ஓ காதல் கண்மணி @ விமர்சனம்

_MG_5008
மணிரத்னம் இயக்கத்தில் பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் ஏ ஆர் .ரகுமான் இசையில் துல்கர் சல்மான் , நித்யா மேனன் , பிரகாஷ் ராஜ் , லீலா சாம்சன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஓ காதல் கண்மணி .  என் காதல் கண்மணி என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு படம் இருக்கிறதா ? பார்க்கலாம் . காதல் காமம் எல்லாம் தேவைதான் .   ஆனால் கல்யாணம், குடும்பம் என்பது தேவை இல்லாத தொல்லை என்ற எண்ணம் கொண்ட இளைஞன் ஆதி (துல்கர் சல்மான்) . கும்பகோணத்தில் இருந்து மும்பைக்கு வந்து தன் அண்ணனின் அலுவலக நண்பரான கணபதி (பிரகாஷ் ராஜ்)  வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கிக் கொண்டு வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றியபடி, கூடிய விரைவில் அமெரிக்க போய் பில்கேட்ஸ் போல கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட அவனுக்கு தாராவுடன் (நித்யா மேனன்) அறிமுகம் ஏற்படுகிறது . தாரா ?

அப்பா அம்மா இருவரும் சண்டை விவாகரத்து என்று போய் விட ஏழு வயதிலேயே அப்பா கூட போறியா? இல்ல அம்மா கூட போறியா? என்ற பதில் சொல்ல முடியாத கேள்வியில் சிக்கி நொந்து நூலாகி , தனிமையில் வளர்ந்து மும்பைக்கு  வந்து ஆர்க்கிடெக்ட் ஆகி விட்ட நிலையில் பாரீஸ் போய் மேல் படிப்பு படித்து அதே துறையில் கண்டு பிடிக்கப்படாத உயரங்களை தொடும் லட்சியம் உள்ள பெண் . அவளும் கல்யாணம் என்ற உறவையே  வெறுப்பவள் .

படிப்பு, சம்பாத்தியம் , அதனால் ஏற்படும் தைரியம் இருவருக்குள்ளும் நட்பு , விருப்பம் , காமம் , உறவு என்ற அளவில் மீறிப் பாய்கிறது. கணபதி வீட்டுக்கே தாராவை அழைத்து வந்து கல்யாணம் செய்து கொள்ளாத லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்கிறான் ஆதி. கொஞ்ச நாள் வாழ்த்து விட்டு அமெரிக்க போகும் வாய்ப்பு ஆதிக்கோ , பாரிஸ் போகும் சூழல் தாராவுக்கோ வந்தால் அதோடு பிரிந்து விடலாம் என்பது அவர்களின் திட்டம் .

அல்ஸ்மைசர் மறதி நோய் கொண்ட தனது மனைவி பவானியை (லீலா சாம்சன்) வயதான காலத்திலும் கணபதி பார்த்துக் கொள்ளும் விதம் தாராவுக்குள் வேறு மன மாற்றங்களை ஏற்படுத்துகிறது . கல்யாணம் செய்து கணவன் மனைவியாக  வாழ்வதன்  பலமும் சுகமும் அவளுக்கு புரிய ஆரம்பிக்கிறது .

அதை ஆதி உணர்ந்தானா ? தாராவின் கல்யாண வாழ்வியல் ஆசை நிறைவேறியதா   என்பதே இந்தப் படம் .

IMG_7188

பொதுவாக மணிரத்னம் எடுக்கும் இளமைக் கதைகளில் எடுக்கும் விதம் நன்றாக இருந்தாலும் அதில் சொல்லப் படும் விதம் விமர்சனத்துக்கு உள்ளாகும் . உதாரணம் அலைபாயுதே . (படிக்கும் போது கல்யாணம் பண்ணிக்கிட்டு தாலியை மறைச்சுகிட்டு அப்பா அம்மா கூடவே வாழறதை தமிழ் நாட்டுக்கு சொல்லிக் கொடுத்தவரே இவர்தான் என்று மணிரத்னத்தை விமர்சனக் குண்டுகளால் சுடுவோர் இன்னும் உண்டு) . ஆனால் இந்தப் படத்தில் அதில் இருந்து மாறுபட்டு மீண்டும் கவிதையாக ஒரு மவுனராகம் கொடுத்துள்ளார் மணிரத்னம் . (இந்தப் படத்தில் திரைக்கதை வனைவில் எனக்கு PRETTY WOMAN படம் ஞாபகம் வந்தது . உணர்வோர் உணர்க . உணராதோர் மன்னிக்க !)குறைவான கதாபாத்திரம் உள்ள கதையை எடுத்துக் கொண்டு நுணுக்கி நுணுக்கி  காட்சிகளை செதுக்கி , சுவாரஸ்யமான வசனங்களோடு இளமையும் உற்சாகமும் துள்ளத் துள்ள காட்சிகளை அமைத்துள்ளார் மணிரத்னம் .  அருமை ! சிறப்பு ! நேர்த்தி !

_MG_5154

தனது அட்டகாசமான ஒளிப்பதிவால் இருள் ஒளிக் குழைவு , கசிவு , பெரும் பிரகாசம் , 2Dக்குள் ஒரு 3D தன்மை , நடிக நடிகையரின் முக பாவங்களை மெருகேறிய வகையில் பதிவு செய்யும் விதம் , குணாதிசயச் செறிவு நிறைந்த ஒளிப்பதிவு  என்று… ஒவ்வொரு ஷாட்டிலும் நூற்றுக்கு நூறு வாங்கி  இருக்கிறார் பி சி ஸ்ரீராம் . மணிரத்னம் இணைப்பில் வந்த மற்ற படங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் தனது பணியில் சிறந்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான் . அதே நேரம் ”புத்தம் புது வெளி ;  தித்திக்குது வலி” என்று இன்னமும் அடர்த்தி குறையாமல் அசத்துகிறார் வைரமுத்து . ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு சிறப்பு . பிருந்தாவின் நடன இயக்கம் … ம்ஹும் ! மெனக்கெடல் குறைவாகத் தெரியுது . நடிப்பில் நித்யா மேனன் , லீலா சாம்சன் ஆகிய இரண்டு தாய்க்குலங்களுக்கே முதல் இடம் . ஒரு நொடி கூட சும்மா நிற்காமல் உடலால் அசைவால் அல்லது முக பாவனையால் உற்சாகம் கொப்பளித்தே நித்யா மேனன் அசத்துகிறார் என்றால் நேர் மாறாக , சருகு மாதிரி சற்றே அசையும் ஆழ் கடலின் அமைதி போல ஈர்க்கிறார் லீலா சாம்சன் . அந்தக் குரல் அவருக்கு பெரும் பலம் . தொடர்ந்து நடிப்பீங்களா ஆண்ட்டி?

துல்கர் சிறப்பு. பிரகாஷ் ராஜ் இயல்பான சிறப்பு .

பொதுவாக திரைக்கதையில் அசத்தும் மணிரத்னம் இந்தப் படத்தில் ஒரு முக்கிய விசயத்தில் சறுக்கி இருக்கிறார்.

_MG_5101 அப்பா அம்மாவின் சுய நல விவாகாத்தால் ஏழு வயதிலேயே   மாபெரும் சோகத்துக்கு ஆளானவள் என்ற காரணத்தால் , கல்யாணமே வாழ்க்கையில் வேண்டாம் என்று தாரா  முடிவெடுத்ததிலும் லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு  சம்மதித்ததிலும் ஒரு யதார்த்தம் இருக்கிறது . there is a cause .

ஆனால் ஒரு நிலையில் அவளே — என்னதான் கணபதி – பவானி தம்பதியின் முதிய வயது அக்கறை மிக்க வாழ்வை பார்த்தாலும் – கல்யாணத்துக்கு ஏங்குபவளாக மாறுவது   கதாபாத்திரப் படைப்புக் குறைபாடு .

தாராவின் அப்பா அம்மா சண்டை போட்டுக் கொண்டு பிரிந்ததைப் போல நாளை ஆதியும் தாராவும் சண்டை போட்டுக் கொண்டு பிரியமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?  கண்டிப்பாக சண்டை போட்டுக் கொள்வார்கள். மறதி நோயால் காணாமல் போய் விட்ட வயதான பவானியை தேடும் அந்தப் பட்ட  சூழலில் கூட சுயநலமாக சண்டை போட்டுக் கொண்டே தேடும் அரை வேக்காடுகள் இவர்கள் . அப்படி இருக்க தாராவுக்கு நிகழ்ந்தது நாளை தாராவின் குழந்தைக்கு நிகழாது என்பதற்கு திரைக்கதை எங்கே உத்தரவாதம் தருகிறது ?

எனவே , லிவிங் டுகெதர் வாழ்க்கை முடிவுறும் நிலையில் கல்யாண வாழ்க்கை என்று தாரா ஆசைப்பட்டாள் என்று சொல்வதற்கு பதில் ஆதி ஆசைப் பட்டான் என்று சொல்லி இருக்கலாம் .

அதே நேரம் தாரா ஆசைப்படுகிறாள் என்று சொல்வதுதான் நன்றாக இருக்கும் என்று மணிரத்னம் முடிவு செய்ததிலும் தவறு இல்லை . காரணம் அதில் நிறைய பிளஸ் இருக்கிறது .

எனவே பெற்றோரின் விவாகரத்தை பார்த்து பதிக்கப்பட்ட வரலாற்றை தாராவுக்கு பதில் ஆதிக்கு மணிரத்னம் வைத்து இருக்கலாம்.

அப்படி வைத்தால் படத்தின் இரண்டாம் பகுதியில் ஆதியின் அண்ணன் மூலம் வரும் பரபரப்பை அது தடுக்கும் என்று தோன்றினால் யாருக்குமே அந்த அப்பா அம்மா விவாகரத்து கதையை சொல்லாமல் இருந்திருக்கலாம் .

லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ ஆசைப்பட்டது அவர்கள் இருவரின் இயல்பு என்று போகிற போக்கில் திரைக் கதையில்  அதைக் கடந்து போயிருக்கலாம் .

இன்று லிவிங் டுகெதர் வாழ்கை வாழும் எந்த ஜோடிக்குப் பின்னால் இப்படி பரிதாபமான அப்பா அம்மா பிளாஷ்பேக் எல்லாம் இருக்கிறது ?

No… Not… Nothing !

ஓ காதல் கண்மணி…. ஜஸ்ட்  ஓகே  கண்மணி 

மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————

மணி ரத்னம் , பி சி ஸ்ரீராம்,  வைரமுத்து , ஸ்ரீகர் பிரசாத், நித்யா மேனன் . லீலா சாம்சன்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →