திரைப் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள் அளவில் சிறியதாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருப்பது நல்லது என்பார்கள் .
அந்த வகையில் மலேசியாவைச் சேர்ந்த மைன்ட் ஸ்கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் ஜெயராதாகிருஷ்ணனும் கீகர் புரடக்ஷன்ஸ் சார்பில் நவகுமாரனும் இணைந்து தயாரிக்க, மலேசியாவில் பல குறும்படங்களை இயக்கிய அமீன் இயக்கி இருக்கும் படம் 8 எம் எம்.

நிர்மல் திவ்யா என்று இரண்டு புதுமுகங்கள் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் மலேசியாவின் புகழ்பெற்ற தமிழ் நடிகரும் பாடகருமான ஜெயபாலன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .
கே.எல். தியாகராஜன் என்பவர் பாடல் எழுதி இருப்பதோடு வில்லனாக நடித்தும் இருக்கிறார் . ஒளிப்பதிவாளர் மதியின் உதவியாளரான சக்தி ஒளிப்பதிவு செய்கிறார் .
ஸ்ரீ படத்துக்கு இசையமைத்தவரும் விந்தையடி நீ எனக்கு என்ற படத்தை இயக்கி நடித்தவருமான முரளி நான்கு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் .
ஆதியும் அந்தமும் பனி விழும் நிலவு ஆகிய படங்களுக்கு அற்புதமான இசை கொடுத்த எல்.வி.கணேசன் ஒரு பாடலுக்கு இசையமைத்து இருப்பதோடு பின்னனி இசையையும் அமைத்துள்ளார்.
மலேசியா , ஆந்திரா, கர்நாடகா , கேரளா, தமிழ்நாட்டில் சென்னை ,ஏற்காடு ஏலகிரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்து பின் பணியாக்கம் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தின் விளம்பர முன்னோட்ட விழாவில் பரபரப்பான இரண்டு டிரைலர்கள் திரையிடப்பட்டன.
அடுத்து படம் சம்மந்தப்பட்ட அனைத்து ஆண்களும் கருப்பு நிற சட்டையும் வெள்ளை வெளேர் வேட்டியும் உடுத்தி மேடை ஏறினார்கள் .
ஒளிப்பதிவாளர் சக்தி பேசும்போது “பல கட்டுப்பாடுகளுடன் கச்சிதமாக எடுக்கப்பட்ட படம்தான் இது . ஆனாலும் பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் பார்ப்பது போல இருக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னார் . அதன்படியே எடுத்துக் கொடுத்து இருக்கிறேன் ” என்றார் .

“மலேசியாவில் மிருகங்கள் இருக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள காடுகளில் படமாக்கினோம் . இங்கும் அப்படிதான். எங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார் ஹீரோ நிர்மல்
நடனக் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் மிக இயல்பாக இருக்க வேண்டுமே என்ற கட்டளைக்கேற்ப அப்படியே செய்து கொடுத்தோம் என்றார்கள் நடன சண்டை இயக்குனர்கள்.
இசையமைப்பாளர் எல்.வி.கணேசன் “படத்தின் இசை பற்றி கூறிய டைரக்டர் நிறைய இடங்களில் குரல் ஒலிகளிலேயே பின்னணி இசை வரவேண்டும் என்று ஆசைப் பட்டார் அப்படியே செய்தேன் . அதோடு விதம் விதமான டிரம்ஸ்களை பயன்படுத்தி இருக்கிறேன் . மேற்கத்திய ஒபரா ஸ்டைல் இசையையும் கொடுத்திருக்கிறேன்” என்றார், சிரத்தையாக
ரூபாய், டாலர், பவுண்டு, வெள்ளி, யென் உட்பட உலகின் எல்லா நாட்டு பண நாட்டின் பெயரையும் வைத்து படத்தில் ஒரு பாடல் இருக்கிறதாம் . (அப்போ .. இது பணக்காரப்படம்தான் )
தயாரிப்பாளர் ஜெயராதாகிருஷ்ணன், “மலேசியாவில் இதுவரை நீங்கள் பார்க்காத பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம் , குறிப்பாக ராஜராஜ சோழன் , ராஜேந்திர சோழன் வரலாற்றில் படிப்போமே கடாரம் என்ற பகுதி பற்றி….(ராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் என்ற புகழ்ப் பெயரே உண்டு) அங்கே எல்லாம் படப்பிடிப்பை வைத்து இருக்கிறோம் ” என்று பெருமையாக சொன்னவர்
தொடர்ந்து ” நாங்கள் எல்லோரும் இந்த நிகழ்ச்சிக்கு ஏன் வேட்டி கட்டி வந்தோம் தெரியுமா?. நம்ம கலாச்சாரத்தை வேற யாரும் கப்பல் ஏறி வந்து காப்பாத்த மாட்டாங்க. நாம்தான் காப்பாத்தணும். நம்ம வேட்டி உடுத்தினா நம்ம பொருளாதாரம் இந்த வேட்டியை உருவாக்குகிற நம்ம மக்களுக்கே போகும் . கண்ட கண்ட அந்நியத் துணிகளை வாங்கினா யாருக்கோ போகுமே ” என்றார் , அற்புதமாக .
பாராட்டுகள்… நன்றிகள்… ஜெயராதாகிருஷ்ணன்.

இறுதியாக “அண்ணன் ஜெயராதா கிருஷ்ணன் இல்லாவிட்டால் இந்தப் படம் இல்லை. படம் சிறப்பாக வந்திருக்கிறது ” என்று கூறிய இயக்குனர் அமீனிடம்
“படத்துக்குப் பெயராக.. அது என்ன 8 எம் எம்?” என்று கேட்டால்…
“அது நிச்சயமாக கேமராவின் லென்ஸ் அளவோ துப்பாக்கிக் குண்டின் அளவோ அல்ல . அது என்ன என்பதை வைத்துதான் படமே இருக்கிறது . கிளைமாக்சில்தான் அது சொல்லப்படும் ” என்கிறார் .
நல்லாருந்தா நல்லதுதான் !