
பெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் விசுவநாதன் தயாரிக்க பழ.ராஜ்கண்ணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் நாடோடி வம்சம் .
பிறந்த மண்ணில் உள்ள பிரச்னைகள் மற்றும் வறுமை காரணமாக தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பஞ்சம் பிழைக்க ஊர் விட்டுப் போகும் மக்களுக்கு பிழைக்கப் போன இடத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய படம் இது.
படத்தின் ஹீரோவான வாசன் கார்த்திக் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் .

நேரில் பார்ப்பதற்கு சுமாராகவும் படத்தில் பார்க்கும்போது பட்டையைக் கிளப்புகிற மாதிரியும் இருக்கும் அர்ச்சனா என்பவர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
மறைந்து போன காதல் தண்டபாணி முழுக்க நடித்து முடித்து தானே டப்பிங் பேசிவிட்டுப் போன கடைசிப் படம் இதுதானாம் .
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பாடல்கள் திரையிடப்பட்ட போது… அட ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்கள்!
அந்தக் காலத்தில் வந்த தூக்கு தூக்கி படத்தில் இடம் பெற்ற ‘ஏறாத மலைதனிலே…’ பாடலின் டியூனை உருட்டி புரட்டி உசிலி செய்து, “ஒய்யார நடை நடந்து….” என்று ஒரு பாட்டை போட்டு இருந்தாலும்,
ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு எல்லா பாடல்களிலும் அசத்தி இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா என்றால்….
பாடல்களை படமாக்கிய விதத்தில் இயக்குனர் , கலை இயக்குனர், நடன இயக்குனர் மூவரும் கலக்கி இருந்தார்கள். அதிலும் ஒரு பாடலில் துள்ளலும் துடிப்புமான இசைக்கு வழக்கமாக குமுற குமுற குத்தாட்டம் ஆட விடாமல் முகத்தின் அசைவுகளை வைத்தே அழகாக அசத்தி இருந்தார் டான்ஸ் மாஸ்டர் ஷோபி .
இந்தப் படத்துக்கு நிச்சயமாக பாடல் காட்சிகள் பலம் என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சீமான்,எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தாணு, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் செல்வமணி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, நடிகை தேவயானி போன்ற ‘வாழ்த்து வள்ளல்கள்’ பலரும் வந்து இருந்தார்கள்.
‘விஸ்வநாதன் புது தயாரிப்பாளரா இருந்தாலும் கில்லாடி தயாரிப்பாளர் போல… அதனால்தான் இவ்வளவு பேர் வந்து இறங்கி இருக்கிறார்கள்’ என்று நினைத்தால்,
பேசிய எல்லோருமே “கட்டாயம் வரணும்’னு சுப்பையா சொன்னார் . தட்ட முடியல . அதான் வந்தோம்” என்றார்கள்.
சம்மந்தப்பட்ட சுப்பையா சாமிக்கு மாலை போட்டுக் கொண்டு முகம் முழுக்க தாடியோடு காவி உடையில் ஓர் ஓரத்தில் எளிமையாக நின்று கொண்டு இருந்தார் .
நாடோடி வம்சம் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிக் கொண்டு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு எல்லோரும் வரக் காரணமாக இருந்த அந்த சுப்பையா பற்றி விளக்கமாகப் பேசி புரிய வைத்தார் அம்மா கிரியேசன்ஸ் சிவா
“விஜயகாந்த் ஓஹோன்னு இருந்த காலத்துல அவர்கிட்ட உதவியாளரா இருந்தவன் சுப்பையா .
அப்போ அவனுக்கு சம்பளமே நூறு ரூபாதான் . ஆனா உதவி கேட்டு வர்றவங்களுக்கு அந்த நூறு ரூபாவையும் கொடுத்துருவான் . அது மட்டுமில்ல சேர்த்து ஐம்பது ரூபாய் யார்கிட்டயாவது கடன் வாங்கி கொடுப்பான் .
அதை விட முக்கியமான விஷயம் . அந்த நூத்தி ஐம்பது ரூபாயையும் விஜயகாந்த் கொடுத்ததா சொல்லி கொடுப்பான். நல்லவன்னா நல்லவன் .. அநியாயத்துக்கு நல்லவன்..

அவன் எல்லாம் ஓஹோன்னு முன்னேறாததை பார்க்கும்போதுதான் இந்த பாவ புண்ணியங்களின் மேலேயே நம்பிக்கை இல்லாமப் போகுது ” என்றார் .
இப்படியாக சுப்பையாவுக்காக வந்தவர்கள் எல்லோரும் அடுத்த கட்டமாக , படத்தின் ஹீரோ வாசன் கார்த்திக் சிங்க முத்துவின் மகன் என்பதை குறிப்பிட்டு சந்தோஷப்பட்டுப் பேசினார்கள்.
சிங்கமுத்துவுக்கும் தனக்கும் உள்ள சகோதர பாசம் பற்றி தேவயானியும் , உதவி இயக்குனராக கஷ்டப்பட்ட காலங்களில் சிங்க முத்து வீட்டில் பல நாள் சுவையாக சாப்பிட்டது பற்றி சீமானும் பேசினார்கள்.
வாசன் கார்த்திக்கின் நடிப்பை (நியாயமாகவே) எல்லோரும் பாராட்டினார்கள் .
அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஒரு படி மேலே போய் ”வாசன் கார்த்திக்கை வச்சு ஒரு படம் தயாரிக்கணும்னு தோணுது” என்றதும்…
”இதுவரை நான் பயன்படுத்திக் கொள்ளாத ஸ்ரீகாந்த் தேவாவை இனி என் படத்துக்கு கட்டாயம் பயன்படுத்திக் கொள்வேன்” என்று இயக்குனர் விக்ரமன் கூறியதும்…..
நாடோடி வம்சம் படத்துக்கான அழுத்தமான பாராட்டுகள் என்பதுதானா உண்மை .
ஜெயித்து லாபம் தந்து…. மன்னன் வம்சமாகட்டும், நாடோடி வம்சம் !