
சக்தி ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி மதிவாணன் சக்திவேல் இயக்கி கதாநாயகனாகவும் நடிக்க,
இந்திரா , தினேஷ், திரி, ஸ்ரீபக், கீதாவாணன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்திருக்கும் படம் நுண்ணுணர்வு . இது நல்லுணர்வா ? பார்க்கலாம் .
சென்னையிலிருந்து ஆஸ்திரேலிய சென்று பல் மருத்துவராக பணியாற்றுபவன் சந்துரு (மதிவாணன் சக்திவேல்).
ஆஸ்திரேலியா வாழ் தமிழ்ப் பெண் சாரு (இந்திரா ) ,
கண் காணாது இருப்போரின் செயல்பாடுகளை எந்த கருவியும் இன்றி , அச்சு அசலாய் உணரும் டெலிபதி என்ற ஞானம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறாள் இந்திரா
ஒரு நிலையில் அவளுக்கு டெலிபதி கை கூடுகிறது . இயல்பாகவோ அல்லது நிகழ்தகவாகவோ அவளுக்கு சந்துருவோடு டெலிபதித் தொடர்பு ஏற்படுகிறது .
அவனும் இவளை உணர்கிறான் .
ஆரம்பத்தில் இருவரும் ஹேண்ட்ஸ் ஃபிரீ செல்போனில் பேசிக் கொள்வது போல, டெலிபதி மூலம் பேசிக் கொள்கின்றனர் . ஒரு நிலையில் காட்சிகளும் தெரிய ஆரம்பிக்க வீடியோ கால் மூலம் பேசிக் கொள்கின்றனர் .
அவர்களுக்குள் ஈர்ப்பு , செல்லச் சண்டைகள் எல்லாம் வருகின்றன.
இந்த நிலையில் சாருவுக்கும் அவளது தந்தைக்கும் சாருவின் மாமா மகன் மூலம் உயிராபத்து வருகிறது .
பெண்களை பலாத்காரம் செய்வதோடு கொலை செய்யவும் அஞ்சாத வினேஷ் என்ற நண்பன் மூலம் சந்துருவுக்கும் உயிராபத்து வருகிறது
இருவருக்கும் இடையிலான டெலிபதி தொடர்பு அவர்களுக்கு உதவ முடிந்ததா இல்லையா என்பதே இந்த நுண்ணுணர்வு .
ஆர்வமுடன் படத்தை எடுத்து இருக்கிறார் மதிவாணன் . முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் .
அந்த இளம் வெயில் வெளிச்சமும் தூய்மையும் அதற்கேற்ப படத்தில் ஜொலிக்கும் எக்ஸ்போஷரும் அருமை .
கதையின் அடிப்படைக் கரு வித்தியாசமானது . சிறப்பானது . ஆனால் திரைக்கதையிலும் எடுத்த வகையிலும் போதாமை.
ஆனால் படத்தில் தலைப்பிலேயே பெரிய தவறு செய்து இருக்கிறார் மதிவாணன் . டெலிபதி என்பதற்கு நுண்ணுணர்வு என்பது சரியான மொழியாக்கம் இல்லை .
ஒரு குறிப்பிட்ட விசயத்தில் ஒருவருக்கு ஏற்படும் நுண்மையான உணர்வே நுண்ணுணர்வு . நுண்மை என்பதற்கான ஆங்கில வார்த்தை மைக்ரோ என்பதுதான் .
உதாரணம் மைக்ராஸ்கோப் — நுண்ணோக்கி
எனில் டெலிபதிக்கு பொருத்தமான தமிழ்ச் சொல்ல என்ன ?
அதற்கு முன்பாக டெலிபதி என்றால் என்ன என்று ;பார்ப்போம் .
கண் காது மூக்கு வாய் தோல் உட்பட எந்தப் புலன்களின் உதவி இன்றி , தொலைவில் இருப்பவரின் உணர்வை ஓரளவுக்காவது உணர்ந்து அறிவதே டெலிபதி எனப்படுகிறது .
தூரம் என்பதே இங்கு முக்கிய வார்த்தை .
ஆங்கிலத்தில் tele என்பது தொலைவைக் குறிக்கும் பதம் .
உதாரணம் telephone — தொலைபேசி, television — தொலைக்காட்சி , telecommunication– தொலைத் தொடர்பு telescope — தொலைநோக்கி
ஆக டெலிபதி என்பதற்கான சரியான தமிழ்ச சொல தொலைவுணர்வு என்பதுதான் .
தவிர டெலிபதி மூலம் தூரத்தில் உள்ளவரின் மனதை கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வர முடியும் என்பதால் டெலிபதிக்கு மிக சரியான தமிழ்ச் சொல் தொலைவுணர்வாட்சி என்பதே .