புதிதாக பிசினஸ் தொடங்க நினைப்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்து விவாதித்து திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டிய பிசினசை முடிவு செய்து செயல்படுத்தி அதையே வெற்றிகரமாக ஆரம்பித்து விட்ட சந்தோஷத்தை கொண்டாட….. சினிமாவுக்கு(ம்)ப் போவார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் என்ன பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிடும்போதே சினிமா எடுக்கலாமா என்றும் யோசிக்கிறார்கள்.
அதனால்தான் ஒரு காலத்தில் ‘தியேட்டர்கள் இங்கே ; படங்கள் எங்கே ‘ என்று கோஷம் போட்ட நிலை மாறி இப்போது ”படங்கள் இங்கே : தியேட்டர்கள் இங்கே” என்று கேட்கும் நிலைமை!
அது மட்டுமல்லாது தியேட்டர்களை வளைத்து படம் போடும் வேலையை, சில பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் பெரிய படங்களுக்காக மட்டுமே செய்ய , சின்ன படங்கள் தியேட்டர் கிடைக்காமல் திக்குத் தடுமாறி நிற்கின்றன.
இந்த ரணகள அதகலத்தில், பெரிய படங்களை மட்டுமல்லாது சின்னப் படங்களுக்கும் வியாபாரம் பேசி தியேட்டருக்குள் தள்ளிவிடும் வேலையை ரசனையோடு செய்ய ஆரம்பித்திருக்கிறார் ‘தி வைப்ரன்ட் மூவீஸ் வெங்கடேஷ் ராஜா’
“சுமார் நானூறு படங்கள் இப்படி இருக்கு . நான் முடிஞ்சவரை எல்லாம் படங்களையும் பார்க்கிறேன். அந்த படங்களில் நன்றாகப் போகும் அப்படீன்னு எனக்கு தோணும் படங்களை அந்த தயாரிப்பாளரோடு பேசி வாங்கி வெளியிடுகிறேன் . அப்படி நான் பார்த்த படங்களில் ஆதர்ஷ் ஸ்டுடியோ அருண் தயாரிப்பில் வெற்றி மகாலிங்கம் இயக்கி மிர்ச்சி செந்தில் விஜயலட்சுமி நடித்த வெண்ணிலா வீடு படம் மிகவும் பிடித்துப் போக , அந்தப் படத்தை வாங்கி இந்த மாதம் ரிலீஸ் செய்கிறேன் ” என்கிறார் வெங்கடேஷ் ராஜா.
அடுத்தபடியாக விதார்த் நடித்த ஆள் படத்தை வெளியிடுகிறார் . “மேலும் சில படங்கள் பேசிட்டு இருக்கேன்” என்கிறார் .
“பொதுவாக இப்படி படங்களை வாங்கி வெளியிடுவோர் தயாரிப்பாளர்களுக்கு சரியான கணக்கு காட்டுவது இல்லை . தொகையைத் தருவது இல்லைன்னு புகார்கள் வருதே.. நீங்க எப்படி ?’ என்றால்
“என்னைப் பொறுத்தவரை நான் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறேன்.. ஒரு புரடியூசர் படத்தை எடுத்துட்டு வந்தா அவரிடம் கண்மூடித்தனமாக அடித்துப் பேசி படம் வாங்குவது இல்லை
அனுபவம் இல்லாமலோ அனுபவத்துடனோ படம் எடுத்து இருக்கும் அந்த தயாரிப்பாளரை உட்கார வைத்து இன்றைய வியாபார நிலையை ஓப்பனாக பேசுவேன் . அவர்களை எஜுகேட் பண்றேன். அந்த தயாரிப்பாளரை தியேட்டரில் மக்களோடு மக்களாக உட்கார்ந்து குடும்பத்தோட படம் பார்க்க வைக்கிறேன். படத்தை பத்தி மக்கள் என்ன சொல்றாங்கன்னு அவரையே கேட்க வைக்கிறேன் . அவங்க இந்தப் படத்துல செஞ்சிருக்கற தப்புகளை சுட்டிக் காட்டுறேன்.
மறுபடியும் படம் எடுக்கற தைரியத்தையும் உணர்வையும் ஏற்படுத்தறேன்.
வாங்கி வெளியிடும் அளவுக்கு என்னை கவராத படங்களை தயாரிப்பாளரே வெளியிட உதவிகள் செய்றேன் . அதுக்கு காசு வாங்கறது இல்ல.
என்னைப் பொறுத்தவரை வெளிவராமல் இருக்கிற எல்லா படங்களையும் வெளியிட முடியும் . ஆனால் அது சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பில்தான் இருக்கு ” என்கிறார் வெங்கடேஷ் ராஜா.
தீபாவளிக்கு எந்தப் படத்தை வாங்கி வெளியிடலாம் என்பது வரை இப்போதே திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் வெங்கடேஷ் ராஜா .(பார்ட்டி படு தெளிவு !)
அடுத்த கட்டமாக சில படங்களுக்கு லைன் புரடியூசராக களம் இறங்கும் திட்டமும் இருக்கிறது வெங்கடேஷ் ராஜாவிடம் ( சீக்கிரம் , லைனா புரடியூஸ் பண்ணுங்க…!)