கனடாவைச் சேர்ந்த ஸ்வேதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பரராஜ சிங்கம், வெங்கடேஷ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் ஏ. வெங்கடேஷ் தயாரிக்க,
நடிகர் தியாகராஜனின் ஸ்டார் மூவீஸ் வெளியிட,
வினய், தமன், சுபிக்ஷா, ரோபோ சங்கர், ரித்விகா, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில்
வெங்கடேஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் நேத்ரா . நேத்ரா நேர்த்தியானவளா? பார்க்கலாம்.
காரைக்குடி காதல் ஜோடி வேலா ( தமன்) – நேத்ரா ( சுபிக்ஷா)! காதலுக்கு நேத்ராவின் பெற்றோர எதிர்ப்பு !
தங்கள் இருவருக்குமான, பால்ய காலந்தொட்ட சிநேகிதனை (வினய்) உதவிக்கு அழைக்கிறாள் நேத்ரா .
கனடாவில் இருந்து பறந்து வரும் சிநேகிதன் , ‘பிரச்னை பெரிதாகும்போது கனடாவுக்கு வந்து விடுங்கள் . நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டுப் போகிறான் .
பிரச்னை பெரிதாகிறது . கனடாவுக்கு பறக்கிறார்கள் . சிநேகிதன் பிக்கப் செய்ய வரவில்லை . அவன் போனும் சுவிட்ச் ஆஃப். அட்ரசும் தெரியாது .
கனடா போலீஸ் உதவியுடன் ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறான் வேலா . வீடு எடுத்து தங்குகிறார்கள்.
வேலா வேலை செய்யும் ஹோட்டல் முதலாளி , உடலுறுப்புகள் திருடுபவர் என்பது வேலாவுக்கு சொல்லப் படுகிறது .
இந்த நிலையில் வேலா காணமல் போகிறான்.
பதறிப் போகிறாள் நேத்ரா . சிநேகிதன் வருகிறான்.. எதிர்பாராத தொழில் பிரச்னை காரணமாக ஆஸ்திரேலியா போக வேண்டி இருந்தது என்றும் , இவர்களை பிக் அப் செய்ய அனுப்பப் பட்ட ஆளுக்கு ஆக்சிடென்ட் என்றும் சொல்லி வருந்துகிறான் சிநேகிதன்.
இந்த நிலையில் வேலா கொல்லப் பட்டசெய்தி வருகிறது . அவன் உடலை வாங்கிப் புதைக்கிறார்கள். சமாதி எழும்புகிறது .
நேத்ராவுக்கு ஆறுதலாக இருக்கிறான் சிநேகிதன் .
ஆனால் ஒரு நிலையில் அவளை அடைய முயல்கிறான் . அதிர்கிறாள் நேத்ரா.
அப்போதுதான் இதுவரை நடந்த சம்பவங்கள் பல உண்மை இல்லை என்றும் அவற்றுக்கு பின்னால் சிநேகிதன் இருப்பதும் நேத்ராவுக்கு தெரிய வருகிறது ?
ஏன்? எதனால் ? எதற்கு ? எப்படி? அப்புறம் நடந்தது என்ன என்பதே நேத்ரா .
கமர்ஷியல் சினிமாவுக்கு ஏற்ற கதையை எடுத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ் .
அஜயன் பாலாவுடன் இணைந்து வெங்கடேஷ் எழுதி இருக்கும் வசனங்கள் ஆரம்பக் காட்சிகளில் ஜோர் .
சுபிக்ஷா கனடாவுக்கு தனியாகத்தான் வந்தாள் என்பது போல பலரும் நிரூபிக்க முயலும் காட்சிகள் பரபரப்பு.
சிநேகிதன் கூறும் சிறு வயது பிளாஷ்பேக்கும் அதை எடுத்த விதமும் சிறப்பு
வித்தியாசமான ஒலிகளோடு கூடிய பாடல்களால் ( உதாரணமாக டாஸ்மாக் பாடல்) கவர்கிறார் இசை அமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா.
ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு கனடாக் காட்சிகளில் சிறப்பு .
நாயகியாக சுபிக்ஷா பொருத்தம் . தமன் ஒகே .
ஒவ்வொரு பட போஸ்டரை பார்த்ததும் அந்த பட ஹீரோ கெட்டப் பில் ரோபோ ஷங்கர் வருவதும் வில்லன் கெட்டப்பில் நான் கடவுள் ராஜேந்திரன் வருவதும் தரமான காமடிக்கான ஏரியா.
சில குழந்தைத்தனங்கள் இருந்தாலும் கிளைமாக்ஸ் ஏரியா விறுவிறுப்பு.
பிரச்னை என்ன வென்றால் சஸ்பென்ஸ்க்கான வாய்ப்பு உள்ள இடங்களில் கூட பப்பரப்பா என்று திறந்து விட்டு விட்டு காட்சிகளை நகர்த்துகிறார்கள் . உதாரணமாக ஹோட்டல் முதலாளியின் உடல் உறுப்பு வியாபாரம் .
அதே போல சிநேகிதனின் சதிகள்தான் எல்லாம் என்பதும் முன்பே புரிந்து விடுகிறது . சந்தேகம் வராத அளவுக்கு காட்சிகளை அமைக்கத் தவறி இருக்கிறார்கள்.
ரோபோ ஷங்கர் — நான் கடவுள் ராஜேந்திரன் ஒரு பக்கம் ஓவர் டோஸ் என்றால் இன்னொரு பக்கம் இன்னும் சிரத்தையாக காமெடிக்கு முயன்று இருக்கலாம்
சிநேகிதன் கதாபாத்திரத்தில் வினை பொருந்தவில்லை . நல்லவனாக இருப்பது, பின்பு கெட்டவனாக வெளிப்படுவது இரண்டையும் பிரித்து வித்தியாசம் காட்டி நடிக்கத் தவறி விட்டார்.
அதே போல சிநேகிதன் கேரக்டர் திட்டமிட்டு வில்லத்தனம் செய்கிறான் என்று சொல்லாமல் , உணர்ச்சி வசப்பட்டு பழி வாங்குகிறான் என்று சொல்லி இருந்தால் இன்னும் எமோஷனலாக இருந்து இருக்கும் .
கிளைமாக்ஸ் ஏரியாவில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் .
எனில் நேத்ரா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.