அண்ணாமலையார் பிலிம்ஸ் சார்பில் மாதையன் தயாரிக்க, புதுமுகங்கள் செங்குட்டுவன் – அக்ஷயா ஜோடியாக நடிக்க , வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட இயக்குனர் ராதாபாரதி இயக்கி இருக்கும் படம் நண்பர்கள் நற்பணி மன்றம்.
படத்தின் ரசனைப் பணி எப்படி இருக்கிறது ? பார்ப்போம்
நண்பர்கள் நற்பணி மன்றம் என்ற அமைப்பை வைத்து ஊரில் பலருக்கும் நல்ல காரியங்கள் செய்து வரும் சத்யா(செங்குட்டுவன்) என்ற இளைஞனுக்கு திவ்யா என்ற இளம்பெண் (அக்ஷயா) மீது காதல் வருகிறது. வெள்ளை மாளிகை என்ற பெரும் பங்களாவில் தனது அப்பா (அன்பாலயா பிரபாகரன்) — அம்மா ஆகியோருடன் வாழும் திவ்யாவுக்கு ஒரு மன நிலை பாதிக்கப்பட்ட அக்காவும் இருக்கிறாள்.
வேறு சாதிப் பையனை அந்த அக்கா திருமணம் செய்து கொள்ள , வெறி கொண்ட திவ்யாவின் தாய்மாமன் அந்த மாப்பிள்ளையை வெட்டிக் கொல்ல, அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது அக்காவுக்கு . அந்த தாய்மாமன் திவ்யாவை மணந்து கொள்ளும் ஆசையில் இருக்கிறான்.
சிறார் வயதில் தன்னுடன் பழகிய அப்பு பிள்ளை என்ற சிறுவன் திடீரென தன்னை விட்டுப் பிரிந்த பாதிப்பு திவ்யாவுக்கு இன்னும் இருக்கிறது. ஆரம்பத்தில் சத்யாவின் காதலை ஏற்க மறுத்த திவ்யாவிடம் இருந்து பின்னர் லேசாக கிரீன் சிக்னல் தெரிகிறது.
திவ்யாவை சத்யா, தன் அப்பாவிடம் (ஆடுகளம் நரேன்) காட்ட, திவ்யா யார் என்பதை அறிந்த அப்பா அதிர்கிறார். ஒரு காலத்தில் தன்னிடம் வேலைக்கு வந்து தன்னை குடிபோதைக்கு அடிமையாக்கி சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு தெருவில் விட்டவனின் மகள்தான் திவ்யா என்பதை சொல்கிறார்.
அதே நேரம் தனது சிறுவயது நேசன் அப்புப் பிள்ளைதான் சத்யா என்பதை திவ்யா அறிகிறாள்.
திவ்யாவின் அம்மாவும் சத்யாவை தங்கள் மருமகனாக்கி, கணவன் செய்த பாவத்தை துடைக்க நினைக்கிறாள். சத்யாவின் ஆசைப்படி அவனது அம்மா அப்பா இருவரும் திவ்யாவை பெண் கேட்டு வர, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார் திவ்யாவின் அப்பா .
இதுதான் சமயம் என்று திவ்யாவை அவளது தாய்மாமன் பெண் கேட்க, ” தர முடியாது ” என்று திவ்யாவின் அப்பா சொல்ல, கோபமான தாய்மாமன் , திவ்யாவை கடத்திக் கொண்டு போய் மும்பை விபச்சார புரோக்கரிடம் விற்க முயல, திவ்யாவின் அப்பா சத்யாவின் அப்பாவைப் பார்த்து செய்த தவறுக்கு எல்லாம் மன்னிப்புக் கேட்டு , மகளைக் காப்பாற்ற சத்யாவை அனுப்பும்படி கெஞ்ச , அடுத்து என்ன நடந்தது என்பதே இந்த நண்பர்கள் நற்பணி மன்றம்.
செங்குட்டுவன் ஆர்வமாக நடிக்க முயல்கிறார்
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் நண்பர்கள் நற்பணி மன்றமடா பாடல் முணுமுணுக்க வைக்கிறது. மற்ற பாடல்களும் படத்தில் கேட்கும்போது ஒகே ரகமாக உள்ளது .
செல்வாவின் ஒளிப்பதிவில் பசுமையான லொக்கேஷன்கள் கண்ணுக்கு குளிர்ச்சி .
சத்யாவின் அம்மா சத்யாவின் அப்பாவிடம் , பழசையே நினைத்துக் கொண்டிருப்பதில் பலன் இல்லை என்று சொல்லும் விதம் நேர்த்தியாக இருக்கிறது .