ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதிஷ் குமார் வழங்கும் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
” ஒரு படத்தை திரையிட முழுதாகத் தயார் செய்த பிறகும் தனியாக விளம்பரத்துக்கு என்று ஒன்றரைக் கோடி ரூபாய் பணம் இல்லாவிட்டால் படத்தை வெளியிட முடியாது என்ற நிலை இன்று இருக்கிறது . இப்போது இது ஒரு தவிர்க்க முடியாத செலவு .
இந்த விளம்பரச் செலவுக்கு ஒரு கட்டுப்பாடு வந்தால்தான் சிறு படங்கள் தப்பிக்க முடியும் என்ற நிலைமை . இன்னொரு பக்கம் சினிமா நிகழ்ச்சிகளை அதிகம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளே படங்களை வாங்குவது இல்லை என்பதால் தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
‘ சரி .. அது போன்ற சிறு படங்களை, தயாரிப்பாளர்கள் ஸ்லாட் எடுத்து போடுவது போல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி கொடுங்கள். வரும் லாபத்தில் தயாரிப்பாளரும் தொலைக்காட்சி நிர்வாகமும் ஆளுக்குப் பாதியாக எடுத்துக் கொள்ளலாம்” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கொடுத்த வேண்டுகோளையும் தொலைக்காட்சிகள் ஏற்கவில்லை .
எனவே இனி தனியார் தொலைக்காட்சிகளை தவிர்த்து விட்டு அரசுத் தொலைக்காட்சியான பொதிகைக்கு மட்டும் புதுப்பட காட்சிகளை கொடுப்போம் . அவர்களுக்கு மட்டும் விளம்பரம் கொடுப்போம் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் யோசித்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் மலையாள சினிமா உலகம் ஓர் அற்புதமான வழியைக் காட்டி இருக்கிறது. டி வி விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க இணைய பத்திரிக்கைகள் மூலம் பிரபலப்படுத்தப்பட்டு பிரேமம் என்ற மலையாளப் படம் பெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறது.
இதை ஒரு வழியாக வைத்து நாமும் விளம்பர செலவுகளை கட்டுப்படுத்தலாமா என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது. வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் இப்படி பல விசயங்களை அமுல் படுத்தும் திட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது .
நான் அதை ஒரு வாரம் முன்னதாக , வரும் 24 ஆம் தேதி முதலே ஆரம்பிக்க இருக்கிறேன் . எனது நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் அன்று ரிலீஸ் ஆகிறது . எனக்கு உங்கள் ஆதரவு வேண்டும் “என்றார் ஜே எஸ் கே சதிஷ் குமார் .
இதோடு விஷயம் முடியவில்லை. இனிமேல்தான் வருகிறது தலைப்பில் உள்ள விஷயம் .
ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த பல நாடகங்களுக்கும் பல திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதியவர், நேற்றைய பிரபல கதை வசன கர்த்தாக்களில் ஒருவரான கோபு பாபு .
இவர் எழுதிய மாதவன் கேசவன் என்ற நாடகத்தின் கதையை காப்பி அடித்துதான் இந்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் கதை அமைத்திருக்கிறது என்று கூறும் கோபு பாபு , இது குறித்து வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் சதிஷ்குமாருக்கு அனுப்பி இருக்கிறார் .
இதையே கேள்வியாக்கி சதிஷ் குமாரிடம் கேட்ட போது , ” கோபு பாபு என்னிடம் பேசினார் . நான் உடனே இது பற்றி எங்கள் படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவிடம் விளக்கம் கேட்டேன் . ‘கிடையவே கிடையாது’ என்று சொன்ன இயக்குனர் ‘1939 ஆம் ஆண்டு வெளிவந்த ஆஸ்க் எ போலீஸ் மேன் (ASK A POLICE MAN ) என்ற படத்தின் கதையில் நம் படத்தின் சாயல் இருக்கிறது .
அது கூட எனக்கு பின்னால்தான் தெரிய வந்தது . மற்றபடி நம் படத்தின் கதை ஷீரடி நகருக்கு அருகில உள்ள ஒரு கிராமத்தின் இயல்பை மையமாக வைத்து உருவான கதை’ என்று சொன்னார் .
இப்போது எங்கள் படத்தையே பார்க்காமல் கோபு பாபு , எங்கள் படத்தின் கதையை தனது கதை என்று கூறுவது என்ன நியாயம் ? ஒரு பேச்சுக்கு கோபு பாபு கூறுவது உண்மை என்றால் , அந்த ஆங்கிலப்படத்தைப் பார்த்து கோபு பாபு காப்பி அடித்ததாக பொருள் படும். . இப்போது நான் காம்பன்சேஷன் தரவேண்டும் என்றால் கோபு பாபுவுக்கு தருவதா ? இல்லை அந்த ஆங்கிலப்பட கதாசிரியருக்கு தருவதா ?
உலகத்தில் கதை என்று புதிதாக சொல்லும் வாய்ப்புகள் குறைவு. திரைக்கதையில் என்ன செய்து இருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும் . கதையைக் காப்பி அடித்து விட்டதாகக் குற்றம் சொல்பவர்கள் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ” என்றார் .