நட்பதிகாரம் 79 @ விமர்சனம்

natpu 3

ஜெயம் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில் டி. ரவிகுமார் தயாரிக்க, ராஜ் பரத், அம்ஜத்கான், ரேஷ்மி மேனன், தேஜஸ்வி மடிவாடா ஆகியோர் நடிப்பில், 

கண்ணெதிரே தோன்றினாள் இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் படம் நட்பதிகாரம் – 79.  இது வெற்றி அதிகாரமா ? இல்லை ஸ்ஸ்ஸ்  கொட்ட வைக்கும் அளவுக்கு அதி  காரமா ? பார்க்கலாம் 

நண்பர்களுடன் கேரம் விளையாடிப் பொழுதுபோக்கும் ,– வேலை தேடிக் கொண்டிருக்கும் –   இளைஞன் ஜீவா(ராஜ் பரத்).
அப்படி அவன் விளையாடும் ஓர் இரவில்,  தனி ஆளாக  காரில் இருந்து இறங்கி,  அவனிடம் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்கிற–  ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழிலில்  இருக்கிற …
 தில்லான நவீன இளம்பெண் பூஜா (தேஜஸ்வி மடிவாடா) .
natpu 999
அந்த சந்திப்பைத்  தொடர்ந்து இருவருக்கும்  காதல் மலர்கிறது . இது ஒரு ஜோடி . 
மயிலாப்பூர் வாழ் , மனைவியை இழந்த பிராமணர் ஒருவரின் (எம் எஸ் பாஸ்கர்) மகளான பரத நாட்டியக் கலைஞர் மஹாவுக்கும் ( ரேஷ்மி மேனன் ), 
பணக்கார இளைஞனும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழிலில் ஆர்வம் உள்ளவனுமான அரவிந்துக்கும் (அம்ஜத்கான்) காதல் இருக்கிறது . 
இந்த இரண்டு ஜோடிக்குள்ளும் நட்பு மலர்கிறது . சேர்ந்தே இயங்குகிறார்கள் . 
ஆனால் ஜீவாவுக்கும் மஹாவுக்கும் குணத்தில் நிறைய ஒற்றுமை உண்டு . இருவரும் கன்வென்ஷனலான ஆட்கள் . 
natpu 7
அதே போல அரவிந்துக்கும் பூஜாவுக்கும் குண ஒற்றுமை உண்டு . இருவரும் ஃபிரீக் அவுட்  தன்மையும் மேற்கத்தியக் கலாச்சாரத் தாக்கமும் கொண்டவர்கள் .
அதனால் இந்த நால்வருக்கும் இப்படி ஒரு குறுக்கு சாலாக , ரசனை மற்றும்  நடவடிக்கைகளில் ஒற்றுமை காரணமாக நட்பு வலுக்கிறது 
இந்த நிலையில் பூஜா தன் வறுமையை வைத்து தன்னை அவமானம் செய்வதாக உணரும் ஜீவா,  மனம் வெதும்பி அவளிடம் இருந்து தற்காலிகமாக சற்று விலகுகிறான் .
இந்த ஜீவா — பூஜா காதல் ஜோடிக்குள் புரிதல் குறைபாடு ஏற்படுகிறது . 
அதே போல,   மகாவை திடீர் ரகசிய பதிவுத் திருமணத்துக்கு வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறான் அரவிந்த் . மஹாவும் வேறு யாரும் துணைக்குஇல்லாத தன் அப்பாவுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டுக் கிளம்புகிறாள். 
natpu 5
ஆனால் அரவிந்த்?
தன் தந்தைக்கு ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாக , மஹாவை மறந்து (?!) அவசரமாக வெளிநாடு போய் விடுகிறான் . பதிவு அலுவலகத்துக்கு வந்த மஹா அரவிந்த் வராததால் சிக்கலுக்கு ஆளாகிறாள் .
மீண்டும்  வீட்டுக்கு போக முடியாத நிலையில் ஜீவாவின் உதவியை நாடுகிறாள் .
மகள் ஓடிப்போன  வேதனையில் மஹாவின் அப்பாவுக்கு மாரடைப்பு வர, அவருக்கு சிகிச்சை நடக்கும்போது உதவிக்கு வருகிறது ஜீவாவின் அம்மா அப்பா, அண்ணன் , அண்ணி , தங்கை அடங்கிய பாசமான குடும்பம் . 
 மஹாவின் அப்பா சற்றே குணம் ஆகிறார் . அதோடு ஜீவாதான் மஹாவின் காதலன் என்று தவறாக யூகித்து முடிவு செய்து,  ஜீவாவின் குடும்பத்தரை சந்தித்துப் பேசுகிறார் .
அப்படியே நம்பும் ஜீவாவின் குடும்பமும் ஜீவா  ஊரில் இல்லாத நிலையில்,  அவனை கேட்காமலேயே  ஜீவாவுக்கும்  மஹாவுக்கும்  திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள் .
natpu 1
விஷயம் ஜீவா , மஹா இருவருக்கும்  தெரியும் நிலையில்,  மஹாவின் அப்பாவின்  ஆரோக்கியம் கருதி  உண்மையை யாரிடமும் சொல்லாமல் மருகுகிறார்கள் .
அயல்நாட்டில் இருந்து வரும் அரவிந்தும் , ஜீவாவை புரிந்து வரும் பூஜாவும் , ஜீவா – மஹா இருவரின் திருமண நிச்சயம் அறிந்து முதலில் அதிர்ந்து அப்புறம் பகையாகிறார்கள். 
ஜீவாவை ஆள் வைத்து அடிக்கும் அளவுக்கு அரவிந்த் போக , கொந்தளிக்கும் மஹா  அரவிந்தை முழுக்க வெறுக்கிறாள் . பூஜாவும் ஜீவாவை வெறுக்கிறாள் .
ஜீவா மஹா  திருமண வேலைகள் தீவிரமாக , அரவிந்தின் அப்பா அரவிந்திடம் , தொழில் ரீதியாக ஒத்த கருத்துள்ள பூஜாவை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார் . 
விரும்பி நேசித்த காதல் ஜோடியை மறந்து,  சந்தர்ப்பவசத்தால்  திருமணம் வரை போகும் இவர்களுக்கு,  கடைசியில் என்ன நடந்தது என்பதே இந்த நட்பதிகாரம் 79
natpu 8
சும்மா சொல்லக் கூடாது ….ராஜ் பரத், அம்ஜத்கான் , ரேஷ்மி மேனன் , தேஜஸ்வி மடிவாடா நால்வரும் சேர்ந்து ஓர் இளமைத் திருவிழாவே நடத்துகிறார்கள் . கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்தும் இருக்கிறார்கள் .
அப்பாவி பிராமணனாக நெகிழ வைக்கிறார் எம் எஸ் பாஸ்கர் 
படத்தில் எதாவது  ஒரு சீனில் தோழியாக வரும் பெண்கள் கூட அவ்ளோ அழகு . இது போதாதென்று, ரேஷ்மி மேனனைத் தவிர  எல்லோரையும் உரித்து வைத்தே உசுப்பேற்றுகிறார்கள்.  
கண்ணாலேயே  கவர்ச்சி கொட்டி,  ‘மடில வாடா…’  என்று அழைப்பது போல, மயக்கும் அளவுக்கு  நடித்திருக்கிறார் தேஜஸ்வி மடிவாடா 
அந்த அழகுகளை ரசித்து ருசித்து படம் பிடித்து இருக்கிறது குருதேவின் ஒளிப்பதிவு .
natpu 9
இரண்டாம் பாதியில் வரும் ராஜ்பரத் , தேஜஸ்வி மடிவாடா  டூயட் பாடலில் அந்த செட் சிம்பிள் அண்ட் சூப்பர் ! மொத்தமாகவே ஒளிப்பதிவு சிறப்பு . 
தீபக் இசையில் பாடல்களும் கேட்க இனிமையாகவே உள்ளன .
ஒரு இடைவெளிக்குப் பிறகு , தனது பேவரைட் நடன அசைவுகளோடு ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆகி இருக்கிறார் ,  ராஜு சுந்தரம் .  நைஸ் .
 உடை அலங்காரம் அருமை . சில இடங்களில் வசனமும் நச் 
ஓர் இடைவேளைக்குப் பிறகு இயக்கி இருந்தாலும்  மேக்கிங்கில் அசத்துகிறார் இயக்குனர் ரவிச்சந்திரன் .
அமைதியான ஜீவா, கலகல அரவிந்த், செக்சி கேர்ள் பூஜா, மாடர்ன் மாமி மஹா என்று .. வெரைட்டியான கேரக்டர்கள் அமைத்திருப்பது செம! செம !!
natpu 4
ஆனால் திரைக்கதைதான கொஞ்சம் சறுக்கிவிட்டது . 
என்னதான் அப்பாவுக்கு அயல்நாட்டில் ஆபத்து என்று அவசரமாகக் கிளம்பினாலும்,  பத்து மணிக்கு பதிவுத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி அழைக்கப்பட்ட காதலிக்கு, 
ஒரு போன் செய்தோ , டெக்ஸ்ட் மேசேஜிலோ அல்லது அட, வாட்ஸ் அப் மெசேஜிலோ ஒரு கேன்சல் கூடவா சொல்ல மாட்டான்  ஓர் உண்மைக் காதலன்?
 ஆம் எனில் அது என்ன காதல் ? இல்லை எனில் அப்படி விட்டுப் போனவன் பின்னர் வந்து மஹா மீது கோபித்துக் கொள்வது என்ன நியாயம்?
அவன்தான் அப்படி ரகசிய திருமணத்துக்கு வரச் சொல்லி விட்டான் . ஜீவாவுக்கு போன் செய்து தகவலை கூட மஹா சொல்ல மாட்டாள் என்பது என்ன நியாயம் ?
natpu 6
ஒரு தடவை போன் செய்தாள் . ஜீவா தூங்கிக் கொண்டு இருப்பதால் போனை எடுக்கவில்லை’ என்பது எல்லாம் போங்கோ  போங்கு! விடிஞ்சதும் ரீடயல் போடச் சொல்லி இருக்கணும் டைரக்டரே !
அவ்வளவு நெருக்கமான நண்பர்களாக நால்வரும் இருக்கும் நிலையில்,   ஜீவாவுக்கும் பூஜாவுக்கும் தகவலே  சொல்லாமல், , மஹாவுடனான தனது பதிவுத் திருமணத்தை அரவிந்த் !முடிவு செய்கிறான் என்றால்,
 அப்புறம் அவன் என்ன நண்பன் ? இந்த அரை குறை நட்புக்கு அதுவரையிலான காட்சிகளில் அவ்வளவு  கெத்து  எதுக்கு ?
நாலுபேரும் சும்மா கடமைக்கு பழகும்  ஆட்கள் என்றால் மட்டுமே இந்த காட்சிகள் சாத்தியம் .ஆக, காதல்,  நட்பு என்று இரண்டு வகையிலும் இப்படி பல கேரக்டர் அசாசினேஷன்கள் !
natpu 2
ஒரு பிரச்னையில் எந்த ஒரு இயல்பான நியாயமான வாக்கியத்தை சொன்னால் பிரச்னை முடிந்து விடுமோ,  அந்த வாக்கியத்தை மட்டும் சொல்லலாமல் பலரும் தவிப்பது மகா மெகா  எரிச்சல் . 
ஜீவாவின் குடும்பமே ஒட்டுமொத்தமாக மஹாதான் ஜீவாவின் காதலி என்று முடிவு செய்து தட்டு மாற்றிக் கொள்ளும் அளவுக்கு போவதும்… சரியான தட்டுக்கெட்டத்தனம் . 
தவிர சிகரெட்டுக்கு நெருப்பு கேட்டு ஆரம்பிக்கும் காதல், இரண்டு ஜோடிகளுக்குள் ஏற்படும் நட்பு , , குறுக்கு சால் குணாதிசய ஒற்றுமை இதை எல்லாம் பார்க்கும்போது…
 படத்தின் முதல் அரை மணி நேரம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு அபாரமனது . ஏதோ வித்தியாசமான திரைக்கதைப் போக்கு காத்திருக்கிறது என்று பார்த்தால் மிக வழக்கமான பழகிய பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறது படம்.  . 
Natpathigaram-79 Tamil Movie Stills 30
எனினும் கூட , கடைசி நிமிடங்களில்   என்ன நடக்குமோ என்ற ஆர்வம் அல்லது பதைபதைப்பை ஏற்படுத்தும் வகையில் படம் பயணிக்கிறது பாருங்கள் , 
அங்கேதான்  , யாரையும் அடக்க விடாத ஏக் தம் ஜல்லிக்கட்டுக்  காளை போல , தெறித்து ஓடித் தப்பிக்கிறது படம். 
மொத்தத்தில் நட்பதிகாரம் 79 … ஹாய் மச்சான் சொல்லலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →