ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக நடிக்க , நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் நண்பேன்டா . ரசிகர்களின் நட்பைப் பெறுமா படம் ? பார்க்கலாம்.
” பார்த்த உடன் பிடிக்கும் ஒரு பெண்ணை தொடர்ந்து ஒரே நாளில் மூன்று தடவை பார்த்தால் அவளைக் காதலித்து மணந்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்று ஜோசியர் ஒருவர் கூறிய நிலையில் , தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு வேலை தேடி வருகிறான் சத்யா (உதயநிதி ).
திருச்சியில் 2.5 ஸ்டார் ஹோட்டலை (5 ஸ்டார் ஹோட்டலில் பாதி !) எடுத்து நடத்தும் நண்பன் சிவக்கொழுந்து(சந்தானம்)வோடு தங்கும் சத்யா ஜோசியர் சொன்னதற்கு ஏற்ப ரம்யா என்ற பெண்ணை (நயன்தாரா ) பார்க்கிறான். காதல் வருகிறது.
ஒரு ‘உயிரை’க் கொலை செய்து விட்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்து ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு வங்கியில் உதவி மேலாளர் வேலை பார்க்கும் ரம்யா ஆரம்பத்தில் சத்யாவின் காதலை ஏற்காவிட்டாலும் சற்றே மனசு மாறும் ஒரு நிலையில் , ரம்யா செய்த உயிர்க் கொலை பற்றி சத்யா செய்யும் கிண்டல் ரம்யாவின் மனதை பாதிக்கிறது .
ரம்யா சத்யாவை புறக்கணிக்க, சத்யாவின் காதல் நிறைவேறியதா என்பதே இந்தப் படம் . ‘காமெடி படத்துக்கு இதுக்கு மேல் கதை எதுக்கு?’ என்று மறைமுகமாகக் கேட்கிறது படம் .
ஆரம்பத்தில் ஜெயிலில் இருந்து உதயநிதியும் சந்தானமும் வெளிவருவது …. ஜோசியர் சொன்னதாக சொல்லப்படும் வித்தியாச ஜோசியம் , ரம்யா செய்த கொலைக்கு பின்னால் இருக்கும் சில்லுண்டி டுவிஸ்ட் .. அதுவே சீரியசாகி பிரிவை நோக்கி கொண்டு போகும் விதம் , ஆரம்பப் பள்ளி காலம் முதலே சத்யா சிவக் கொழுந்துவால் பாதிக்கப்பட்ட நண்பன் கருணாகரன் இன்ஸ்பெக்டராகி பழி வாங்க முயல்வது , கடைசியில் அதிலும் வரும் டுவிஸ்ட் …
இப்படி, லாஜிக் இல்லாமை , சினிமாத்தனம் , யதார்த்தம் இப்படி எல்லாமும் கலந்து பயணிக்கும் திரைக்கதை ஒட்டு மொத்தமாக சுவாரஸ்யமாக இருக்கிறது .
ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராதா அடாவடியான விஷயம் ஒன்றை முதலில் சொல்லி விட்டு , பிறகு அதற்கு இயல்பான காரணம் சொல்லும் வகையில் காட்சிகளை வைத்து போரடிக்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் . உதாரணம் விளம்பரங்களில் நீங்கள் பார்க்கிற — நயன்தாரா சரக்கு கேட்கும் காட்சி !
வசனங்களில் , சற்றே பழமையான நகைச்சுவை , நாடகத்தனமான நகைச்சுவை, புன்னகை செய்ய வைக்கிற நகைச்சுவை , வாய் விட்டு சிரிக்க வைக்கிற நகைச்சுவை என்று எல்லாமும் கலந்து கட்டு அடித்திருப்பது படத்தின் பலம் .
உதயநிதி நடிப்பில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் . அதே நேரம் நடனத்தில் அடேங்கப்பா என்ற அளவுக்கு சிறப்பான முன்னேற்றம். வசனங்களை பேசும் மாடுலேஷனிலும் பல படிகள் மேலே ஏறி இருக்கிறார் .
நயன்தாராவுக்கு வழக்கமான கேரக்டர் , வழக்கமான கவர்ச்சி, நடிப்பு , நடனம் , சிரிப்பு , முறைப்பு , விடைப்பு, விறைப்பு, முகத்தில் அந்த .. அந்த ….. ஆனால் இன்னும் போரடிக்கல .
வழக்கமான் வசன டெலிவரி நகைச்சுவைக்கும் அப்பாற்பட்டும் சிரிக்க வைக்க முயல்கிறார் சந்தானம். அஹ ஹஹஹா…. அஹ ஹஹஹா… அஹ ஹஹஹா …! . சந்தானத்துக்கு ஜோடியாக போதைக் கண் ஷெரின் . ஆனால் kick was kicked out.
பாலசுப்பிரமணியெமின் ஒளிப்பதிவில் எல்லாமே எல்லாருமே அழகாக இருக்கிறார்கள் .
ஹாரீஸ் ஜெயராஜின் இசை பார்டரில் பாசாகிறது . அதுக்கும் மேலே ஃபர்ஸ்ட் கிளாஸ், டிஸ்டிங்கஷன், ஹானர்ஸ் , கோல்டு மெடல்னு நிறைய இருக்கே சார்.
பிரபாகரின் கலை இயக்கமும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் நல்ல புத்தகத்தில் சேர்க்கிறது . அதாங்க குட் புக் ! அஹ ஹஹஹா…. அஹ ஹஹஹா… அஹ ஹஹஹா …!
நண்பேன்டா… பகையில்லை .