சரஸ்வதி எண்டர்டெயின்மென்ட் வழங்க , கே. லாவண்யா தயாரிப்பில் அறிமுகக் கதாநாயகன் பிரணவ், மோனிகா, ரிஷா , பாலாசிங் ஆகியோர் நடிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி நாஞ்சில் பி.சி. அன்பழகன் இயக்கி இருக்கும் படம் நதிகள் நனைவதில்லை .
படம் வெற்றியில் நனையுமா? பார்க்கலாம்.
முதுகலைப் பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கும் நாயகனை (பிரணவ்) , அப்பா (பாலாசிங்) வெறுப்பு வார்த்தைகளால் தினசரி சாகடிக்கிறார் . அம்மா இல்லாத அவனுக்கு பாசமுள்ள தங்கை மட்டுமே ஆதரவு . இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் விதவை அக்காவும் தம்பி மீது வெறுப்பையே உமிழ்கிறாள்.
அவன் மீது ஆசைப்பட்டு அவனை பணக்காரன் என்று நம்பி காதலிக்கிறாள் ஒரு பெண் (ரிஷா) . நாயகன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு குடி வரும் பெண்ணின் (மோனிகா) வீட்டில் புகுந்த திருடனை விரட்டப் போன நாயகன் , அவர்களுடன் நடந்த சண்டையில் ஒரு பெரும் இழப்புக்கு ஆளாகிறான் . .தான் காதலித்தவான் உண்மையில் ஏழை என்பது மட்டுமால்லாது இப்போது இன்னும் வழிவற்றுப் போன நிலையில் அவனால் பலன் இல்லை என்று காதலை விட்டுப் போய் விடுகிறாள்.
அதே நேரம் பக்கத்து வீட்டுப் பெண் அவனைக் காதலிக்கிறாள் . ஒரு நிலையில் அவனை தந்தை வீட்டை விட்டே துரத்த , யாரிடமும் சொல்லாமல் விலகும் அவன் மனம் வெறுத்த நிலையிலும் மக்களைக் காக்கும் செயற்கரிய ஒரு செயல் செய்கிறான் . அவனை ஒதுக்கியவர்கள் எல்லாம் இப்போது உறவு கொண்டாடி வர, அவன் எடுத்த முடிவுதான் இந்தப் படம்.
படத்தில் முதலில் கவர்வது சவுந்தர்யனின் பாடல் இசை . அதன் புண்ணியத்தில் ஒரு டப்பாங்குத்து பாடல் பட்டையைக் கிளப்ப, ஜேசுதாஸ் பாடும் பாடல் ஒன்று காதில் தேன் ஊற்ற , இன்னும் இரண்டு பாடல்களும் வசீகரிக்கின்றன.
அடுத்து இயக்குனர் எழுதி இருக்கும் வசனங்கள் அங்கங்கே அட என்று ஆச்சர்யப் பட வைக்கின்றன . உதாரணம் வேலை கிடைச்சிடுச்சா என்று கேட்கும் கதாநாயகியிடம், நாயகன் சொல்லும் ” நான் விக்கிரமாதித்தனா இருந்தா , வேலை வேதாளமா இருக்கு ” என்ற பதில் !
சண்டைகாட்சிகளும் பரவாயில்லை . ரிஷா பாடல்களில் வளைந்து நெளிந்து ஆடினால் , மோனிகா மழைப் பாட்டில் குலுங்கி குலுங்கி ஆடுகிறார் .
திருநங்கையை கவுரவப் படுத்தும் வசனம் , மாற்றுத் திறனாளிகளின் மன உறுதியை சொல்லும் பாடல் ஆகியவை பாராட்டுக்குரியவை .
அணை உடையும் கிராபிக்ஸ் காட்சி சிறப்பு.
நலிந்து போவோர்க்கு நம்பிக்கை ஊட்டும் கதை .