டிரைடன்ட் ஆர்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, நயன்தாரா, ஜெய் , சத்யராஜ் நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் ‘அன்னபூரணி- The Goddess of Food’ கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் உடன் நடித்துள்ளனர்.

தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (உரையாடல்கள்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளவர்கள்.

டிசம்பர் ஒன்றாம் தேதி படம் வெளியாகும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா கலந்து கொண்டார்
திரையிடப்பட்ட காட்சிகளில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒரு பிராமணச் சிறுமி , சமையற்கலை நிபுணராக ஆசைப்பட, அப்படியே வளர்ந்து நயன்தாராவாக மாற, சமையற்கலை படிக்க, அங்கே வகுப்பில் பாடம் நடத்துபவர் ஒரு கோழியை முழுசாக உரிச்சு உருள விட்டு, அழுத்தும்போது எப்படி இருந்தால் அது நல்ல சிக்கன், சிக்கனை எப்படி கட் பண்ண வேண்டும் எத்தனை பீஸ் கட் பண்ண வேண்டும் என்று பாடம் எடுக்க, சைவமான நயன்தாரா பின்வாங்க,

பாடம் நடத்துபவர் நயன்தாராவை கட் பண்ணச் சொல்ல, இந்த சிக்கன் அந்த சிக்கனை கட் பண்ணியதா இல்லையா என்பது போல காட்சி போக ,
திரையிடல் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார் இயக்குனர்,
” ஒரு பக்கம் நவீன சமையற்கலைக்கு ஆசைப்படும் சைவப் பெண்ணின் கதை சொல்லப் பட்டாலும் இதில் இன்னொரு பக்கம் தந்தை மகள் எமொஷனும் உண்டு .

படத்தில் மீண்டும் ஜெய் , நயன்தாரா, சத்யராஜ் ஆகியோர் இருப்பதால் இதற்கும் ராஜா ராணிக்கும் சம்மந்தம் இல்லை. சின்னச் சின்ன விசயங்களில் ஒற்றுமை தெரியலாம். . ஜெய் , நயன்தாரா நட்பே இதில் பிரதானம் .
எனக்குத் தெரிந்து அசைவம் சமைக்கிற – ஆனால் அசைவம் சாப்பிடாத சமையற்கலை நிபுணர்கள் உண்டு. அவர்களிடம் எல்லாம் கலந்து பேசி , இந்தக் கதைக்கு பலம் சேர்த்தோம்.

இன்னொரு பக்கம் இந்தப் படத்தில் சைவம் மட்டுமே சாப்பிடும் இஸ்லாமியக் கதாபாத்திரமும் வருகிறது.
நயன்தாரா மேடம் தனது 100% சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின் போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்தது. சமையல்காரரின் சரியான குணாதிசயங்களாக இருக்கும் பேன் ஃபிளிப்பிங், டாஸ்சிங் மற்றும் பல நுணுக்கங்களையும் சரியாக கற்றுக் கொண்டார். . இதில் ஏமாற்றும் விதமாக ஒரு ஷாட் கூட இல்லை நயன்தாரா எந்த டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார்

படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பல விஷயங்களை படமாக்க வேண்டியிருந்ததாலும் நயன்தாரா தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையின் போது கூட கேரவனுக்குள் செல்லாமல் செட்டிலேயே இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்பு எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

சில நாட்களில் பத்து மணிக்கு முடிந்து விட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தபோது கூட, தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்திருக்கிறார்.

இந்தப் படம் வித்தியாசமாக உங்களைக் கவரும் ” என்றார்