சென்னை நேரு திறந்தவெளி மைதானத்தில் சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில்  சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் விஜய்குமார், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ‘மேக்கிங் மொமெண்ட்ஸ்’ அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சந்தோஷ் நாராயணன் பேசியபோது, ” திறந்தவெளியில் இசை நிகழ்ச்சி என்றால்  ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு  விருப்பமான இசையை ரசிக்க முடியும். இசைக் கலைஞர்கள் இசைக்கும் இசையை நேரடியாக அனுபவிக்க முடியும். இத்தகைய இசை நிகழ்ச்சி பொதுவாக கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும். அதற்கு நன்றாக உட்கட்டமைப்புடன் கூடிய திறந்த வெளி அரங்கம் தேவை. அத்தகைய அரங்கமாக சென்னையில் அமையப் பெற்றிருப்பதுதான் நேரு ஸ்டேடியம்.

இந்த ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள ஐ ஏ ஏஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கினோம். முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகை தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து  ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்.

சென்னையில் நடைபெறும்  இசை நிகழ்ச்சியின் நோக்கம் லாபம் மட்டுமல்ல. ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைத் தர வேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். 

‘நீயே ஒளி’என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது ஏன்? என்றால், ரசிகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் வைத்திருக்கிறோம். மேலும் புத்தபெருமானின் போதனிகளில்  இந்த சொற்களும் உண்டு- அதனால் இதனைத் தேர்வு செய்திருக்கிறோம்.

இந்திய திரையுலக இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சி என்றால்… வழக்கமானதொரு உள்ளடக்கம் இருக்கும். அது வெற்றி பெற்ற உத்தியும் கூட ஆனால் எங்களின் இசைக்குழு நடத்தும் ‘நீயே ஒளி’ எனும் இசை நிகழ்ச்சி இதிலிருந்து மாறுப்பட்டதாக இருக்கும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நான் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு திறமையான இசை கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞகள் என பலர் கலந்து கொள்கிறார்கள்.  

இந்நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான பாடல்களுடன் இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, ஏ. ஆர். ரஹ்மான், ஜீ வி பிரகாஷ் குமார், அனிருத், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் பாடல்களும் இடம்பெறும்.

கான்செர்ட்டின் கிராஃப் கூட எமோஷனலாக இருக்கும்.ஒரு திரைப்படம் போல் எங்கேயும் நிற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த கான்செர்ட் நடக்கும். இது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளிலும் வெவ்வேறு எதிர்பாராத அனுபவம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தை முன்மாதிரியாக வைத்து தான் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ‘நீயே ஒளி’ என இசை நிகழ்ச்சிக்கு பெயரிட்டு, பிப்ரவரி 10 ஆம் தேதி மாலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறோம்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தை யாரும் தவறவிட வேண்டாம். ஏனெனில் அதில் இந்தியாவின் எதிர்கால சாதனையாளர்களான பதினைந்து இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்த இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

கான்செர்ட் எனும் இந்த வடிவத்திலான பொழுதுபோக்கிற்கு மக்களின் ஆதரவு இருப்பதால் இதற்குப் பெரும் சந்தை இருக்கிறது. அதற்கான தொடக்கமாக இதனை நாங்கள் கருதுகிறோம். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு இசைத்துறையில் கற்பனையுடன் கூடிய ‘நீயே ஒளி’ போன்ற கான்செர்ட் பிரபலமாகும். அப்போது இதற்கு ஏராளமான விளம்பரதாரர்கள் கிடைக்கலாம். இதனால் இசை ரசிகர்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் குறைந்த கட்டணத்தில், இதை விட சிறப்பான இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம்.

சென்னையைப் பொருத்தவரை மக்கள் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகம்.  தற்போது ஒரு கோடி பேருக்கு மேல் சென்னையில் இருக்கிறார்கள். இதில் முப்பதாயிரம் பேர் வரை இது போன்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவைத் தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியுடன் ஓரிடத்தில் திரண்டு, இசையால் ஒன்றிணைய விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இசையார்வம் கொண்ட புதிய தலைமுறை ரசிகர்களை ஒன்றிணைக்கும் புதிய பொழுதுபோக்கு தளமாகவும் இந் நிகழ்ச்சி அமையும் என நம்புகிறேன்.

இந் நிகழ்ச்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் டிக்கெட் வாங்குபவர்கள்.. மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். இந்த டிக்கெட்டை காண்பித்தால் அதிலுள்ள க்யூ ஆர் கோடு மூலம் ரசிகர்கள் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இந்நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சலுகையை ஊக்கப்படுத்தும் வகையில் நான் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இசைக்கலைஞர்கள் சென்னையிலுள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயிலில் பயணித்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்து, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தரவிருக்கிறோம். அதேபோல் இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மெட்ரோ ரயிலில் பயணித்து வீடு திரும்ப போகிறேன். அந்நாளில் மெட்ரோ ரயில் இரவு பன்னிரண்டு மணி வரை இயங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கான  டிக்கெட் விற்பனையில் முழுக்க  வெளிப்படையான அணுகுமுறையைத்தான் பின்பற்றவிருக்கிறோம். அதனால் அனைத்த தரப்பு ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம்  ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரை நட்சத்திரங்கள், திரைப்பட இயக்குநர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். அவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். ” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *