நெருங்கி வா முத்தமிடாதே @ விமர்சனம்

Nerungi-Vaa-Muthamidathe-Movie-Stills-12எ வி எ  புரடக்ஷன்ஸ் சார்பில் எ வி அனுப் தயாரிக்க ஷபீர் மற்றும் பியா இணையராக  நடித்து இருக்கும் படம் நெருங்கி வா முத்தமிடாதே .

சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி ஆரோகணம் என்ற குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி , அடுத்து இந்தப் படத்தை தனது இரண்டாவது படமாக இயக்கி இருப்பவர் லக்ஷ்மி ராம கிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் அடிக்கடி பயன்படுத்தும் ” என்னம்மா .. இப்படி பண்றீங்களேமா ” என்ற வார்த்தைகள்,  இப்போது சமூக வலை தளங்களில் மிகப்பெரிய  நகைச்சுவை வாசகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இருக்கட்டும் . படத்தோடு ரசிகர்கள் நெருங்க முடியுமா என்று பார்ப்போம் .

வசதியான பெட்ரோல் பங்க்  ஓனர் சுப்பிரமணியனின் (ஒய் ஜி மகேந்திரன்) மகனாக பிறந்து, மோசமான நபரான காளீஸ்வரன் (ஏ எல் அழகப்பன்) சேர்க்கை காரணமாக ஒழுங்காக படிக்காமல் வளர்ந்து லாரி டிரைவராக இருப்பவன்  சந்துரு (நாயகன் ஷபீர் ) .

நாடு முழுதும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரு நிலையில் , ஒரு மர்மமான காரணத்துக்காக  டீசல்  வேண்டும் என்று காளீஸ்வரன் சொல்ல , தன்  தந்தை பதுக்கி வைத்திருக்கும் இரண்டாயிரம் லிட்டர் டீசலை திருடி தருகிறான் சந்துரு. அந்த டீசலை கொண்டு போய்  சேர்க்கும் வேலையை சந்துருவிடமே தருகிறான் காளீஸ்வரன்.

லாரி மாட்டினால் சந்துரு மற்றும் அவனது தந்தைக்கே பிரச்னை வரும் வகையில் காளீஸ்வரன் வகுக்கும் திட்டத்தை அறியாமல் லாரியை ஒட்டிக் கொண்டு போகும்  சந்துரு , வழியில் உயர்ந்த ஜாதிப் பெண்-  தாழ்ந்த ஜாதி பையன் காதல் ஜோடியை அந்த ஊரே துரத்த அடைக்கலம் கொடுத்து மறைத்து லாரியில் ஏற்றிக் கொள்கிறான்.

பாடகியான தனது அம்மா சீதாவால் (விஜி சந்திர சேகர் ) அப்பா யார் என்று தெரியாமலே வளர்க்கப்படும் மாயா (பியா பாஜ்பாய் ) அந்த கோபம் காரணமாக அம்மாவை பழிவாங்குவதாக எண்ணி குடி கும்மாளம் என்று மனம் போன போக்கில் வாழ்கிறாள். அப்படி ஒரு முறை பார்ட்டிக்கு போன மாயா தனது நண்பனோடு பைக்கில் வரும் போது  விபத்தில் சிக்க, அந்த வழியில் லாரி ஒட்டி வரும் சந்துரு அவர்களுக்கும் உதவுவதற்காக அந்த லாரியில் ஏற்றிக் கொள்கிறான்.

இப்படியாக தொடரும் அவர்கள் பயணத்தில் காதல் ஜோடி  ஜாதி எதிரிகளிடம் இருந்து தப்பித்ததா?  மாயா-  சீதா மன வேறுபாடு என்ன ஆனது ?  டீசல் போவது எதற்காக ? காளீஸ்வரன் சதியை சந்துரு உணர்ந்தானா ?  அந்த சதி வலையில் இருந்து தப்பினானா?

–  என்பதுதான் நெருங்கி வா முத்தமிடாதே . பொதுவாக லாரிகளின் பின்புறத்தில் விபத்தை தவிர்க்கும் வாசகமாக இந்த வாசகத்தை பார்க்க முடியும் .

Nerungi-Vaa-Muthamidathe-Movie-Stills-21

கதையைப் பார்த்தாலே ஒன்று புரியும் . வீடு கட்டு விளையாட வாய்ப்புள்ள ஏரியா இது என்று . ஆனால் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மனதில் நிற்கும்படியாக ஒரு குடிசை கூட போடவில்லை என்பதுதான் வருத்தம் .

விஷயத்தை முதலில் சொல்லி விட்டு அப்புறம் விளக்கத்தை ஃ பிளாஷ்பேக் பாணியில் சொல்லும் அந்த டைரக்டோரியல் உத்தி சபாஷ் போட வைக்கிறது லக்ஷ்மி .

ஆரம்பக் காட்சி படமாக்கலிலும் சில பல கேமரா கோணங்களிலும் ஒளிப்பதிவாளர் வினோத் பாரதி கவனிக்க வைக்கிறார்
பின்னணி  இசை பரவாயில்லை ரகம்
ஆனால் அது மட்டும் போதுமா?

தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் இந்தியா எங்கும் பெரும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்பது எவ்வளவு பெரிய பிரச்னை ! படத்தில் அதன் விளைவுகளாக வரும் காட்சிகள் சும்மா பத்திக்கிட்டு எரிய வேணாமா?

ஆனால் அது பற்றி ரெண்டு மூணு முறை நியூஸ் காட்டுவது , ரோடுகளை காலியாக காட்டுவது மட்டுமே போதும் என்று டைரக்டர் எண்ணியது அராஜகம் . அந்த பிரச்னையின்  சீரியஸ்னஸ் படத்தில் உணர்த்தப்படவில்லை எனும்போதே படத்தின் பலம் குறைந்து போகிறது .

 ஒரே ஒரு சீனில் வரும் பலான பெண் கதாபாத்திரம் முதற்கொண்டு படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் . ஆனால் எதற்கும் அழுத்தமான காட்சிகள் இல்லை . வசனங்கள் வலுவாக இல்லை . ஒய் ஜி மகேந்திரன் குடும்ப சண்டை எல்லாம்  சவ சவ .

மாயா அப்பன் பெயர் தெரியதவளாக வளர்வதற்காக சீதா  சொல்லும் காரணம் அருமை . ஆனால் அதை போகிற போக்கில் படம் ஆக்கி இருக்கிறார் இயக்குனர் .

 தவிர மகள் தன்னை சந்தேகப்ப்படும்போதே சீதா உண்மையை சொன்னால் பிரச்னையே வளர்ந்து இருக்காதே. அதோடு பரிதாபகரமான அந்த உண்மையை சொல்லி விட்டுதான்  சீதா மலேசியா போகிறார் .  அப்புறம் எதற்கு மாயா முன்பு போலவே தண்ணி அடித்து விட்டு கூத்தடித்துக் கொண்டு நண்பனோடு சுத்தவேண்டும்? அடுத்த விமானத்திலேயே அம்மாவை பார்க்க மலேசியா போகவேண்டியதுதானே?

இப்படியாக படத்தின்  எந்த கேரக்டருமே நேர்த்தியாக வடிவமைக்கப்படவில்லை என்பது பெரும் சோகம் .

ஹீரோ சபீர் மட்டும் நடிப்பில் பரவாயில்லை. மற்ற யாருக்கும் வேலை இல்லை. தம்பி ராமையா டோட்டல் வேஸ்ட் . அதுவும் அந்த  டீக்கடை காட்சியை மன்னிக்கவே முடியல .

ஆரம்பக் காட்சி படமாக்கலிலும் சில பல கேமரா கோணங்களிலும் ஒளிப்பதிவாளர் வினோத் பாரதி கவனிக்க வைக்கிறார்

திரைக்கதையின் பலவீனத்தாலும்   மேம்போக்கான படமாக்கல் காரணமாகவும் எல்லாமே சாதரணமாக கடக்கின்றன.

மொத்தத்தில் …

நெருங்கி வா முத்தமிடாதே …..
என்னம்மா, இப்படி பண்ணிட்டீங்களேம்மா,  ம்ம்ம்ம்..

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →