
பனிமதி பிலிம் புரடக்ஷன் சார்பில் எம் ஜி ராஜா தயாரிக்க, ராஜ், மறைந்த சசி ரேகா, கந்தராஜ், சமர்தினி ஆகியோர் நடிக்க ஜி செந்தில்ராஜா என்பவர் இயக்கி இருக்கும் படம் நாளை முதல் குடிக்க மாட்டேன் .
குடிப்பது பதனியா ? பச்சைத் தண்ணியா ? பார்க்கலாம்.
குடிகார அப்பாவால் அம்மா அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், சிறுவயதிலேயே அனாதையாகி உறவுகளால் கொடுமை செய்யப்பட்டு , ஒரு டீச்சரிடம் அடைக்கலம் பெற்று படித்து வளர்ந்து ,
அதே ஊர் கிராமத்துப் பள்ளிக் கூட்டத்தில் இங்கிலீஷ் டீச்சராக இருப்பவள் மலர் . (மறைந்த சசிரேகா)
பைத்தந்துறை என்ற அந்த சராசரி தமிழ கிராமத்தில் , இப்போது டாஸ்மாக் புண்ணியத்தில் குடிகாரர்கள் பல்கிப் பெருகி இருக்க , ‘தனது வருங்கால கணவன் ஒரு முறை கூடக் குடித்தவனாக இருக்கக் கூடாது’
என்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள் .
ஊரில் குடி போதையால் பலர் சாக, பல குடும்பங்கள் அனாதையாகிறது
அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கும் சிவா(ராஜ்) மட்டுமே குடிப்பழக்கம் இல்லாதவன் என்று, ஊரே பாராட்டுகிறது . சிவா மலரைக் காதலிக்க அவளும் அவன் குடிப்பழக்கம் இல்லாதவனா என்று,
அவனிடமே கேட்டு, இனியும் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாள்
திருமணம் நடந்த பிறகுதான் ‘சிவாவும் குடிப் பழக்கம் உள்ளவன் . ரகசியமாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவன்’ என்பது மலருக்குத் தெரிய வருகிறது மலர் அவனைப் பிரிந்து போகிறாள் .
சிவாவின்குடிகார நண்பன் ஒருவன் தன் மனைவியின் மரணத்துக்குக் காரணமாவதோடு தற்கொலையும் செய்து கொள்கிறான் . கடைசியில் சிவாவும் மலரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படம் ..
இயல்பான கிராமத்து முகங்களை வைத்து குடியின் கொடுமையை சொல்லும் ஆரம்பக் காட்சிகள் கவனம் பெறுகின்றன.
சில இடங்களில் வசனங்களில் நகைச்சுவை கொப்பளிக்கிறது . நாட்டு வைத்தியர் சொல்லும் பனிரெண்டு வகைக் குடிகார்கள் லிஸ்ட், நகைச்சுவை மற்றும் சீரியஸ் என்று இரண்டு ஏரியாவிலும் உச்சம்
பாமரத்தனமாக இருந்தாலும் மலரின் சிறுவயது பிளாஷ்பேக் மனம் கனக்க வைக்கிறது . படத்திலேயே கொஞ்சமாவது பொருத்தமாக நடித்து இருப்பது சிறுவயது மலராக வரும் அந்த சிறுமிதான் . .
பாடல் வரிகள் மிக அருமை. இசையமைப்பாளர் சிவ சுப்ரமணியத்தின் மெட்டுகளும் ஒகே .
நடிக நடிகையரின் படு செயற்கையான நடிப்பு , பக்குவம் இல்லாத — சினிமா தொழில் நுட்பம் சுத்தமாகத் தெரியாத இயக்கம் இவை படத்தின் பெரும் குறைகள் .
என்ன சொல்வது என்ற வகையில் படம் ஓகேதான் . ஆனால் எப்படி சொல்வது என்பதில்தான் பாதாளத்துக்கு சறுக்கி இருக்கிறார்கள் .
எனினும் கிராமியப் பின்னணியில் குடியின் கொடுமையை அமெச்சூர்த்தனமாகவாவது சொல்லும் வகையில் இந்தப் படத்தின் மீது ஒரு சிறிய சாஃப்ட் கார்னர் ஏற்படத்தான் செய்கிறது