சில்வர் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ரமேஷ்குமார் தயாரிக்க , உமாபதி நாயகனாக அறிமுகமாக ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாக , கதை திரைக்கதை வசனம் எழுதி இன்பசேகர் இயக்கி இருக்கும் படம் அதாகப்பட்டது மகா ஜனங்களே!
நாயகன் உமாபதி நடிகர் தம்பி ராமையாவின் மகன். ரேஷ்மா ரத்தோர் தெலுங்கில் பல படங்களில் நடித்ததோடு ஈ ரோஜ்லு என்ற சூப்பர் ஹிட் படத்தில் கதா நாயகியாக நடித்தவர்.
இயக்குனர் இன்ப சேகர் விஜய் டி.வி.யில் பல ஆண்டுகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி கலக்கப் போவது யாரு ? சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை இயக்கியவர் .
படத்தின் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா அட்டகத்தி மற்றும் குக்கூ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசை டி.இமான் .

கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். மற்றும் ஆடுகளம் நரேன், பாண்டியராஜன் , மனோபாலா புதுமுக நடிகர் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
“நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்கு போட்டாலும் அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேற ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம்.
இந்த கதைக்கருவை மையமாக வைத்து விறுவறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் படம் தான் “அதாகப்பட்டது மகாஜனங்களே”.வித்தியாசமான தலைப்புக்கான காரணம் படத்தின் இறுதிக் காட்சியில் தெரியவரும்.” என்கிறார் சகஜமாகப் பேசும் இன்ப சேகர் .
உமாபதி பற்றி இயக்குனர் சொல்லும் ஒரு விசயமும் சிறப்பானது . ” படத்துக்கு வாய்ப்புக் கேட்டு வந்தவர்களில் தேர்வுகள் நடத்தி இவரை செலக்ட் செய்து விட்டேன் . உடனே அவர் என்னிடம் நான்தான் ஹீரோ என்று உறுதியாக முடிவு செய்து விட்டீர்களா என்று கேட்டு உறுதி செய்து கொண்ட பிறகுதான் , தான் தம்பி ராமையாவின் மகன் என்பதையே அவர் சொன்னார் .

அதுவரை எங்களுக்கே விஷயம் தெரியாது. அதன் பிறகுதான் தம்பி ராமைய்யா அவர்களை சந்தித்து மரியாதை நிமித்தம் கதையை சொன்னேன். அவரும் பாராட்டி வாழ்த்தினார்.
அது போல இசை அமைக்க இமானைக் கேட்டுப் போனபோது ”கதை பிடித்தால்தான் இசை அமைப்பேன் . ஏனென்றால் என் உழைப்பு வீணாவதை நான் விரும்ப மாட்டேன். முடியாது என்று சொன்னால் அதன் பிறகு வருத்தப்படக் கூடாது ‘ என்றார் . சம்மதம் சொல்லி கதையை சொன்னேன் . கேட்டு முடித்ததும் நான் இசை அமைக்கிறேன் என்று உற்சாகமாக சொன்னார் . அது எங்களுக்கு பெரிய பலம் ” என்கிறார் .
உண்மைதான். வாழ்த்துகள் .