ரத்தமயமான ஒரு குறும்படப் போட்டி

National Short Film Competation on Voluntary Blood Donation Press Meet Stills (4)
ஜூன் 14 உலக ரத்த தான நாள் .

அதை ஒட்டி ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பல்கலைக் கழகமும் …

 ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் தனம் செய்வோருடன் தொடர்பு ஏற்படுத்தி ரத்தம் பெற்றுத் தரும் பணியை பல காலமாக செய்து வரும் www.friends2support.org என்ற இணையதள நிறுவனமும் சேர்ந்து….

 ரத்த தானத்தை வலியுறுத்தும்  தேசியக்  குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்து இருக்கிறது .

www.friends2support.org  அமைப்பின் கணிப்பொறிப் பயன்பாடுகளை (APPs) உருவாக்கித் தரும் www.callzilla.com என்ற அமைப்பும் இதில் முக்கிய பங்காற்றுகிறது .

 உலக அளவில் ரத்த தானம் என்ற கருத்தின் அடிப்படையில் நடத்தப்படும் முதல் குறும்பட விழா இதுதான் என்கிறார்கள் .

இந்தக் குறும்படப் போட்டியின் விவரங்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் ஐசரி கே. கணேஷ், இயக்குனர்கள் பாண்டியராஜன்,  ராம், ஏல் .எல். விஜய், யூகி சேது, மற்றும் நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் ..

நல்ல தமிழில் தொகுப்புரை வழங்கி,  நிகழ்ச்சிக்கு  ரசனை ரத்தம் தானம் செய்த சிவகுமார் “ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைப்பது இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமான ஒன்று ” என்றது , அசத்தல் .

இயக்குனர் ராம் பேசும்போது ” ஒவ்வொரு குறும்படத்தையும் உருவாக்குபவர் சார்பிலேயே 100 பேராவது  பார்ப்பார்கள். இந்த போட்டிக்கு 500 குறும்படங்கள் வந்தால் 5000 பேர் குறைந்த பட்சம் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை அடைவார்கள். ஆக இந்த போட்டியின் ஆரம்பமே ஒரு சாதனைதான்” என்றார் .

www.friends2support.org அமைப்பினர் ஐசரி கணேஷை அணுகியபோது,  அவர்களை உடனே இயக்குனர்  ஏ எல் விஜய்யிடம்தான் அனுப்பி வைத்தாராம் கணேஷ். காரணம் இயக்குனர் ஏ எல் விஜய் ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்.

 குறும்படப் போட்டி பற்றி எதையுமே அறியாமல் இருந்த www.friends2support.org அமைப்பினருக்கு எல்லா விசயங்களையும் சொல்லிக் கொடுத்ததோடு யார் யாரை எல்லாம் நடுவராக போடலாம் என்று திட்டமிட்டுக் கொடுத்ததும் போட்டியை வரையறை செய்ததும் விஜய்தானாம் .

 “நான் அடிக்கடி ரத்தம் கொடுப்பேன் . காரணம் என் ரத்தம் பி நெகட்டிவ் என்ற அரிதான வகை. அப்படி இருக்க நான் ரத்தம் கொடுக்க மறுத்தேன் என்றால் சம்மந்தப்பட்ட நோயாளி பிழைப்பது கடினம் . அதனால் மறுக்காமல் கொடுத்து விடுவேன் ” என்று சொல்லி வியக்கவும் நெகிழவும் வைத்தார்  ஏ.எல். விஜய் .

National Short Film Competation on Voluntary Blood Donation Press Meet Stills (2)

யூகிசேது பேசும்போது  ” ஆம்பளைங்களால தாயாக முடியாதுன்னு சொல்றாங்க.  ஒருவர் ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தால் மூன்று பேரைக் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். ஆக ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தால் மூணு பேருக்கு உயிர் கொடுக்க முடியும். உயிர் கொடுக்கறவதானே தாய். அப்போ ரத்தம் கொடுக்கும் ஆம்பளைங்க எல்லாமே தாயாக முடியும் ” என்றது , சிலிர்க்க வைத்தது . (பேசாம இதையே ஒரு குறும்படமா பண்ணலாமே !)

“என்னை ஒரு SHORT ஆன FILM MAKER (உயரத்தில்) என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நான் ஒரு SHORT FILM MAKER கூட ” என்று ஆரம்பித்த பாண்டியராஜன் ,தான் எடுத்த பல குறும்படங்களையும் அதில் பெற்ற உலகளாவிய விருதுகளையும் பற்றிக் குறிப்பிட்டது பலருக்கும் தெரியாத ஆச்சர்ய செய்தி.  “இந்த அமைப்புக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார் அவர் .

“நான் இதுவரை ரத்த தானமே செய்தது இல்லை . எதோ ஒரு பயம் எனக்கு ” என்று ஆரம்பித்த விவேக் ” ஆனால் எனது மேனேஜரும் நடிகருமான செல் முருகன் அடிக்கடி ரத்ததானம் செய்தவர் ” என்றார் . தொடர்ந்து “எல்லோரையும் ரத்தத்தின் ரத்தமே ‘ என்று அழைத்த புரட்சித் தலைவரின் அன்புத் தொண்டர் நடிகர் ஐசரி வேலன். அவரது மகன் கணேஷ் . ரத்ததானம் பற்றிய குறும்படப் போட்டியை நடத்த இவரை விட பொருத்தமானவர் யார் இருக்க முடியும் ? “என்றார் .

“எங்கள் பல்கலைக் கழகத்தில் ரத்தக் கொடையாளர் அமைப்பு என்ற ஒரு அமைப்பை தொடர்ந்து நடத்தி வருகிறோம் . எனவே இந்த www.friends2support.org  அமைப்பினர் வந்து இது பற்றிப் பேசிய உடன் எனக்கு அதன் அவசியம் புரிந்தது . உடனே குறும்படப் போட்டி விஷயத்தை செயல்படுத்த முடிவு செய்தோம் ” என்றார் ஐசரி கணேஷ் .

நிகழ்ச்சியில்,  ஏன் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு ஆவணப் படத்தை திரையிட்டார்கள் . அதில் சொல்லப்பட்ட விவரங்கள் ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டியவை .

National Short Film Competation on Voluntary Blood Donation Press Meet Stills (9)ஒருமனிதன் ஏன் ரத்த தானம் செய்ய வேண்டும்?

1) மனித ரத்தத்தை மனித உடலுக்கு அப்பால் வெளியே உருவாக்கவே முடியாது . அதற்கு மாற்றே இல்லை . குருதிக் கொடை என்பது உங்கள் உயிரை இழக்காமல் இன்னொருவருக்கு  உயிர் கொடுப்பதற்கு சமம்.

2) நம் நாட்டில் ஒவ்வொரு இரண்டு நிமிடத்திலும் யாராவது ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது .

3) ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டுக்கு நாலு கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது . ஆனால் கிடைப்பது 40 லட்சம் யூனிட் மட்டுமே பற்றாக்குற  3 கோடியே 60 லட்சம் யூனிட் ! அதாவது 9/10 என்ற அளவில் பற்றாக்குறை.

4) ஒவ்வொரு நாளும்,  நம் நாட்டில் 38000 ரத்த தானம் செய்பவர்கள் தேவைப் படுகிறார்கள் .

5) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புற்று நோய் சிகிச்சையில் இருக்கும் ஒரு மில்லியன் உயிர்களுக்கு ரத்தத்தின் தேவை கட்டாயம் . அதை நாம்தான் கொடுக்க முடியும்.

6) கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஒரு தனி நபரின்  உயிரைக் காப்பாற்றவே 100  யூனிட் ரத்தம் வேண்டும் .

7) ரத்ததானம் செய்தால் மாரடைப்பு வாய்ப்பு வெகுவாகக் குறையும் . சிறு நீரகம் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளில் பிரச்னை வரும் வாய்ப்பு குறையும் .

8)  டாக்டர்களால் மட்டும்தான் உயிரைக் காப்பற்ற முடியுமா என்ன ? எம் பி பி எஸ் படிக்காமலேயே உயிரைக் காப்பாற்றும்  வழி .. ரத்ததானம் .

9) இதைப் பார்த்த போது எனக்கு தோன்றிய ஒரு சொந்தக் கருத்து

நீங்கள் ஒரு ரூபாய் தானம் செய்தால்  கூட அதை மீண்டும் வெளியில் சம்பாதிக்கதான் வேண்டும் . அது தானாக உங்கள் பணப் பெட்டிக்குள் முளைத்து விடாது . ஆனால் ரத்த தானம் செய்தால் அது சில மணி நேரங்களில் உங்கள் உடம்புக்கும் தானாக ஊறும். இது உங்கள் உடம்பில் சரியான வளர்சிதை மாற்றத்துக்கும் (ரீஜெனோவேஷன்) உதவும் . ஆக உங்களுக்கு  எந்த இழப்பும் ஏற்படுத்தாமலேயே உங்களால் ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி உங்கள் ரத்தத்துக்கும் அப்புறம் கடவுளுக்கும் மட்டுமே இருக்கிறது

இதைப் படித்த எல்லோருக்கும் ரத்ததானம் செய்யும் எண்ணம் வரவேண்டும்

இனி குறும்படப் போட்டி பற்றிய விவரங்கள் .

National Short Film Competation on Voluntary Blood Donation Press Meet Stills (10)குறும்படங்கள் டைட்டில் கார்டுகளுடன் சேர்த்து 30 நொடிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும் . மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆவணப் படம் எனப்படும் டாக்குமெண்டரியாக இருக்கக் கூடாது.

2015 ஜனவரி ஒன்றாம் தேதி அல்லது அதற்கு பிறகு எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும் .

எந்த மொழியில் எடுக்கப்பட்டு இருந்தாலும் ஆங்கில சப் டைட்டில் கட்டாயம் இருக்க வேண்டும் .

வேறு எந்த திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்ட படமாக இருக்கக் கூடாது.
படங்கள் MPEG4 அல்லது AVI  format-ல் படமாக்கப்படலாம்   16.9/16.9Full Height Anamorphic  விகிதத்தில் DV HDV ஆக இருக்கலாம்

கலந்து கொள்ள விரும்புவர்கள் . www.friends2support.org/shortfilm என்ற இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து  பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளக் குறியீடு வழங்கப்படும் . நீங்கள் குறும்படத்தை அனுப்பும்போது அந்தக் குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.

போட்டிக்கு வரும் படங்களில் இருந்து 100 படங்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்படும் . இந்த 100 படங்களில் இருந்து யூகி சேது, விவேக்,ஏ.எல்.விஜய், பிரபு தேவா,  நான் ஈ நானி , உள்ளிட்ட நடுவர் குழு 15 படங்களை தேர்ந்தெடுக்கும் . இந்த 15 படங்களும் ஹைதராபாத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் .

இந்த 15 படங்களை உருவாக்கிய படைப்பாளிகளுக்கான அனைத்து பயண செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் . அவருடன் இன்னொருவரும் உடன் வரலாம் .

சமுதாயத்தின் பல்துறை வல்லுனர்கள் அடங்கிய நடுவர் குழு பொது மக்கள் முன்னிலையில் இந்த 15 படங்களைப் பார்த்து அவற்றில் இருந்து மூன்று படங்களைத் தேர்ந்தெடுக்கும். முதல் பரிசு 1 லட்ச ரூபாய் . இரண்டாவது பரிசு 50000. மூன்றாவது பரிசு 25000.

மேல் விவரங்களுக்கு சென்னையில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள். 98415 78877  /  94433 29485

தமிழ்ப் படங்களுக்கே புதுரத்தம் பாய்ச்ச வேண்டிய சூழலில்… ரத்தத்துக்கு புதுப் படங்கள் பாய்ச்சக் கிடைக்கும் இந்த வாய்ப்பை…

 ஆர்வம் உள்ளோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .  வாழ்த்துகள் !

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →