பொதுவாக ‘நமது நியூஸ் தொலைக் காட்சிகளில் தமிழர்களுக்கான செய்திகளைப் பொறுத்தவரை இந்தியா இலங்கை மலேசியா தவிர மற்ற நாட்டுத் தமிழர்கள் பற்றிய செய்திகள் அதிகம் இடம் பெறுவதுஇல்லை ; உலகம் எங்கும் உள்ள தமிழர்களை நமது நியூஸ் சேனல்கள் சென்று சேர்வதும் இல்லை’ என்பது ஒரு வருத்தமான கருத்து .
அதே போல ‘நியூஸ் சேனல்கள் என்பது பொதுவாக இளைஞர்கள் பார்க்கும் வகையில் அவர்களை ஈர்க்கும் வகையில் இல்லை ‘என்பதும் ஒரு கருத்துள்ள வருத்தம் .
“இந்த இரண்டுக்கும் சரியான ஆக்கபூர்வமான வெற்றிகரமான பதிலாக வருகிறோம்” என்று சொல்கிறது, புதிய தொலைக்காட்சியான நியூஸ் 7 தமிழ் செய்திச் சேனல் .
இதில் “செய்தியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியாளர்களின் நடை உடை பாவனை முதற்கொண்டு அமரும் விதம் , பேசும் தொனி உட்பட அனைத்து விஷயங்களும் இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். அதோடு பேஷன் , டெக்னாலஜி , என்று எல்லா வகையிலும் அனைத்து துறைகளிலும் இருக்கும். இதற்காக அல்ஜசீரா உள்ளிட்ட உலகத் தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவத் திறமையாளர்களை கொண்ட அணி எங்களிடம் இருக்கிறது. இளைஞர்கள் மற்றும் இளமையான மனதுள்ளவர்களை மனதில் வைத்து எங்கள் நிகழ்ச்சிகள் அமையும் . அதோடு உலகெங்கும் உள்ள தமிழர்கள் பற்றிய செய்திகளை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு கொண்டு செல்லும் பணியை முழு மூச்சில் சிறப்பாக செய்ய இருக்கிறோம் ” என்கிறார்கள் , இந்த செய்தி சேனலின் பொறுப்பாளர்கள் .
விரைவில் துவங்க இருக்கும் இந்த சேனலை அறிமுகப்படுத்தும் விதமாக இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் . ரகுமான் இசை நிகழ்ச்சி ஒன்று விரைவில் நடக்க இருக்கிறது . நியூஸ் சேனலுக்கான லோகோ இசையையும் ஏ ஆர் ரகுமானே அமைக்கிறார் .
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஏ ஆர் ரகுமான் ” உலகம் முழுக்க எத்தனையோ நாடுகளில் நம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் . அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் பணியை இந்த சேனல் செய்யும் என்றார்கள் .அவர்களின் திட்டமும் அதற்கேற்ப இருந்தது . எனக்கும் கூட ‘அப்படி ஒரு விஷயம் நடக்க வேண்டும் . அதில் நாமும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தது. எனவே நான் இந்த சேனல் அறிமுகத்துக்காக நான் இசை நிகழ்ச்சி செய்து தருகிறேன் . சேனலுக்கான லோகோ இசையையும் அமைக்கிறேன் ” என்றார் .
தொடர்ந்து ஊடகத்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் .
நிகழ்ச்சியில் என்னென்ன பாடல்கள் பாடப்படும் ?
அண்மையில் நான் கொடுத்த இசை நிகழ்ச்சியில் இடம்பெறாத மற்ற பாடல்கள் எனது ஆரம்பப் படங்கள் தொடங்கி இன்று வரையிலான படங்களில் இருந்து இடம்பெறும்
யார் யார் பாடுகிறார்கள் ?
அதுதான் மாறிக் கொண்டே இருக்கிறது (சிரிக்கிறார்) கார்த்திக் , நான் உள்ளிட்ட சிலர் பாடுவது உறுதி . விரைவில் யார் யாரால் கலந்து கொள்ள முடியும் என்பதை பொறுத்து பாடகர்கள் முடிவு செய்யப்படுவார்கள்
உங்கள் மகன் இந்த நிகழ்ச்சியில் பாடுவாரா ?
முதலில் அவர் படித்து முடிக்க வேண்டும் . எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் இப்போதைக்கு இல்லை .
சினிமாவில் பாடுவாரா?
ம்ம்ம்ம்… மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் பாடுவார் .
இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் அல்லாத இந்தி உள்ளிட்ட வேற்று மொழிப் பாடல்களும் பாடப்படுமா ?
நான் சென்னைப் பையன் . சென்னையில் பிறந்து வளர்ந்தவன். இசை நிகழ்ச்சியும் சென்னையில்தான் நடக்குது. ஒரு தமிழ் சேனல் தொடங்கறது சம்மந்தப்பட்ட இசை நிகழ்ச்சி இது. மும்பையில் நடத்தினால் இந்திப் பாடல்களும் பாடலாம். வெளிநாட்டில் நடத்தினால் இங்க்லீஷ், உருது, பாகிஸ்தானி பாரசீக பாடல்கள் கூட பாடலாம் . கல்கத்தாவில் கூட தமிழ்ல பாடினா ரசிக்கிறாங்க . அப்படி இருக்க சென்னையில எதுக்கு மற்ற மொழிப் பாடல்கள் .அதனால தமிழ்ப் பாடல்கள்தான் இருக்கும் . ” என்று முத்தாய்ப்பாக முடித்தார் .
சேனலின் முக்கியத் தூண்களில் ஒருவரான செந்தில் வேலனிடம் பேசினேன் .
” உலகம் எங்கும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள் . அவர்களில் பலருக்கு இப்போது நம்மோடு தொடர்பு மிக குறைவாகவே உள்ளது. குறிப்பாக ரீ யூனியன் தேசத்தில் இரண்டு லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமிழே தெரியாமல் ஆனால் கற்றுக் கொள்ளும் ஆவலிலும் தமிழ் உலகத்தோடு தொடர்பு கொள்ளும் ஏக்கத்திலும் இருக்கிறார்கள் . சில நாடுகளில் ஸ்போக்கன் தமிழ் என்ற புத்தகத்தையே நான் பார்த்திருக்கிறேன். உலகம் எங்கும் உள்ள இந்த தமிழர்களை நமது இளைஞர்களை கவர்ந்து, ஈர்த்து ஒன்றிணைக்கும் வேலையை எங்கள் நியூஸ் 7 சேனல் செய்யும் .
அதன் முதல் கட்டமாகத்தான் உலகெங்கும் உள்ள தமிழ் இளைஞர்களின் சாதனை அடையாளமான ஏ ஆர் ரகுமானை வைத்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி இளைய சமுதாயத்துக்கு எங்கள் சேனலை அறிமுகப்படுத்த திட்டமிட்டோம். அதற்காக நான் அவரை சந்தித்தபோது “ஒரு செய்தி சேனல் துவக்கத்துக்கு நான் எதற்கு?” என்றே கேட்டார் . உலகத் தமிழர்களை — தமிழ் இளைஞர்களை இணைக்கும் எங்கள் நோக்கத்தை சொன்னபோது சந்தோஷமான ஒப்புக் கொண்டார். எங்கள் சேனலுக்கான லோகோ இசையும் சேனலுக்கான ‘ஆந்தம்’ ஒன்றையும் நமது அவர் அமைத்து தருகிறார் ” என்றார் உற்சாகமாக.
ஆஸ்கார் நாயகன் அறிமுகம் செய்யும் சேனல் விருதுத் தரத்தில் இயங்கட்டும் !