ரோல்லிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரிக்க, ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜேந்திரன், அருவி மதன் நடிப்பில், அருவி மதன் எழுதி இயக்கி இருக்கும் படம் .
ஒரு அபார்ட்மென்டில் இருக்கும் மூன்று குடித்தனங்களில் உள்ள நபர்கள் நட்பு ரீதியாக ஒன்று சேர்ந்து சனிக்கிழமை இரவில் மொட்டை மாடியில் ஒன்று கூடி பாட்டுக்குப்பாட்டு , நடித்துக் காட்டி படத்தின் பெயர் சொல்லும் dumb charades விளையாட்டு ஆகியவற்றை சத்தம் போட்டு உற்சாகமாக விளையாட,
தூங்க விடாமல் தொந்தரவு என்று பக்கத்து வீட்டார் யாரோ போலீசுக்குப் புகார் சொல்ல , போலீஸ் விசாரிக்க வர, பேச்சில் இரண்டு பக்கமும் அவரவர் நியாயத்தை மட்டும் பேசும் நிலையில் பிரச்னை பெரிதாக , ஆணவமான, மனசாட்சி இல்லாத , வில்லங்கமான அந்த இன்ஸ்பெக்டர் (அருவி மதன்) அதை பெரிய ஈகோ பிரச்னையாக்குகிறார்.
அவரால் தனிப்பட்ட வகையில் குறி வைக்கப்படுகிறது ஒரு தம்பதி ( ஹரீஷ் உத்தமன்- ஷீலா ராஜேந்திரன்) . அவர்களுக்கு ஆறேழு வயதில் ஒரு மகள். (ஆழியா)
பிறப்பால் கணவன் அநாதை என்ற நிலையில், சாதி மாறிய காதலால் பெண்ணின் பெற்றோரும் கைவிட , மனைவி தன் பெற்றோரைப் பார்த்தே பல வருடம் ஆகிறது .
பெற்றோர் வருவதாக வரும் செய்திகள் சில முறை பொய்த்துப் போன நிலையில், இந்த முறை அவர்களை எப்படியும் கொண்டு வருவேன் என்று ஊர் நண்பன் திட்டமிட, மறுநாள் காலை அவர்கள் வரும் செய்தி கணவனுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது . ஒருவேளை இதுவும் பொய்ச் சேதி என்றால் மனைவி தாங்க மாட்டாள் என்ற நிலையில், அவர்கள் உண்மையாகவே வந்தால் மனைவிக்கு அது சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்று சொல்லாமல் விடுகிறான் கணவன் .
இந்த நிலையில் தம்பதி உட்பட , அந்த அபார்ட்மெண்டில் உள்ள அனைவரையும் பற்றி சம்பவம் நடந்த அன்று இரவு முதல் விடிய விடிய போலீஸ் விசாரித்துக் கொண்டு இருப்பது பேப்பர் , பால் போடும் நபர்கள், கடைக்காரர்கள் மூலம் கணவனுக்கு தெரிய வருகிறது .
ஒரு ஆட்டோக்காரன் வந்து வம்பிழுத்து விட்டு அவன் ஏதோ அடி வாங்கியதாக ஒரு சூழலை உருவாக்கி விட்டுப் போகிறான்
அதிகாலையில் கடைக்குப் போய்விட்டு கணவன் வீட்டுக்கு வந்தால் நாடு வீட்டில் யாரோ ஒருவன் செத்துக் கிடக்கிறான் . எப்படி நடந்தது என்று கேட்டால் மனைவி சொல்லும் பதில் ஒரே குழப்பமாக இருக்கிறது .
பக்கத்தில் இருக்கும் உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் (வசந்த் மாரிமுத்து) உதவிக்குப் போனால் , அவர் வீட்டுக்கு வந்து பிணத்தைப் பார்த்து தன் பங்குக்கு நடுங்குகிறார் . என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதற்குள் அந்த வில்லங்க இன்ஸ்பெக்டர் வந்து நிற்கிறார் .
நடந்தது என்ன என்பதே படம்.
குடித்தனங்கள் ஒன்று கூடி பாட்டுக்குப் பாட்டு , படப் பெயர் கண்டு பிடிக்கும் விளையாட்டு எல்லாம் விளையாடுவதை அவ்வளவு எளிய உரையாடல்களோடு இயல்பாக நடிக்க வைத்து உயிர்ப்பாக எடுத்திருக்கும் வகையிலேயே ஒரு நல்ல இயக்குனராக வெளிப்பட்டு விடுகிறார் மதன் . வாழ்த்துகள் . .
போலீசோடு அபார்ட்மென்ட் வாசிகளுக்கு வரும் சண்டையும் அதன் முடிவும் கூட அவ்வளவு இயல்பு
இந்தக் காட்சிகளில் ஒளிப்பதிவு அருமை என்றால் பின்னணி இசை பிரம்மாதமாகப் பாய்ந்து படபடப்பை அதிகப் படுத்துகிறது .
போலீஸ் பிரச்னைக் கதையில் மகளைக் கல்யாணத்துக்கு பிறகு முதன் முதலாகப் பார்க்க வரும் பெற்றோரின் கதையைக் கோர்த்த வகையில் நல்ல திரைக்கதையாளராகவும் பாராட்டுக்குரியவர் ஆகிறார் மதன்
முதல் மாடியில் வாழும் தம்பதி (திருநாவுக்கரசு – ஹரிதா) யின் அன்பும நட்புறவும் அவ்வளவு அருமையாக இயல்பாக சொல்லப்படுகிறது
இறந்து கிடப்பவன் பற்றி மனைவி கூறும் காட்சியின் குழப்பம் பரபரப்பை ஏற்படுத்தினாலும் அந்தக் காட்சி(கள்) தேவைக்கு மேல் நீளும்போது கொஞ்சம் பின்னடைவுக்கு ஆளானது படம்
இடைவேளைக்குப் பிறகு மிகவும் சிறப்பு.
ஒரு உயர்நீதி மன்ற வக்கீல் பிணத்தைப் பார்த்து அவ்வளவு நடுங்குவாரா என்ற கேள்வி வந்தாலும் , அதுவரை பார்த்த காட்சிகளின் தாக்கமும் வசந்த் மாறி முத்துவின் நடிப்பும் சிரிப்பலைகளை உண்டு பண்ணுகிறது .படத்துக்கு மிகப் பெரிய பலமாகிறது இந்த விஷயம்
இடைவேளைக்குப் பிறகு ஒரே வீட்டில் முழுப் படமும் பயணித்தாலும் , அது ஒரு குறையாகத் தெரியாத அளவுக்கு படம் பரபரப்பாகப் பயணிப்பதை பாராட்டியே ஆகவேண்டும் .
இயக்குனர் அருவி மதன் தேவை இல்லாமல் ஒரு காட்சி கூட எடுக்கவில்லை என்பது புரிகிறது.
மற்ற அபார்ட்மென்ட் கதாபாத்திரங்களை கிளைமாக்சில் பயன்படுத்திய விதமும் தரம் . . கிளைமாக்ஸ் நெகிழ்வு
கடைசியில் வீடியோ அப்லோட் செய்யப்படுவதாக வரும் ஒரு விஷயம் உண்மையில் அப்லோட் ஆனதா இல்லையா என்பதை பார்வையாளர் முடிவுக்கே விட்ட விதமும் அசத்தல்
வினோத் ராஜா ஒளிப்பதிவு , ராபர்ட் சற்குணம் இசை, சரத்தின் படத் தொகுப்பு இவை யாவும் குறையொன்றும் இல்லை .
கோபம் பயம் தவிப்பு என்று மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் ஹரீஷ் உத்தமனும் ஷீலா ராஜேந்திரனும்
வில்லங்க இன்ஸ்பெக்டராக நிறுத்தி நிதானமான நடிப்பிலும் மிரட்டுகிறார் மதன் . ஹரிதா அவ்வளவு இயல்பு . திருநாவுக்கரசு சிறப்பாக நடித்துள்ளார்
போலீஸ் படும் கஷ்டம் பற்றி எல்லாம் இன்ஸ்பெக்டர் பேசும் வசனங்கள் இந்தப் படத்தின் நோக்கத்துக்கு எதிரான ஒன்று
அதே போல போலீஸ் மிரட்டும்போது எல்லாரும் பண்ணினது தப்பு என்று விதம் விதமாக மன்னிப்புக் கேட்கிறார்களே தவிர, இரவு நேரத்தில் பதினோரு மணிக்கு மேல் மொட்டை மாடியில் சத்தம் போட்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் செய்தது தப்புதான் என்று நல்லவர்கள் தரப்பில் யாருமே மனப்பூர்வமாக உணராததும் ஒரு குறை
முக்கியமாக இன்னும் எமோஷனலாக , ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தெறிக்க விட வேண்டிய ஒரு கிளைமாக்சை ஏன் இப்படி பொங்கல் பானையில் புளியோதரை கிண்டிய கதையாக முடித்தார்கள் என்பதும் புரியவில்லை
இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும்
குறைவான லொக்கேஷன்கள் , குறைவான சில நடிகர் நடிகர்களை மட்டுமே கொண்டு சராசரிக்கும் மேலான தொழில் நுட்ப நேர்த்தியும் சுவாரஸ்யமான திரைக்கதையும் கொண்ட சிறப்பான படமாக வந்திருக்கிறது இந்தப் படம்
மொத்தத்தில் நூடுல்ஸ் … சூடும் சுவையுமான பிரியாணி
எனினும் திரையரங்க வெற்றிக்கு இந்தத் திரைக்கதை பத்தாது . அதாவது பிரியாணிதான் . அரையடி விட்டத் தட்டை வைத்து ஒரு ஸ்பூன் மட்டும் பரிமாறுகிறார்கள்