ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘காந்தர்வன்’ படத்தில் நடித்த கதிர் ஹீரோவாக நடிக்க,
‘இதிகாசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தது முதல் பல மலையாளப் படங்களில் நடித்துள்ள ஸ்வப்னா கதாநாயகியாக நடிக்கும் படம் 9லிருந்து 10வரை .
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விஜய் சண்முகவேல் அய்யனார். இவர் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் இருவரிடமும் பல படங்களில் பணியாற்றியவர்.
நிறைய தெலுங்குப் படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியவர் . அண்மையில் தெலுங்கில் வந்து வெற்றி பெற்ற லயன் படத்தின் கதை திரைக்கதை இவரே .
தெலுங்குக்கு லயன் கொடுத்த விஜய சண்முகவேல் அய்யனார் தமிழில் மட்டும் 9லிருந்து 10வரை என்று எதோ எண்ணுகிறாரே.. எண்ணம் என்ன?
”காலை ஒன்பது மணியில் இருந்து இரவு பத்து மணிவரை பயணிக்கும் நேரத்துக்கு ஏற்ப ஓடும் சில கதாபாத்திரங்களின் கதையே இந்தப் படம் .
கால்டாக்சி ஓட்டுனரான ஹீரோவும் ரேடியோ ஜாக்கியான ஹீரோயினும் அடிப்படையில் எதிர் எதிர் துருவம் போன்ற குணம் உள்ளவர்கள் .
ஒரு நாள் அவசரமாக காஞ்சீபுரம் செல்ல வேண்டிய ஹீரோயின் , இவனது கால் டாக்ச்யில் ஏறி விடுகிறாள் ,அவர் கொஞ்சம் விநோதமான செய்கைகளைச் செய்யும் நபராக இருந்தாலும் அவசரமாக போக வேண்டியிருப்பதால் சகித்துக் கொள்கிறாள்.
எனினும் வழியிலேயே இருவருக்கும் முட்டிக் கொள்கிறது.
”பிடிக்கலன்னா இறங்கி பொடிடி நடையா போ என்று நடுவழியில் அவன் சொல்ல, வேறு வழியில்லாமல் அவள் கூடவே பயணிக்கிறாள் .
இதே நேரம் ஒரு சீரியல் கொலை விசயமாக காவல்துறை ஹீரோவைத் தேடி வருகிறது. நெடுஞ்சாலையில் ஓர் இளம் பெண்ணுடன் அவன் காரில் போவதைக் கண்ட போலீஸ் இவர்களைத் துரத்துகிறது..
அவர்களிடத்தில் இருந்து தப்பித்து காஞ்சிபுரம் போய்ச் சேர்ந்தால் அங்கே ஹீரோயின் ஹீரோவுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறாள்.
இதற்கடுத்து ஹீரோவும் ஹீரோயினுக்கு ஷாக் கொடுக்கும்வகையில் ஒரு செயலைச் செய்ய.. இருவருக்குள்ளும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
அதன் பிறகு ஹீரோ உயிருக்கு ஆபத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஹீரோயினும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள்.
கடைசி நிமிடத்தில் கதை முற்றிலும் தலைகீழாக தோசையை திருப்பிப் போடுவது போல மாறும்” என்று… படு டெக்னிக்கலாக கதையை சொல்லும் இயக்குனர் விஜய சண்முகவேல் அய்யனார்…. தொடர்ந்து,
“கதாபாத்திரங்களுக்கு வரும் பிரச்னைகளுக்கான காரணங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் போது, ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்களும் அதிரடிகளும், நகைசுவையுமாக கலந்து 20/20 மேட்ச் பார்ப்பதுபோல இருக்கும்.
உச்சக்கட்ட காட்சியில் அதிரடியான கதை திருப்பமும், ஹீரோயின் மீதான காதல் விஷயத்தில் ஹீரோ எடுக்கும் முடிவில் ஒரு புதுமையும், கவித்துவமும் கலந்திருக்கும்.
படத்தின் முடிவில் நெகிழ வைத்து சிந்திக்க வைத்து பிரம்மிப்பில் ஆழ்த்தும் ஒரு முடிவை சொல்கிறோம்.. மொத்தத்தில் இது லவ், த்ரில்லர், காமெடி கலந்த படம் ” என்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம் .
“படத்தின் ஒரு அங்கமாக, ஹைவே ரோட்டின் ஓரம் மரத்தில் ஒருவர் தூக்குப் போட்டுத் தொங்கும் காட்சியை எடுக்க வேண்டி இருந்தது.
எடுக்க ஆரம்பிக்கும்போது ஏதோ உணமையான தற்கொலை என்று எண்ணி பெரும் கூட்டம் கூடி விட்டது . படத்தில் நடிக்கும் போலீஸ் தவிர நிஜ போலீசும் வந்து ஒரே களேபரம்.
அந்த சூழ்நிலையிலும் அசராமல் அந்தக் காட்சியை அவ்வளவு கும்பலில் பிரம்மாதமாக எடுத்துக் கொடுத்தார் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம் ” என்கிறார் இயக்குனர் .
நண்பர்களின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு படத்தை உருவாக்கி இருப்பது படத்தின் ஹீரோ கதிர்தான் .
“படத்தை எப்போதோ முடித்து விட்டோம். போன வருடமே வந்திருக்க வேண்டிய படம் இது. ஆனால் இந்த டாக்ஸ் ஃபிரீ வாங்குவதற்குள் பல மாதங்கள் ஆகி விட்டது .
அதைக் கொடுப்பதற்கு ரொம்பவே ‘எதிர்பார்க்கிறார்’கள் . பேசாமல் இந்த டாக்ஸ் ஃபிரீ விஷயத்தை எடுத்து விட்டால் கூடப் பரவாயில்லை .
வரிப்பணம் யாருடைய பாக்கெட்டுக்கும் போகாமல் அரசாங்கத்துக்குப் போகிறது என்ற சந்தோஷமாவது மிஞ்சும்” என்கிறார் தில்லாக .
ஒன்பதிலிருந்து பத்துவரை படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது .
உற்சாகமா வாங்க !