ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வயாகாம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அசோக் செல்வன், ரீத்து வர்மா, அபர்ணா பால முரளி , ஷிவாத்மிகா, சிவதா, அபிராமி , அழகம்பெருமாள் நடிப்பில் ரா கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் படம் .
திருமணம் முடிந்த நிலையில் பழைய காதலனோடு மனைவி போய்விட இடிந்து போய்விட்ட ஒரு ஐ டி நிறுவன ஊழிய இளைஞனுக்கு (அசோக் செல்வன்), தான் எழுதிய இரண்டு குறுநாவல்களைப் படிக்கத் தருகிறார் குடும்ப மருத்துவர் (அபிராமி) . கதைகளில் வரும் நாயகனாக தன்னை பாவித்துக் கொண்டே அந்தக் கதைகளைப் படிக்கிறான் அவன் .
முதல் கதையில் கைப்பந்து விளையாட்டு ஆர்வம் இருந்தும் அப்பாவால் முடக்கப்பட்டு பரத நாட்டியம் படிக்கும் இளம்பெண் ( சிவாத்மிகா) ஒருத்தியை சந்திக்கும் கோபக்கார இளைஞன் (அசோக் செல்வன்), அவளை மீண்டும் விளையாட்டுக்குக் கொண்டு வர, அவளை அப்பா கை கழுவிய நிலையில் , இருவரும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மனைவி கர்ப்பவதியாக இருக்கும் நிலையில் மின்னல் தாக்கி இடிந்து விழும் ஒரு கட்டுமானப் பணிக் கட்டிடத்தில் அவன் சிக்கிக் கொள்ள, அவனுக்கு என்ன ஆச்சு என்று புரிந்து கொள்ள முடியாதபடி கதையின் மிச்ச தாள்கள் கிழிக்கப்பட்டு இருக்கிறது . முடிவை அறிய முடியவில்லை. நாயகன் ஓடிப் போய் டாக்டரிடம் கேட்க, ”இரண்டாம் கதையைப்படி புரியும்” என்கிறார் டாக்டர். படிக்கிறான்.

காதலித்துதான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கும் வெள்ளந்தியான மகளுக்கு ( அபர்ணா பால முரளி) நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்து வைக்க அப்பா (அழகம்பெருமாள்) முயல . கல்யாண தினத்தன்று அவள் ஓடிப் போகிறாள். போகும் வழியில் அப்பாவியான ஒரு இளைஞனை (அசோக் செல்வன்) சந்திக்கிறாள்.. காதல் தோல்வியால் விஷம் குடித்து இருப்பதாக அவன் சொல்ல அவனைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு போக ,
அங்கே அப்பா வர , அப்பாவிடம் இருந்து தப்பிக்க அவனையே தாலி காட்டச் சொல்ல , தாலி கட்டப் போகையில் அவள் மூக்கில் ரத்தம் வந்து மயங்கி விழுகிறாள் . மேலே படிக்க முடியாமல் , அதற்குப் பின்பு இதிலும் தாள்கள் கிழிக்கப்பட்டு இருக்க, நாயகன் டாக்டரிடம் ஓட ,
கல்கத்தாவிலும் ஜார்கண்டிலுமாக இரண்டு முகவரிகளைக் கொடுத்து “அங்கே போய் சம்மந்த்தப்பட்ட ஆட்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்” என்று டாக்டர் சொல்ல, பயணமே பிடிக்காத நாயகன் முதன் முதலாக கிளம்புகிறான்.
வழியில் ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் காதலனால் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணை (ரீத்து வர்மா) சந்திக்கிறான் . அவளும் பயணத்தில் இணைய , இரு கதைகளின் நாயகன் நாயகிக்கு நடந்தது என்ன என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகும் நாயகன், கற்றதும் பெற்றதுமே இந்தப் படம் .
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவியரசு கண்ணதாசன் வரிகளுக்கான திரைப்பட விளக்கம்தான் இந்தப் படம் .
எழுதி இயக்கி இருக்கும் ரா கார்த்திக்கிற்கு மனதாரப் பாராட்டுகள் . எழுத்து இயக்கம் இரண்டிலும் முதல் படத்திலேயே சில சிறப்பான உயரங்களைத் தொட்டு இருக்கிறார் .
நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் , சூழல்கள், திருப்பங்கள் , கதைப் போக்குகள் என்று இருந்தும் குழம்பாமல் குழப்பாமல் சும்மா நூல் பிடித்தது போல காட்சிகளைக் கோர்த்துக் கொண்டு போயிருக்கிறார் கார்த்திக் . ‘யாருக்கும் வாழ்க்கை நிரந்தரமில்லை. அதை நினைத்துப் பயந்தால் வாழ்க்கையும் இல்லை. எல்லோருக்கும் அதுவே . அப்படி இருக்க சக மனிதனைப் பார்த்து புன்னகை செய்யக் கற்றுக் கொள்வோம் ” என்று படத்தில் சிகர முத்திரையாக அவர் சொல்லும் விஷயம், மனம் கசிய வைக்கிறது. .

அதே போல படத்தில் எதையும் புன்னகையோடு எதிர்கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்களுக்கு பிரபாகரன் – மதிவதனி என்று பெயர் வைத்திருக்கும் இயக்குனருக்கு நன்றியும் அன்பு முத்தமும் .
இப்படி எழுத்தில் மட்டுமல்ல … படமாக்கலிலும் கவர்கிறார் கார்த்திக் . அட்டகாசமான லொக்கேஷன்கள் … படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரேமிலும் வானத்தின் பரப்புக்கும் வண்ணங்களுக்கும் அவர் கொடுத்து இருக்கும் முக்கியத்துவம் எல்லாம் அசர அடிக்கிறது அற்புதம்
எழுத்து படமாக்கல் இரண்டிலும் திறன் வாய்ந்த இயக்குனர்களைத் தோற்கடிக்க முடியாது. .
விது அய்யன்னாவின் அற்புதமான ஒளிப்பதிவு இயக்குனருக்கும் பெரிய பலம். எல்லாவகையிலும் சிறப்பான ஒளிப்பதிவு. (அபிராமிக்கு மட்டும் சில கொடுமையான கேமரா கோணங்கள்) . அதுவும் அந்த வட இந்தியப் பனிவனம் . அடேயப்பா பார்க்கும் நமக்கே ‘ஜிலீர்க்கிறது’
கோபி சுந்தரின் பாடலிசை, தரன் குமாரின் பின்னணி இசை இரண்டும் உணர்வுக் கூட்டலுக்கு உதவுகிறது
நிறைய பாத்திரங்கள் , சம்பவங்கள் கொண்ட திரைக்கதைக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுக்கிறது அந்தோணியின் படத் தொகுப்பு.
மூன்று கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார் அசோக் செல்வன் . இரண்டாவது குறுநாவலின் நாயகனாக அசத்தி இருக்கிறார் .

உள்ளம் கொள்ளை கொள்கிறார் இரண்டாவது குறுநாவலின் நாயகியாக வரும் அபர்ணா முரளி . அதே நேரம் ரீத்து வர்மா , ஷிவாத்மிகா , முதல் குறுநாவலின் நிஜ பாத்திரமாக வரும் சிவதா எல்லோரும் ஈர்க்கிறார்கள் . ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்துக்கும் இயக்குனர் கொடுத்திருக்கும் நடை உடை பாவனை மற்றும் குண இயல்பு வடிவமைப்புகள் அருமை .
படத்தின் மிகப் பெரிய பிரச்சனையே அதிக பட்ச விவரணைதான் . தேவைக்கு மேல் விவரங்கள்!
ஒட்டு மொத்த திரைக்கதையையும் நோக்கும்போது ஒன்று புரிகிறது . படத்தில் காட்டுவது போல காலக் கிராமத்தில் அவன் குணம் அதில் நகைச்சுவை அப்புறம் கல்யாணம்… மனைவி ஓடிப்போவது மனம் உடைவது என்று இந்தக் கதையை சொன்னது முதல் பலவீனம் .
மாறாக அதீத மனச் சிதைவில் மருத்துவரை சந்திக்க வரும் சீரியசான நாயகன் அவன் சொல்வதாக , மனைவி ஓடிப்போன சம்பவம் (அதில் இப்போது உள்ளது போல நகைச்சுவை இருக்கலாம் தப்பில்லை) உள்ளிட்ட ஒரு பிளாஷ் பேக் என்று துவங்கி ….
அதன் பின்னர் அவனுக்கு டாக்டர் தரும் குறுநாவல்கள் என்று திரைக்கதை போயிருந்தால் இன்னும் ஈர்ப்பாக கதை அமைந்து இருக்கும். நேரடி விவரிப்பும் நாயகனின் மற்ற குணாதிசயங்கள் பற்றிய விவரிப்பும் அடுத்து அடுத்து புதுப்புதுக் கதைகள் வருவது போன்ற அலுப்பை ஏற்படுத்துகிறது .
கதையை நாயகன் படிக்கும்போது அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு வேறு வேறு நடிகையர் , பின் அந்தக் கதாபாத்திரங்களை நேரில் சந்திக்கும்போது வேறு வேறு நடிக நடிகையர் என்று இயக்குனர் முடிவு எடுத்தது ஒரு பெரிய தப்பு .

எல்லா கதைகளிலும் அசோக் செல்வன் வரட்டும் என்ற ஹீரோ நடிகருக்கு முக்கியத்துவம் தரும் சிந்தனை இந்தப் படத்துக்கு சிக்கலாகப் போய் விட்டது . நாயகன் படிக்கும் இரண்டு குறுநாவல்களிலும் வரும் நாயகர்களாக அசோக் செல்வனையே காட்டியதற்குப் பதில், வேறு ஹீரோ ஹீரோயின்களை பயன்படுத்தி அவர்களையே அசோக் செல்வன் நிஜத்தில் சந்திப்பது போலவும் காட்டி இருந்தால் ரசிகனுக்கு இன்னும் சிறப்பான மன இணைப்பு (connect) கிடைத்து இருக்கும் .
இரண்டாவது குறுநாவலின் நிஜ நபராக நடிகர் ஜீவா வருவது போல அசோக் செல்வன் படிக்கும் போது விரியும் காட்சிகளிலும் ஜீவாவே வந்து இருக்க வேண்டும் . இறுதிக் காட்சிகளிலும் ஜீவாவோடு அபர்ணாவே வந்திருக்க வேண்டும் . அதுதானே ரசிகனை உணர்ச்சிவசப்படுத்தும் . திரையில் இசையின் பின்னணியில் ஒரு முகம் என்பது சாதாரண விசயமில்லை,
குறைந்த பட்சம்…
முதல் குறுநாவலின் நிஜ நாயகியாகவும் ஷிவாத்மிகாவே வந்திருக்க வேண்டும். முதல் குறுநாவலின் நாயகனாக தன்னையே அசோக் செல்வன் நினைத்துக் கொண்டதால் , அந்தக் கதை முடியாத நிலையில் இரண்டாவது கதையை படிக்கும்போது அதன் நாயகனாக வேறு ஆளை நினைத்தான் என்ற லாஜிக்கின்படி இரண்டாவது குறுநாவலில் முழுக்க முழுக்க ஜீவா அபர்ணா பாலமுரளியையே கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதுதான் நியாயம் கூட .
இப்படிச் செய்யாத காரணத்தால் எழுத்தில் உழைத்த பெரும் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் ஆகிறது . .
மேலே சொல்லப்பட்டிருக்கும் மாற்றங்களை செய்து இருந்தால் இந்தப் படம் மாபெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கும் .
எனினும் இப்போதும் கூட சுகமான கவிதையாக மனம் நிறைக்கிறது .