சாதித்துக் காட்டிய நாளைய (பெண்)இயக்குனர்

IMG_8379

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘நாளைய இயக்குனர் சீசன் ஐந்து’ குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு ரவுண்டுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்ப்ரதா, அந்த போட்டியின் பல ரவுண்டுகளிலும்  சிறந்த படம் சிறந்த இயக்கம் போன்ற பிரிவுகளில் முதல் பரிசை வென்றவர். (சில படங்கள் சிறந்த படம்,சிறந்த இயக்கம்,சிறந்த இசை, சிறந்த நடிப்பு என்று எல்லா பிரிவுகளிலும் முதல் பரிசை மூட்டை கட்டி தூக்கிக் கொண்டும் வந்திருக்கிறது) 
இறுதிப் போட்டிக்கு இவர் இயக்கிய லைன் ஆஃப் கண்ட்ரோல் என்ற குறும்படம் எல்லோரின் ஏகோபித்த பாராட்டுதலுக்கும் ஆளாகி எல்லா பிரிவுகளிலும் முதல் இடத்தில் வந்து,ஒட்டுமொத்த அளவில் இந்த நாளைய இயக்குனர் சீசன் ஐந்தின் ‘டைட்டில் வின்னிங்’ படமாகவும் வந்திருக்கிறது . 

யார் இந்த ரஜிதா கல்பப்ரதா?

இவர் எந்த சினிமா பிரபலத்தின் வாரிசு ? 

எவ்வளவு பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்து காசு செலவு செய்து சினிமா கற்றுக் கொண்டவர் ?

 எந்த பிரபல இயக்குனரிடம் எத்தனை வருடம் பணியாற்றியவர் ?

— என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது அல்லவா? அப்படி இந்த பின்புலமும் இல்லாதவர் இந்த ரஜிதா என்பதுதான் பாரட்டுக்குரிய ஆச்சர்யம் .

முதலில் கொஞ்சம் ரஜிதா கல்ப்ரதாவின் நதிமூலம் ரிஷிமூலம் கேட்போம் .

“அப்பா வங்கி அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரண்டு சகோதரர்கள் மற்றும் நான் . இதுதான் எனது குடும்பம் . 

மாலையில் பள்ளிக் கூடம் முடிந்து,  பிடித்த தோழியிடம் நாளைக்கு சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தால்….  அப்பா அம்மா இருவரும் பெட்டியைக் கட்டிக்கொண்டு இருப்பார்கள் .அப்பாவுக்கு ஏதோ ஊர் விட்டு ஊர் அல்ல… மாநிலம் விட்டு மாநிலம் டிரான்ஸ்ஃபர் ஆகி இருக்கும் . இப்படியாக தமிழ்நாடு,  ஆந்திரா , கேரளா , கர்நாடகா , வெஸ்ட் பெங்கால் , மத்தியபிரதேச மாநிலங்களில் என் பள்ளி வயது கழிந்தது. 

இதனால் எனக்கு நிரந்தர பள்ளித் தோழர்கள் என்று யாருமே இல்லாமல் போய் விட்டது . ஒரு மாநிலத்தில் ஒரு பள்ளியில் படிக்கும்போது சில ஃபிரண்ட்ஸ் அமைந்து பழக ஆரம்பிக்கும்போதே,  அவர்களைப் பிரிய வேண்டி இருக்கும் . கொஞ்ச நாள் கடிதம் போடுவேன் . அப்புறம் அதுவும் இல்லாமலே  போய்விடும் . 

இந்த நிலையில்தான் எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசாக , அப்பா கேமரா வாங்கித் தர விரும்பினார் . ஆனால் அம்மா செயின் வாங்கித்தரச்  சொன்னார் . ”நகை வாங்குவது இன்வெஸ்ட்மென்ட் மாதிரி. கேமரா எதுக்கு?’ என்பது அம்மாவின் கருத்து .  ஆனால் அப்பா சொன்னது வேறு . ‘நகையை விட கேமராதான் பெரிய இன்வெஸ்ட்மென்ட். இது ஒரு கலை , அறிவு , தொழில்’  என்பது அவரது கருத்து .

எனக்கும் கேமராவே பிடித்தது. இப்படியாக அப்போதே நான் கேமரா பக்கம் சாய்ந்தேன் . 

கேமராவில் கண்டதை படம் பிடிப்பது .. அப்புறம் அதை பிரின்ட் போடுவதிலேயே அப்பாவின் வருமானம் காலியானது என்று வைத்துக் கொள்ளுங்களேன் . ” என்றவரிடம் , 

“ஸ்டில் கேமராவில் இருந்து மூவி கேமராவை நோக்கி முன்னேறியது எப்படி?”

என்று கேட்டால், உற்சாகமாகத்  தொடர்கிறார்

“ஒருவழியாக பள்ளிப் படிப்பு முடிந்த போது சென்னைக்கு வந்தோம் . இங்கே கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பி.ஏ. எக்கனாமிக்ஸ் படித்தேன் . அதில் முதல் மொழி ஆங்கிலம் . இரண்டாவது மொழி இந்தி . அடிப்படையில் என் அப்பா வட இந்தியர் . அம்மா தெலுங்கு . அதனால் மூணாவது மொழி தெலுங்குதான் எடுக்கவேண்டும் என்று அம்மா  கட்டளை போட்டு விட்டார் . நானும் அப்படியே எடுத்தேன் . 

ஆனால் என் எண்ணம் எல்லாம் தமிழின் மீதே இருந்தது. தமிழ் வார்த்தைகள் , ஒலி எல்லாம் என்னை அப்படி ஈர்த்தது . 

கல்லூரியில் எனது வகுப்பில் தெலுங்கு  புரஃபசர் பாடம் நடத்திக் கொண்டு இருப்பார் . பக்கத்தில் தமிழ் வகுப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்  மனைவி தமிழ் வகுப்பு எடுத்துக் கொண்டு இருப்பார் . நான் ஏக்கத்தோடு தமிழ் வகுப்பையே  பார்த்துக் கொண்டு இருப்பேன் . எனது வகுப்பு புரஃபசர் என்னை கோபத்தோடு சாக் பீசால் அடித்து , “அங்கேயே போயிரு ” என்று திட்டியது கூட உண்டு . அப்புறம் நான் அதையே சாக்காக வைத்து பலமுறை பொன்மணி அவர்களிடமே ஆர்வமாக பேசிக் கொண்டு இருப்பேன்.

அதே போல இசைஞானி இளையராஜாவின் இசை என்றால்… அடடா!  என் சுவாசமே அதுதான். ‘அவரது இசை மட்டும் போதும்’ இந்த உலகமே அதற்கு ஈடு இல்லை’ என்று இருப்பேன். 

கல்லூரி படிப்பு முடிந்ததும் தொழில் செய்ய ஏதாவது படிக்க வேண்டுமே என்று PGDCA படித்தேன் . 

அடுத்து எம் பி ஏ படித்தேன் . எல் எல் பி படித்தேன். இப்படி ஒரு படித்துக் கொண்டே இருந்த அதே நேரம் ஸ்டில் கேமராவை மீறி சினிமா கேமரா  மீது ஈர்ப்பு வந்தது . 

இந்த நிலையில் மீண்டும் குடும்பம் புனே போனது . நானும் அங்கே போனேன் . அங்கே ஒரு நிறுவனத்தில் பணியாற்றினேன் . அப்போது அந்த நிறுவனம் இசைக்கு என்று  ஒரு வெப்சைட் துவங்க விரும்பியது . 

நான் கிட்டத்தட்ட இந்தியாவின் ஆறு மாநிலங்களில் வாழ்ந்த நிலையில்,  எனக்கு ஒவ்வொரு மாநில மக்களைப் பற்றி அவர்களின் கலாச்சாரம் மாறும் வாழ்க்கை முறை பற்றி நன்றாகவே தெரியும். இசை விசயத்திலும் அப்படியே . 

இதை உணர்ந்த அந்த நிறுவனத்தின் எம் டி,  அந்த வெப்சைட்டை வடிவமைத்து பார்த்துக் கொள்ளும்  வேலையை என்னிடமே கொடுத்தார். music curry என்று பெயர் வைத்து நானே அதை நிர்வகித்தேன் . 

எனது சினிமா ஆர்வத்தை வளர்க்க அந்த வேலை ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. 

ஒரு சினிமாவாக என்னை முதன் முதலில் மிகவும் பாதித்த படம் மணிரத்னம் இயக்கிய தெலுங்குப் படமான கீதாஞ்சலி. அந்தப் படம் எனக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள், உணர்வுக் கொந்தளிப்புகள் இனி நமது துறை சினிமாதான் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. அதன் பின்னர் நான் பார்த்த கே.பாலச்சந்தர் மற்றும் கே. விஸ்வநாத் ஆகயோரின் படங்கள் எனக்குள் மணிரத்னம் ஏற்றி வைத்த சினிமா கனவை மேலும் வளர்த்தன 

மீண்டும் சென்னை வந்தோம் . 

எனது குடும்பம் எனது சினிமா ஆசையை அங்கீகரிக்கவில்லை . அம்மா , அப்பா,சகோதரர்கள் யாருமே ஏற்கவில்லை . எகனாமிக்ஸ் , கம்பியூட்டர் , எம் பி ஏ , சட்டம் எல்லாம் படித்த ஒரு பெண் ‘இது எதுவுமே வேண்டாம்’ என்று சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்ளும்  அளவுக்கு அவர்கள் கோடீஸ்வரர்கள் இல்லை .

அந்த நிலையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் . பெற்றோருக்கு சுமையாக இருக்க விரும்பாமல் சினிமாவில் ஜெயித்தபிறகு குடும்பத்தோடு சேர்ந்து கொள்வோம் என்ற முடிவோடு ஒரு தற்காலிக பிரிவை ஏற்படுத்திக் கொண்டு முழு நேரமும் சினிமாவை நோக்கி பயணிக்க முடிவு செய்தேன” என்கிறார் கண்களில் இப்போதும் தெரியும் அந்த உறுதியோடு

கேள்விகள் தொடர்கின்றன 

IMG_8382

“குறும்பட உலகத்தை நோக்கி திரும்பியது எப்படி ?”

“அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போதுதான் ஒரு நண்பர் நாளைய இயக்குனர் பற்றி கூறி “நீங்கள் ஏன் குறும்படம் இயக்கக் கூடாது?” என்று கேட்டார் . அது எனக்கு ஏதோ தேவ வாக்குப் போல இருந்தது . 

உடனே நாளைய இயக்குனர் போட்டியை நடத்தும் ஜே வி மீடியா நிறுவனத்தை தொடர்பு கொண்டேன் போட்டியில் இணைந்தேன் . “

“நாளைய இயக்குனர் போட்டியின் பல ரவுண்டுகளிலும்  ஏதாவது ஒரு பிரிவில் முதல் பரிசை வாங்கி இருக்கிறீர்கள். அப்படி என்னென்ன படங்களை எடுத்தீர்கள் ?”

“முதல் படம் கரன்சி. ஒரு பிச்சைக்காரனுக்கு எதிர்பாராத விதமாக கிடைக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு , கடைக்காரன் , போலீஸ்காரன், சாமியார், ஒரு ரவுடி , ஒரு விலைமகள் இப்படி பலபேரின் கைக்கு போய்விட்டு  எப்படி மீண்டும் அந்த பிச்சைக்காரன் கைக்கே வருகிறது என்பதுதான் அந்தப் படம் . அது சிறந்த இயக்கத்துக்கான  விருது வாங்கியது . 

இரண்டாவது படமான ‘இப்படிக்கு காதல்’,  பெண் ஓரினச் சேர்க்கை பற்றியது . லெஸ்பியன் ஒன்றும் தவறான உறவு அல்ல. அவர்களைப் பொறுத்தவரை அதுவும் ஒரு காதலே என்பதைச்  சொன்ன படம் அது . சிறந்த இயக்கம் , சிறந்த படம், சிறந்த கதைக்கான  முதல் பரிசு பெற்றது அந்தப் படம் 

அடுத்து, குழநதைகள் மீதான் செக்ஸ் கொடுமை பற்றிய படம் நையப்புடை .

சுஜாதாவின் எல்டராடோ கதையை அப்பாவின் கண்ணாடி என்ற பெயரில் குறும்படமாக எடுக்க, அது சிறந்த படம் சிறந்த இயக்கம் என்று இரண்டு விருதுகளை எனக்கு பெற்றுக் கொடுத்தது. அதில் நடித்த நடிகர் ஜெயப்பிரகாஷ் சிறந்த நடிகர் விருது பெற்றார். 

அடுத்த வாய் பேச முடியாத ஒரு ஜோடியின் காதலை சொன்ன படம் ‘பேச்சரவம் கேட்கிலையோ’ . இதில் வசனமே கிடையாது . இந்தப் படம் சிறந்த படம் , சிறந்த இயக்கம், சிறந்த இசை , சிறந்த நடிப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்றது.

கார் மூலம் விபத்தில் ஒருவனை இடித்து தள்ளிவிட்ட பெண் , அதை மறைக்க முயன்று,  படும் அவஸ்தையை சொன்ன படம் நடுக்கம். விபத்தில் சிக்கியவன் போலீஸ் தேடும் மிகப் பெரிய சமூக விரோதி என்பது கடைசியில் தெரிய  வரும் . இந்தப் படம் சிறந்த படம் சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த நடிப்புக்கான விருதுகளை பெற்றது.

இந்த ஆறு படங்களை அடுத்து இந்த நாளைய  இயக்குனர் சீசன் ஐந்தின் இறுதிப்போட்டிக்கு நான் இயக்கிய படம் ‘லைன் ஆஃப் கண்ட்ரோல்’ . 

இந்திய பாகிஸ்தான் எல்லையில் நமது தேசியக் கொடி காற்றில் பறந்து போய், பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்து விடும்.  எல்லைக்காவலில்இருக்கும்  பாகிஸ்தான் ராணுவ வீரன் அதை மிதித்துக் கொண்டு போவான் . அதை  சகிக்க முடியாதநிலையில்  

அதை எடுப்பதற்காக எல்லை தாண்டி கால் வைக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு தேசப்பற்று மிக்க இஸ்லாமிய ராணுவ வீரனை , பாகிஸ்தான் ராணுவம் பிடித்து விடும் .அந்தக் கொடியை மீட்க அவர் உயிர் துறப்பான்.இந்தப் படம்தான் ஒட்டுமொத்த அளவில்  சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

நடுவராக இருந்த இயக்குனர் வசந்த் அவர்கள் லைன் ஆஃப் கண்ட்ரோல் படத்தை பற்றி குறிப்பிடும்போது மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு ‘இதைப் பார்க்கும்போது ஒரு ‘குட்டி ரோஜா’ படத்தை பார்ப்பது போல இருக்கு ‘ என்று பாராட்டினார் . யாரால் தூண்டப்பட்டு பட உலகுக்கு வந்தேனோ அந்த மணிரத்னம் அவர்களின் படத்தின் குட்டி வடிவமாக நான் இயக்கிய படத்தை , நான் மதிக்கும் இயக்குனரான வசந்த் உருவகப்படுத்தியபோது நான் அடைந்த பரவசத்துக்கு அளவே இல்லை .” என்கிறார் நெகிழ்வான புன்னகையோடு.  

“எந்த ஹீரோவாவது உங்கள் படங்களை பாராட்டி இருக்கிறார்களா?”

“எனது கரன்சி படத்தை அகஸ்மாத்தாக பார்த்த நடிகர் ஷாம் அதன் பின்னர் என்னைப் பற்றி அறிந்து ,  சந்தித்தபோது பாராட்டினார் . அவருக்கு ஒரு கதை சொல்லி இருக்கிறேன் . அருண் விஜய்க்கும் ஒரு கதை சொல்லி இருக்கிறேன் ” 

இந்தப் படங்களை எல்லாம் தயாரிக்க எவ்வளவு செலவானது ? உங்களிடம் அந்த வசதி இருந்ததா?

“பரிசு பெற்ற பிறகு படத்துக்கு ஐந்தாயிரம் கொடுப்பார்கள் . அங்கே பணம் பெரிது இல்லை . தேர்ந்தெடுக்கப்படுகிற அங்கீகாரம்தான் முக்கியம் . என்னைப் பொறுத்தவரை இந்த ஏழு படங்களையும் தயாரிக்க இருபது லட்சரூபாய் செலவானது . நான் ஆங்கிலக் காப்பி ரைட்டராக வேலை செய்கிறேன் . அதில் சேர்த்த பணத்தில்தான் இந்தப் படங்களை எடுத்தேன் “

“பெண்கள் அதிகம் இயக்குனராக வர முடியாததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ?”

“பெண்ணாக இருப்பதுதான் காரணம் . சுலபமாக உதவி இயக்குனர் ஆக முடியாது . ஆண்கள் மட்டும் இருக்கும்போது சகஜமாக பேசிக் கொள்வார்கள் . அப்போது பயன்படுத்தும் வார்த்தைகளை ஒரு பெண் இருந்தால் பயன்படுத்த முடியாது. ஆண்கள் மட்டும் இருந்தால் தண்ணி அடிப்பார்கள் . இதில் எல்லாம் அந்தப் பெண்ணும் ஈடுபட முடியுமா என்பதில் இருக்கிறது தடை.

இரவு முழுக்க ஆண்கள் வேலை செய்வது சுலபம். ஒரு பெண் இருந்தால் பாதுகாப்பு தருவது ஒரு கூடுதல்வேலை . இந்த எல்லா விசயங்களிலும் பெண் ஆண் போலவே இருந்து விட்டால் பிரச்னை இல்லை . 

நான்  சொல்வது இதுதான் . உடலில்தான் ஆண் பெண் வித்தியாசம் . மற்றபடி கற்பனையில் , திறமையில் உழைப்பில் எந்த வித்தியாசமும் இல்லை எனவே பெண் என்பதை ஒரு பலவீனமாக பார்க்கத் தேவை இல்லை .

IMG_8386(1)

“தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியபோது பெண் என்பது பிரச்னையாக இருந்ததா?”

“ரொம்பவே இருக்கிறது . ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர்… அவரிடம கதை சொல்லப் போனேன் . அவர் என்னுடைய இப்படிக்கு காதல் படத்தை பார்த்து வியந்து போயிருந்தார், ‘ஒரு பெண்,  லெஸ்பியன் பற்றி தைரியமாக எடுத்து இருக்கிறாளே’ என்பது அவரது ஆச்சர்யம் .

அவரது சக தயாரிப்பாளர் ஒருவர்… அவரும் அந்த படத்தைப் பார்த்தார். நான் கதை சொல்ல விரும்புவது பற்றி பேச்சு வந்தபோது ‘ ஒரு பொண்ணு சினிமா டைரக்ட் பண்றது அவ்வளவு சுலபமா? சினிமாவில் மொத்தம் 24 கிராஃப்ட் இருக்கு , இங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி . ஒரு பெண்ணான உங்களால் அவங்கள சமாளிக்க முடியுமா ?” என்று கேட்டாரே ஒரு கேள்வி ! 

ஒரு பெண் என்பதால் இதில் என்ன சிரமம் இருக்கிறது . எனக்கு இந்த 24 கிராப்ட் பற்றி தெரியாதா ? அவர்களை எப்படி நடத்துவது என்று தெரியாதா ? யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்று தெரியாதா? ஆனால் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமானவரே இப்படி ஒரு சிந்தனையில் இருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. உண்மையில் பெண் என்பதால் ஒரு இயக்குனருக்கு எந்த சிரமமும் இருக்கப்போவது இல்லை. தவிர நான் இந்தப் படங்களை தயாரித்தும் இருக்கிறேன் . தயாரிப்பு செலவுகளை மிச்சம் பிடிப்பது எப்படி என்பது எனக்கு இப்போது நன்றாகவே தெஇர்யும். ஒரு வேலை நன் ஏதாவது பிரபல இயக்குனரிடம் பணியாற்றி விட்டு மட்டும் வந்திருந்தால் கூட இப்போது எனக்கு இருக்கும் அனுபவமும் புரிதலும் கண்டிப்பாக கிடைத்து இருக்காது”

“குறும்படப் போட்டிகளில் பெரிய இயக்குனர்களின்  ரசனையை வென்று பரிசு பெறுவது வேறு . ஆனால் வெள்ளித்திரைக்கு சினிமா எடுக்கும்போது வெகு ஜன ரசிகனை திருப்திப் படுத்தி வணிக ரீதயாக வெற்றி பெறுவது வேறு . நீங்கள் இயக்கப் போகும் சினிமா எந்த ரகம் ?”

“புரிகிறது . குறும்படப் போட்டிகளில் வெல்ல இம்ப்ரெஸ் பண்ண வேண்டும் . வெள்ளித்திரையில் வணிக ரீதியாக ஜெயிக்க ரசிகனை எண்டர்டெயின்மென்ட்பண்ண வேண்டும் . எனது திரைப்படங்கள் எண்டர்டெயின்மென்ட் படங்களாக அதே நேரம் டீசன்டான படங்களாக இருக்கும் . சொல்ல விரும்பும் நல்ல விஷயம் மென்மையாக இருக்கும் . 

கூடிய விரைவில் அப்படி ஒரு வெற்றிப் படத்துக்கான அறிவிப்போடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் ” என்கிறார்,  தலைநிமிர்ந்த தன்னம்பிக்கையோடு.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →