லாரி ஓட்டிக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்கும் டிரைவர்கள் பெட்ரோல் நிரப்புவதில் கவனமாக இருக்க வேண்டும் . ஏனெனில் பெட்ரோல் பங்க் அதிகம் இல்லாத பகுதிகளில் பயணிக்கும்போது பெட்ரோல் இல்லாமல் போனால் பெரும் அவஸ்தை ஆகிவிடும் அல்லவா? அதைத் தடுக்க லாரிகளின் பெட்ரோல் டாங்க் மீது தினமும் என்னைக் கவனி என்று எழுதி வைப்பார்கள்.

பாரதிராஜா முதன் முதலாக இயக்கி சரித்திரம் படைத்த பதினாறு வயதினிலே படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்று , அந்தப் படத்தின் நாயகன் நாயகியின் பெயரான சப்பாணியும் மயிலும் மிகப் பிரபலமான போது , திருச்சியில் ஒரு லாரி டிரைவர் தனது லாரியின் பெட்ரோல் டாங்க் மீது ‘சப்பாணி தினமும் மயிலுவைக் கவனி ‘ என்று எழுதி வைத்த வாசகம், அப்போது தமிழகம் முழுக்க பிரபலாமகப் பேசப்பட்ட செய்தியானது.
அதன்பிறகு இதுபோல வாகனப் பயணம் சம்மந்தப்பட்ட வாசகங்களை பலரும் சுவாரஸ்யமான உருவகத்தில் எழுத ஆரம்பித்தார்கள் . அந்த வகையில் கனரக வாகனங்களின் பின் பகுதியில் எழுதப்படும் ‘குறைந்த பட்சம் பத்து மீட்டர் இடை வெளி விட்டு வரவும் ‘ என்ற வாசகத்துக்கு சுவையான மாற்றாக வந்ததுதான் … ‘நெருங்கி வா . ஆனால் முத்தமிடாதே’ என்ற வாக்கியம் .

இந்தக் கதை எதற்கு இப்போது இங்கே என்கிறீர்களா?
நன்கு அறியப்பட்ட நடிகையும் சொல்வதெல்லாம் உன்னை நிகழ்ச்சியில் அடிக்கடி உணர்ச்சியில் கொந்தளிப்பவரும், தான் முதன் முதலில் இயக்கிய ஆரோகணம் படத்தின் மூலம் பாராட்டுக்குரிய பெண் இயக்குநராகவும் உயர்ந்திருக்கும் லக்ஷ்மி ராம கிருஷ்ணன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் பெயர் ‘நெருங்கி வா முத்தமிடாதே’
ஆரோகணம் படத்தை தயாரித்த அதே ஏ வீ ஏ நிறுவனம் சார்பில் ஏ.வி. அனூப் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதை நாயகனாக யோகா மாஸ்டரான ஷபீர் என்பவரும், கதாநாயகிகளாக பியா பாஜ்பாய் மற்றும் புகழ்பெற்ற கன்னடப் படமான லூசியாவில் நடித்த சுருதி ஹரிஹரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
“திடீரென்று ஒரு நாள் பெட்ரோலே இல்லாமலே போய் விட்டது என்று வைத்துக் கொள்வோம் . என்னென்ன பிரச்னைகள் வரும் என்று நமக்குள் ஒரு லிஸ்ட் இருக்கும் அல்லவா? உண்மையில் அதையெல்லாம் மீறி என்னென்ன நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக்கரு ” என்று உற்சாகமாக ஆரம்பிக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ” ஒரு லாரி டிரைவர் , இரண்டு பெண்கள் , இன்னொரு மனிதர் ஆகிய நால்வரின் கதைகளை ஒரு மையக் கதையில்,இணைத்து சொல்லி இருக்கிறேன். திருச்சியில் இருந்து காரைக்கால் வரை நடக்கும் பயணமாக இந்தக் கதை நிகழ்கிறது. ஏன் திருச்சி முதல் காரைக்கால் வரை என்பதற்கும் கதையில் காரணம் இருக்கிறது . முழுக்க முழுக்க பயணத்தில் நடக்கும் கதையை படமாக்குவது சவாலாக இருந்தது . அதை சரியாக செய்து இருப்பதாக நம்புகிறேன் ” என்கிறார் (சொல்வதெல்லாம் உண்மை ?)
படத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் அளவில் சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம். அது என்ன என்றால் ‘சஸ்பென்ஸ்’ என்கிறார் . எல்லாம் செப்டம்பர் வரைதான் (படம் அப்போதான் ரிலீஸ் )
ஒரு வேளை இந்தப் படத்தின் பெயர் நெருங்கி வா முத்தமிடு என்று இருந்தால்… ?
கண்ணா… அந்த கதையே வேறே … ஆங் !