ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் சார்பில் மாதவன் , மோகன் இருவரும் தயாரிக்க, அறிமுக நாயகன் இந்திரஜித், தேவிகா மாதவன் ஆகியோர் நடிக்க, தயாரிப்பவரான மாதவனே எழுதி இயக்கி இருக்கும் படம், நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க .
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து ஒரு வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜராக இருக்கும் நாயகன் (இந்திரஜித்) நண்பர்கள் சிலரோடு ஒன்றாக வசிக்கிறான் . அறை நண்பன் ஒருவன் பல பெண்களை வளைக்கும் நபராக இருக்க, அதை நாயகன் கண்டிக்க , ‘முடிஞ்சா ஒரு பொண்ணையாவது வளைச்சுக் காட்டு’ என்று நாயகனிடம் சவால் விடுகிறான் நண்பன் .
ஒரு வழியாக ஒரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்துகிறான் நாயகன் . திருமண சமயத்தில் ஜீன்ஸ் பேன்ட் ஜிப் காரணமாக நாயகனுக்கு ஒரு பிரச்னை வர, அதை சமாளித்து அவன் நாயகியை செய்தானா , திருமணம் ?
என்பதே இந்தப் படம்
இந்திர ஜித் பார்ப்பதற்கு அந்தக் கால டி.ராஜேந்தர், மற்றும் சசிகுமார், ஜே.கே.ரித்தீஷ், கஞ்சா கருப்பு, ஆகியோரின் கூட்டு சாயலில் இருக்கிறார் .
தேவிகா மாதவன் பெரிய கண்ணும் பல்வரிசை சிரிப்புமாக சற்றே கவர்கிறார்
நகைச்சுவைக்கு என்று சாமிநாதன் , மாஸ்டர் சிவா சங்கர் ,சிங்க முத்து என்று பலர் ….. இருக்கிறார்கள்
மகான் கணக்கு , சதுரன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ரிஷால் சாய் இசையில் கல்கோனா கண்ணழகி என்ற பாடல் உற்சாகம் தந்தது. அதிலும் பல்லவி ரொம்ப சிறப்பு.
உதயகீதம் என்ற படத்தில் பலவருஷமாக ஜெயிலில் இருந்து விட்டு வரும் கவுண்டமணி ஒரு கடைக்குப் போய் தேங்காய் என்ன விலை என்று கேட்பார் . கடைக்காரர் பத்து ரூபாய் என்பார் .
உடனே கவுண்டமணி ”ஏங்க…. ஒரு ரெண்டு ரூவா மூணு ரூவாய்க்கு எல்லாம் தேங்காய் கிடைக்காதா ?” என்பார்.
ஒரு நொடி கவுண்டமணியை உற்றுப் பார்த்த கடைக்காரர் “யோவ் .. நீ என்ன ‘உள்ள’ இருந்துட்டு வந்தியா?” என்பார் .
திடுக்கிடும் கவுண்டமணி ” நான் உள்ள இருந்தது உனக்கு எப்படி தெரியும் ?” என்பார் .
“ரெண்டு ரூபாய்க்கு தேங்கா கேட்கும்போதே புரியாதா? எந்தக் காலத்துல வந்து என்னா கேட்கற ?” என்பார் .
படத்தைப் பார்த்து முடிச்சப்போ , இந்தக் காட்சி ஞாபகம் வந்ததே, ……………ஏன்ன்ன்ன்ன்ன் ?