தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் வழங்க,
பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பான் வினோத், வினாயகன் நடிப்பில் அன்வர் ரஷீத் இயக்கி மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட ட்ரான்ஸ் படத்தின் தமிழ் வடிவமே நிலை மறந்தவன்.
எளிய அப்பாவி கிறிஸ்தவ மக்கள், கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்குவதாக பொய்யான கூட்டங்கள் நடத்தி மக்களிடம் இருந்து காசு பறித்து பணத்தில் கொழிக்கிறது கிறிஸ்தவ மதத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு கும்பல் .
மனநிலை பாதிக்கப்பட்ட தம்பியோடு வளர்ந்த , படித்த, வேலை கிடைக்காத , தன்னம்பிக்கை வளர்க்கும் அளவுக்கு பேச்சுத் திறமை உள்ள ஓர் இந்து இளைஞன் அந்த கும்பலின் வலையில் சிக்குகிறான். அவனை கிறிஸ்தவ இளைஞனாக பெயர் மாற்றி நோய் தீர்ப்புக் கூட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போல மேலும் பேசக் கற்றுக் கொடுத்து பைபிளை நன்கு படிக்க வைத்து மேடை ஏற்றுகிறார்கள் .
மேடையில் அவன் உணர்ச்சிவசமாக பேசுவதைக் கண்டு , பொய்களை நம்பும் கிறிஸ்தவ மக்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள் . அதே நேரம் நோய்களுக்கு மருத்துவமனைக்குப் போகாமல் இவன் சொல்வது போல ஜெபம் செய்து அதனால் மரணங்களும் நிகழ்கிறது.
ஒரு நிலையில் தனது செயலுக்காக வருந்தும் இளைஞன் என்ன முடிவு எடுக்கிறான் என்ன நடக்கிறது என்பதே படம்.
நாயகனாக அட்டகாசமாக நடித்துள்ளார் பகத் பாசில் . கடைசிக் காட்சிகளில் செம்பான் வினோத் நெகிழ வைக்கிறார். நஸ்ரியா அசத்தி இருக்கிறார் .அமல நீரத் ஒளிப்பதிவும் , ஜாக்சன் விஜய் , சுஷின் ஷ்யாம் இசையும் அருமை.
இந்து மதத்தைச் சேர்ந்த சிலர் பணம் சம்பாதிக்க இந்து நபர்கள் காசுக்காக கிறிஸ்தவ மதத்துக்குள் போய் அந்த மக்களின் நம்பிக்கைகளை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் படத்தை மலையாளத்தில் ஒரு இஸ்லாமிய இயக்குனர் இயக்க முடிகிறது இஸ்லாமிய நடிக நடிகையர் நடிக்க முடிகிறது என்பதுதான் மலையாள சினிமா உலகின் அற்புதம்.
தமிழகத்தில் இப்படி ஏமாற்று நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை என்பதால் கேரளாவில் சந்தோஷமாகப் பார்த்து இருக்கிறார்கள்.தமிழகத்தில் கிறிஸ்தவ மதத்தில் இப்படி பிரபலமாக இருக்கும் (எஸ்ரா) சற்குணம், பால் திவாகரன் (தினகரன்) போன்ற பெயர்கள் ஒலி மட்டும் நீக்கப்பட்டு வருகின்றன .
மோகன் சி மோசஸ் என்று ஒரு பெயர் நேரடியாக வருகிறது .
சிறப்பான திரைக்கதை மற்றும் படமாக்கல் .
வித்தியாசமான விறுவிறுப்பான படம் .