காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை ஆகிய படங்களை இயக்கி, தயாரித்துள்ள நாஞ்சில் பி.சி.அன்பழகன், இயக்கி தயாரிக்கும் நான்காவது படம் ‘நட்சத்திர மழை’.படத்திற்கான ஏழு பாடல்களையும் அவரே எழுதுகிறார். ஆண்டனி என்பவர் இசையமைக்கிறார்.
படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் செப்டம்பர் 21ஆம் தேதி, காலை சென்னை தியாகராயா நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் ஹாலில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் ரோசையா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.ஆர், பின்னணி பாடகர் யேசுதாஸ், பின்னணி பாடகி வாணி ஜெயராம், சமூக சேவகர் சிவகுமார், நடிகர்கள் குண்டு கல்யாணம், அணு மோகன், நடிகை ரிஷா, தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
ஆளுனர் ரோசையா, கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் கே.ஆர், கிளாப் போடு அடிக்க, ரிஷா நடிப்பில் படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது.
ஆளுனர் ரோசைய்யா பேசுகையில், “பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இன்றி, சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தனது படங்களின் மூலம் தொடர்ந்து சொல்லி வரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு எனது பாராட்டுக்கள். இந்த நாளில் தொடங்கியுள்ள நாஞ்சில் பி.சி.அன்பழகனின், இந்த நட்சத்திர மழை படம் பெரிய வெற்றியடை வேண்டும்.” என்றார்.
இயக்குனரும் தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், நிகழ்ச்சியில் நன்றியுரை கூறி பேசுகையில், “மருத்துவத்தை சேவையாக்கி, சமூக அக்கறையோடு வாழ்வை கடந்து செல்லும் இளைஞனை, காதல் மழையில் நனைந்த மயிலிறாகால் வருடி கொடுக்கும், உணர்வுகளுக்கு உருவங்கள் தரும் படைப்பே ‘நட்சத்திர மழை’.மனத்திருப்தியாய் இயங்குபவனே உண்மையான பணக்கரான், மற்றவர்களெல்லாம் இயந்திரங்கள் துணையுடன் இயங்கும் வெற்றிட வெறுமைகளே.குணங்களை வெறுத்தாலும் மனிதனை – மனிதன் நேசிக்க வேண்டும், என்கிற கருத்து குவியல்களின் திரை சிற்பமே ‘நட்சத்திர மழை’.
புது வருடத்தில் , கடவுளின் கைரேகையான கன்னியாகுமரியில் ‘நட்சத்திர மழை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இரண்டு கதாநாயகன், இரண்டு கதாநாயகிகள் கொண்ட ‘நட்சத்திர மழை’ யின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.