ஜி அண்ட் கே புரடக்ஷன்ஸ் சார்பில் ஷஷாங்க் தயாரிக்க, டெல்லிகணேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மணிகண்டன் என்பவர் எழுதி இயக்கி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் 120 நிமிடப் படம் ‘நரை எழுதும் சுயசரிதம்’ .
இந்தியன் படத்துக்காக வைரமுத்து எழுதிய பச்சைக் கிளிகள் தோளோடு பாடலில் வரும் வரி இந்த நரை எழுதும் சுயசரிதம் .
ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து 36 வருடம் உழைத்த வைத்தியநாதன் (டெல்லி கணேஷ்) பணி ஒய்வு பெற இன்னும் ஒன்பது மாதம் இருந்தும் அலுவலகத்தை கணினிமயமாக்கும் திட்டத்தின் விளைவாக வைத்தியநாதனுக்கு கணினி தெரியாது என்பதால் முன்கூட்டியே கட்டாய ஒய்வு கொடுக்கிறது நிர்வாகம் . (கம்பியூட்டர் கற்றுக் கொள்ளவே ஆறு மாதம் ஆகும் . அதன் பின்னர் மூன்று மாதம்தான் பணியில் இருக்கப் போகிறவருக்கு எதற்கு கணினிப் பயிற்சி கொடுக்கும் செலவை ஏற்க வேண்டும் என்பது கம்பெனியின் கணக்கான முடிவு )
அலுவலகம் வீடு இரண்டிலும் நேர்மை, செய் நேர்த்தி, கண்டிப்பு , இவற்றோடு இருந்து அதனால் பலரின் முகச் சுளிப்புக்கும் ஆளான வைத்தியநாதன் பதவி ஒய்வு பெற்ற மறுநாள் முதலே செல்லாக் காசு ஆகிறார் . வீட்டில் அவரை எல்லோரும் ரேஷன் கடிக்கும் , மாவு அரைக்கவும் , பேத்தியை பள்ளிக்கு அனுப்பவும் வேலை வாங்குவது அவருக்கு பெரிய கவுரவக் குறைச்சலாகப் படுகிறது . அதனால் வீட்டில் இருக்கவே முடியவில்லை .
சரி … நாம் பணியாற்றிய அலுவலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போனால் அவர் பணியாற்றிய சீட்டில் புதிதாக உட்கார்ந்துள்ள ஒரு இளைஞன் வேலை நேரத்தில் வீடியோ கேம்ஸ் ஆடுகிறான் . அவனிடம் சண்டை போட்டு , தன்னுடைய திறமையாக இவர் கூறும் விசயங்களை எல்லாம் ஜஸ்ட் ஒரு டேட்டா பேஸ் என்று அவன் சொல்ல கைகலப்பாகிறது . அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப் படுகிறார் வைத்தியநாதன் .
இதுவரை இல்லாத பழக்கமாய் மது அருந்திவிட்டு வரும் வழியில் ஒரு இளைஞன் மேல் வண்டியை ஏற்ற , அவன் தட்டிக்கேட்க இவர் போதையில் அவனை அடிக்க , அவன் திரும்பி ஒரு அரை விட மயங்கி விழுகிறார் வைத்தியநாதன் . பயந்து போன அந்த இளைஞன் மணிகண்டன் (மணிகண்டன்) அவரை மயக்கம் தெளிவித்து சாரி கேட்க , போதை தெளிந்த நிலையில் அவரும் அவனிடம் சாரி கேட்க , மணிகண்டனைப் பற்றி அறிகிறார் வைத்யநாதன் .
வேலையில் இருந்து ஒய்வு பெற்றது இவர் பிரச்னை என்றால் வேலையே கிடைக்காதது அவன் பிரச்னை . ஊரில் இருந்து சென்னை வந்து நண்பன் சிபாரிசில் ஒரு அழுக்கான டொக்கு ரூமில் தங்கிக் கொண்டு தினம் இரண்டு டீயை மட்டும் ஏச்சுப் பேச்சுகளோடு ஓசியில் வாங்கிக் குடித்து விட்டு வேலை தேடும் கொடூர ஏழ்மை அவனுடையது.
இருவருக்கும் இடையில் ஒரு நட்பு அமைகிறது . மணிகண்டனுக்கு அடிப்படை உதவிகளை வைத்யநாதன் செய்கிறார். பதிலாக வைத்யநாதன் வீட்டில் எப்படி நடந்து கொண்டால் சந்தோஷம் நிலவும் என்பதை இளைய தலைமுறையின் கோணத்தில் அவன் புரிய வைக்கிறான் . அதன் படி தனது இரண்டு மகன்கள் மருமகள் பேத்தி என்று எல்லோரும் சந்தோஷப்படும்படி அவர் நடந்து கொள்கிறார் .
ஒரு பெண்ணை விரும்பும் மணிகண்டன் தனது ஏழ்மை காரணமாக அதை சொல்லத் தயங்க, அவனுக்கு நம்பிக்கை ஊட்டி வேலை கிடைத்த உடன் காதலை சொல்லு என்று அறிவுரை கூறுகிறார் வைத்யநாதன்.
மணிகண்டன் – வைத்யநாதன் நட்பு என்பது சேர்ந்து இல்லாத போதும் நடந்த விசயங்களை நினைத்து சிரிக்கும் அளவுக்கு வைத்யநாதனுக்கு உற்சாகம் தருகிறது .
வைத்யநாதனின் மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் அவரை மன நல மருத்துவமனையில் சேர்க்க அவரது குடும்பம் முடிவு செய்ய , அதே நேரம் மணிகண்டனுக்கு ஒரு வேலை கிடைக்க , வைத்யநாதன் எடுக்கும் முடிவே இந்தப் படம் .
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு ரன்னிங் ரோலில் அசத்தி இருக்கிறார் டெல்லிகணேஷ் .
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருப்பதோடு ஏழை இளைஞன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து இருக்கிறார் மணிகண்டன் .
ஒளிப்பதிவு , இசை எல்லாமே அருமை .
தனுஷின் ஓட ஓட ஓட தூரம் குறையல பாட்டை , செல்வராகவனை விடவும் சிறப்பாக , அந்தப் பாட்டின் மேம்போக்கான வடிவம் , உள்ளீடு , அலட்சியமான மதிப்பீட்டுக்கு மாற்றான சிந்தனை , சரியான சந்தர்ப்பங்கள் என்று படம் முழுக்க பயன்படுத்தி அசத்தி இருக்கிறார் மணிகண்டன் . அருமை .
நேரம் போவதே தெரியாமல் படம் 120 நிமிடம் ஓடுகிறது . இதில் மணி கண்டனின் காதல் டிராக்கையும் கொஞ்சம் டெவலப் பண்ணி இன்னும் 25 நிமிடம் நீட்டி இருந்தால் வணிகரீதியில் திரையரங்குகளுக்கே கொடுக்கலாம் . அவ்வளவு சிறப்பாக இருக்கிறது படம் – இப்போது திரையரங்கில் ஓடிக் கொண்டு இருக்கும் பல படங்களைக் காட்டிலும். !
சேரனின் C2H வெற்றி பெற மிகப் பொருத்தமான படம் இது .
சேரனும் ஷஷாங்க்கும் சேர்ந்து செய்யலாம் .