விஜய் மூலன் டாக்கீஸ் வழங்க , கேண்டில் லைட் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு சோம சுந்தரம் , நாசர், ஆனந்த் சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா செல்வம் நடிப்பில்,
நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இயக்கி இருக்கும் படம் ஓடு ராஜா ஓடு . படத்தின் திரைக்கதை மற்றும் படத் தொகுப்பும் நிஷாந்த் ரவீந்திரன் .
சுனில் சி கே வுடன் சேர்ந்து ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜத்தின் ஷங்கர் ராஜ். இசி தோஷ் நந்தா .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் விஜய் மூலன் ,
” புதிய முயற்சிகளுக்கு தமிழ் சினிமாவில்தான் ஆதரவு அதிகம் .
எனவேதான் நான் கேரளாவைச் சேர்ந்தவன் என்றாலும் தமிழில் முதல் படத்தை தயாரித்து இருக்கிறேன் .
அடுத்த படமும் தமிழ்தான் . மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார் ” என்றார் .
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ஜத்தின் ஷங்கர் ராஜ்,
” எளிமையான நிகழ்வுகளை வைத்து வித்தியாசமான கதைக் களத்தில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .
எப்போதும் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு தரும் தமிழ் ரசிகர்கள் இந்த முயற்சிக்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார் .
இயக்குனரும் திரைக்கதை ஆசிரியரும் படத் தொகுப்பாளருமான நிஷாந்த் ரவீந்திரன் பேசும்போது,
” செட்டாப் பாக்ஸ் ஒரு வீட்டுக்கு வருவதால் ஏற்படும் பிரச்னைகளை சொல்கிற கதை இது .
இந்தப் படத்துக்கு குரு சோமசுந்தரம் கொடுத்த ஆதரவும ஒத்துழைப்பும் மறக்க முடியாதது. ஆனந்த் சாமி , நாசர் ஆகியோரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர் ” என்றார் .
இசை அமைப்பாளர் தோஷ் நந்தா பேசும்போது,
“பணம் , அன்பு , இப்படி ஒவ்வொன்றையும் தேடி மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான்.
அப்படி ஓடுபவர்களைப் பற்றிய கதை இது . நல்ல இசையும் என்னால் கொடுக்க முடிந்தது ” என்றார் .
ஆனந்த் சாமி பேசும்போது ,
” மிக வித்தியாசமான இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் .
குருசோமசுந்தரம் தன் பேச்சில், ” வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருக்கிறேன் . அப்படி ஒரு படம்தான் இது .
ஒரு ஷேர் ஆட்டோவில் வரும் பலருக்கும் தனித்தனி வாழ்க்கை தேவை பயணம் இருக்கும் . ஒரு நிலையில் அவர்கள் தங்கள் தங்கள் இடத்தில் இறங்கியும் போய் விடுகிறார்கள் .
அப்படிப்பட்டவர்கள் ஒரு நிலையில் ஒன்று கூடினால் எப்படி இருக்கும் ? அது போன்ற கதை இது ” என்றார் .
நாசர் பேசும்போது,
” சில படங்கள் படம் எடுத்து ஓடும்போது சந்தோசம் தரும் . ஆனால் வெகு சில படங்கள்தான் நடிக்கும்போதே சந்தோசம் தரும் .
அப்படி, நடிக்கும்போதே சந்தோசம் தந்த படம் இது . குறைந்த வசதிகளை வைத்து சிறப்பாக இந்த படத்தை உருவாக்கினார்கள் .
இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ” என்றார் .
ஆகஸ்டு 17 ஆம் தேதி, அதாவது வரும் வெள்ளியன்று படம் வெளிவருகிறது .