ஒரு டீ டே அமைக்கப்படுகிறது .
நாயகனின் தந்தையான நோயாளியிடம் ”நீங்க குணமாகும் வரை நான் போகமாட்டேன் ”என்று டாக்டர் வாக்குச் சொல்ல, அவர் இறந்ததை டாக்டருக்குத் தெரியாமல், மேளம் அடிக்காமல் ஒப்பாரி வைக்காமல் அடக்கம் செய்கிறார்கள். அவர் போன்ற ஒருவரை அவராக மாற்ற அவரும் இறந்து போக,
மக்களின் முயற்சிகள் தோற்கிறது. டாக்டருக்கு அமெரிக்க வெள்ளைக்கார மாப்பிள்ளையோடு நிச்சயம் ஆக, அப்புறம் என்ன நடந்தது என்பதே படம்.
சமூக அக்கறையோடு ஒரு படைப்பைக் கொடுத்து இருக்கும் சரவணனுக்கு பாராட்டுகள். அதுவும் இந்தப் படத்துக்கு நாடு என்று பெயர் வைத்ததன் பின்னால் உள்ள விரக்திப் பரிகாசம் அருமை
நீட் தேர்வுக்கு எதிரான கலைக்குரல், முத்துலட்சுமி என்ற அடையாளம் ஆகியவற்றுக்கும் பாராட்டுகள்.
ஒரு கல் மேடையின் மேல் மகிமா அமர்ந்திருக்க, ஆர் எஸ் சிவாஜி சொல்லும் விஷயம் , the scene of the movie! ஆனால் இப்படி பேசிக் கொண்டே விட்டிருக்காமல் அதைக் காட்சிப்படுத்தி இருந்தால் சிகரம் தொட்டிருக்கும் .
அங்கங்கே நையாண்டி வசனங்களில் விளையாடி இருக்கிறார் இயக்குனர் . முக்கியமாக ஸ்பைசி, பசியாவது கல கல. நம் தலைவர்களைக் கொன்ற வெளிநாட்டு டாக்டர்கள்… லக லக .
படத்தின் நிஜ ஹீரோ அந்த கொல்லிமலையும் கொள்ளைகொள்ளும் காடுகளும். கே ஏ சக்திவேலின் ஒளிப்பதிவு மிக சிறப்பு .
படம் முழுக்க வரும் மலைவாழ் முகங்கள் சிறப்பு.
தர்ஷன் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பில் பில் தடுமாறினாலும் தோற்றப் பொருத்தத்தில் கவர்கிறார்.
குறைசொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளார் மகிமா நம்பியார் .
ஆர் எஸ் சிவாஜி நிறைவு
ரொம்ப நாளைக்குப் பிறகு பாராட்டும்படி நடித்துள்ளார் சிங்கம் புலி .
படத்தின் இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் நெருங்கும் இடத்திலிருந்து கடைசிவரை அருமையான இசை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்துகிறார் இசையமைப்பாளர் சத்யா .
மலைக் கிராமம் பற்றிய காட்சிகளில் முதல் பாதியில் நம்பகத்தன்மை குறைவு அல்லது லாஜிக் மீறல். உண்மையில் நாடு படமாவதே இடைவேளைக்குப் பிறகுதான்.
இறந்தவர் போலவே உருவம் உள்ள ஒருவரை இறந்தவர் என்று நம்ப வைப்பது எல்லாம்… வேறு படத்துக்கு எடுத்த காட்சிகளை தப்பாக இதில் சேர்த்து விட்டார்களோ என்று சந்தேகப்பட வைக்கிறது .
அதுவும் தங்கை இறந்த நிலையில் அடுத்த காட்சியிலேயே தர்ஷன் குத்தாட்டம் போட்டு ஆடுவது எல்லாம் இந்தப் படத்துக்கு ரொம்பவே உறுத்தல். இது போன்ற படங்களில் சினிமாத்தனம் கொஞ்சம் இருந்தாலும் அது பூதாகரமாகத் தெரியும் .
அப்புறம் மிக முக்கியமாக , ஒரு நியாயமான சமூக அக்கறைக்கான விசயத்துக்காக போராடும் கதாபாத்திரங்கள் அதில் வென்றன என்று முடித்தால்தான் இரண்டு மணி நேரம் படம் பார்த்த ரசிகனுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் . (காதல் கதைப் படங்கள் விதிவிலக்கு)
‘இல்லை . நான் யதார்த்தம் சொல்ல வருகிறேன் ‘என்றால் அவர்களை ஏமாற்றும் கதாபாத்திரம் தப்பான குணாதிசயம் கொண்டது என்று இருக்க வேண்டும் . இல்லை இல்லை அதுவும் நல்ல குணாதிசயம் கொண்டதுதான் என்றால் அந்தக் கதாபாத்திரத்துக்கு விருப்பம் இல்லாத நிலையில் வேறு வழியின்றி அப்படிச் செய்கிறது என்று இருக்க வேண்டும்.
அந்த திட்டவட்டம் இன்றி இப்படி தவளைக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் உத்தி படத்தின் அட்டகாசமான கிளைமாக்சுக்கான கனத்தைக் குறைகிறது என்றாலும் …
இப்போதும் கூட இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் தரும் வலி !
அதுதான் இந்தப் படத்தின் வெற்றி
எனவே …
நாடு … அதை நாடு !