
கோயம்பேடு மார்க்கெட் முழுக்க கோழிமுட்டை கிடைப்பது போல, இப்போது கோடம்பாக்கம் எங்கும் பேய்ப் படங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆனாலும் சில வித்தியாசமான முயற்சிகள் கவனம் கவரத் தவறுவது இல்லை. அதில் ஒன்றுதான் ஜீரோ
மாதவ் மீடியா எண்டர்டெயின்மென்ட் சார்பில் பாலாஜி காபா தயாரிக்க, குளிர் 90டிகிரி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராகவும் தனுஷ் நடித்த மரியான் படத்தில் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றிய வி.அருண்குமாரின் இயக்கத்தில் உருவாகும் படம் இது.
மங்காத்தா மேகா படங்களில் நடித்த அஷ்வின் நாயகனாகவும் நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கிறார் ஜே.டி.சக்ரவர்த்தி (அரிமா நம்பியில் அமைச்சராக வந்த அதே , பிரபல தெலுங்கு நடிகர் ).

தவிர பண்ணையாரும் பத்மினியும் படத்தில் முதியோர் காதலின் ஆழத்தை அழகாக வெளிப்படுத்திய நடிகை துளசி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
“ஆனந்தமாக வாழ்ந்து வரும் இளஞ் ஜோடிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஓர் அதீத பலம் வாய்ந்த சக்தி குறுக்கிடுகிறது. அதனால் நடைபெறும் எதிர்பாராத நிகழ்வுகள்தான் இந்த ஜீரோ” என்ற இயக்குனரிடம்
“அது என்ன ஜீரோ என்று படத்துக்குப் பெயர்?” என்றால் “உலகம் ஆரம்பிக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தால் ஒரு மாபெரும் சக்தி இவ்வளவு காலத்துக்கு பிறகு அந்த தம்பதியின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. படத்தின் முடிவிலும் ஒரு ஆரம்பம் நிகழ்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து ஜீரோ என்று பெயர் வைத்தேன் .
கதைக்கு தேவைப்படும் ஹோம்லியான முகத்துக்கு ஷிவதா பொருத்தமாக இருந்தார் . தம்பதிகளின் வாழ்வில் குறுக்கிடும் அந்த மாபெரும் சக்தியை கட்டி ஆளும் மந்திரவாதியாக ஜே.டி.சக்ரவர்த்தி நடிக்கிறார் . படத்தின் ஒரு கட்டத்தில் சிவதா பேயாகவும் வருவார்.

சென்னையில் பின்னி மில்லில் ஒரு அபார்ட்மென்ட் செட் போட்டு முதற்கட்ட படபிடிப்பை முடித்து இருக்கிறோம் அடுத்து ஏவிஎம் ஸ்டுடியோ மகாபலிபுரம் , அண்ணா நகர் டவர் பார்க் மற்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் நடக்க இருக்கிறது .
இறுதிக் கட்டமாக வட இந்தியாவில் இரண்டு வாரம் படப்பிடிப்பு நடத்தி நவம்பர் மாதம் திரைக்கு கொண்டு வருகிறோம் ” என்கிறார் இயக்குனர் அருண்குமார் . நம்பிக்கையாக பேசும் இயக்குனரை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி
கட்டுரையின் ஆரமபத்தில் எழுதி இருக்கும் விஷயத்தை நினைத்துக் கொண்டு இயக்குனரிடம் “இப்போ எல்லாம் நம்மூர்ல தடுக்கி விழுந்தா கூட ஏதாவது பேய்ப் படத்து மேலதான் விழ வேண்டி இருக்கு . அந்த கும்பலில் இருந்து உங்க படம் எப்படி மாறுபடுது ?” என்று கேட்டால் …
கொஞ்சம் கூட ஷாக்காகாமல் “பொதுவாக பேய்ப்படம் என்றால் கருப்பு உருவம், ரத்தம் , கோர முகம் என்றெல்லாம்தான் இருக்கும் . ஆனால் இது எதுவுமே இந்தப் படத்தில் இருக்காது . இந்தப் படத்தில் வரும் அந்தஅதீத சக்தியின் முன்பு யாரும் நிற்கக் கூட முடியாது . இது ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்கிறார் அருண்குமார் .
இந்த தன்னம்பிக்கை வேணும் !