தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் மூன்றாவது செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், பொன்வண்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
“சங்க இடத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனம் கட்டிடம் கட்டுவதற்காக போடப்பட்டிருந்த ஒப்பந்த்த்தை ரத்து செய்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் ஒரு பேப்பரைக் காட்டி பத்திரிக்கையாளர் முன்பு சொன்னது உண்மை அல்ல .
இப்போதுதான் அதற்கான வேலை நடக்கிறது.முறைப்படி இன்றைய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
நடிகர் சங்கத்துக்கும் அறக்கட்டளைக்கும் நான்கு வங்கிக் கணக்கும் மட்டுமே இருப்பதாக சரத்குமார் சொன்னார் . ஆனால் உண்மையில் எட்டுக் கணக்குகள் உள்ளதை கண்டுபிடித்துள்ளோம் ” என்றார் பூச்சி முருகன்
”விரைவில் சங்க இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும். இதற்காக எந்தவிதமான ஸ்டார் நைட்டும் நடத்தப்பட மாட்டாது.
நன்கொடைகள் மற்றும் படம் தயாரிப்பதன் மூலம் பட்ஜெட்டை தயார் செய்துவிட்டு பின்பு கட்டிடம் கட்டப்படும் “என்றார் செயலாளர் விஷால்.
“நடிகர் சங்கம் மட்டுமல்லாமல் நடிகர் சங்க டிரஸ்ட் ஒன்றும் உள்ளது. அண்மையில் வெள்ள நிவாரணத்துக்காக பலரும் உதவ முன் வந்த போது அதை எங்களால் பெற முடியாத அளவுக்கு அதிர்சசி ஏற்பட்டது .
காரணம் 80 G என்ற வருமான வரிச் சட்ட சலுகையை நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகள் ரினிவல் செய்யவே இல்லை .
எனவே நடிகர் சங்கத்துக்கு யாராவது நன்கொடை கொடுத்தால் அதற்கான வரியையும் நன்கொடை தருபவர்களே கட்டவேண்டிய நிலைமை .பிறகு போராடி அந்த சலுகையை மீட்டெடுத்தோம் .
இரண்டு மாத கணக்கு மட்டும் தரப்படவில்லை என்று சரத்சார் சொல்லி இருந்தார் . ஆனால் டிரஸ்டுக்கான இரண்டரை வருட கணக்கும் சங்கத்துக்கான ஒரு வருடக் கணக்கும் இன்னும் வரவில்லை.
இதனால் எங்களது அடுத்த கட்ட செயல்பாடுகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது ” என்றார் பொருளாளர் கார்த்திக்
முழுமையான கணக்குகளை ஒப்படைக்கும்படி அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதன்பின்பும் அவர்கள் அதனை செய்யவில்லை யெனில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“சிம்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர நடிகர் சங்கம் பெரிய அளவுக்கு முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. சிம்பு ஒத்துழைக்கவில்லை.
இந்த விஷயத்தில் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அனைத்து உதவியையும் செய்ய தான் தயாராக இருந்தேன்” என்றார் தலைவர் நாசர்.
சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கம் அவரை ஏமாற்றிவிட்டதாக நடிகை ராதிகா தெரிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் நிர்வாகிகள்,
இது குறித்து பேசிய பொன்வண்ணன் ” சிம்பு செய்தது தவறுதான் . ஆனாலும் அவரை முறைப்படி செயல்பட வைத்து பிரச்னையைத் தீர்க்க ,நடிகர் சங்கம் தவறி விட்டது’ என்று சரத்குமார் குற்றம் சாட்டினார்.
ஆனால் அண்மையில் ராதிகாவோ ‘சிம்பு எந்த தவறும் செய்யவில்லை. அவரை காப்பாற்ற நடிகர் சங்கம் முயலவில்லை’ என்கிறார் . இப்படி அவர்கள் ஒரு குடும்பத்திலேயே ஆளுக்கொன்று பேசுகிறார்கள் .
காரணம் அவர்கள் நோக்கம். சிம்புவைக் காப்பாற்றுவது அல்ல . நடிகர் சங்கத்தைக் குறை சொல்வதுதான் ” என்றார்
சிம்புவை நடிகர் சங்கம் ஏமாற்றி விட்டது என்று சொன்ன ராதிகாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது. அதே நேரம் பீப் பாடல் விஷயத்திற்காக நடிகர் சங்கத்திலிருந்து சிம்புவை நீக்க சொல்வதை ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டது
பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த நிலையில் நம்மிடம் தனியாகப் பேசிய நடிகர் சங்க முக்கிய நிர்வாகி ஒருவர் ” பீப் சாங் விவகாரத்தில் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்கும்படியாக , சிம்புவிடம் இருந்து ஒரு கடிதம் வாங்கி வெளியிட்டு, பிரச்னையை முடிக்க முயன்றோம்
எங்களது தீவிர முயற்சியில் சிம்புவும் அதற்கு ஒத்துக் கொண்டார் .
மாலை ஐந்து மணிக்கு சிம்பு கடிதம் தருவதாக இருந்த நிலையில் , அவரிடம் பேசி குட்டையைக் குழப்பி காரியத்தை கெடுத்து விட்டார்கள் .
‘அப்படி கடிதம் கொடுத்தால் தேர்தலில் நம்மை வென்ற அவர்களின் காலில் விழுந்தது போல அர்த்தம் ” என்று சொல்லி சிம்புவை எமோஷனல் ஆக்கி, கடிதம் தராமல் தடுத்து விட்டார்கள் ” என்றார் .
யார் என்று கேட்டேன் . நேரடியாக அதற்கு பதில் சொல்லாமல் ” அதற்கு அப்புறம்தான் சிம்பு எந்த தவறும் செய்யவில்லை. அவரை காப்பாற்ற நடிகர் சங்கம் முயலவில்லை’ என்ற வார்த்தைகளே வெளியே வந்தன ” என்றார் அந்த நிர்வாகி .
தங்கமான பதில் !