இந்த ஆரஞ்சு மிட்டாயில் இனிப்பு அதிகமா புளிப்பு அதிகமா ? பார்க்கலாம்.
108 ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றின் மருத்துவ அட்டண்டராக பணிபுரிபவன் சத்யா (ரமேஷ் திலக்). அவனுக்கும் காவ்யா என்ற பெண்ணுக்கும்(அஷ்ரிதா) காதல் . ஆனால் காவ்யாவின் அப்பாவோ, சத்யாவிடம் ‘சொற்ப வருமானம் உள்ள (?) அந்த வேலையை விட்டு விட்டு தனது கடை கண்ணிகளை பார்த்துக் கொள்ள சம்மதித்தால் தன் மகளை திருமணம் செய்து வைக்கிறேன்’ என்கிறார்.
அதை விரும்பாத சத்யா மிகுந்த மனக் குழப்பத்துக்கு ஆளாகி இருக்கும் சூழலில் அவனுக்கும் அவனது நண்பனும் ஆம்புலன்ஸ் டிரைவருமான ஆறுமுகத்துக்கும் (ஆறு பாலா), பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த– மாரடைப்புக்கு ஆளாகி இருக்கும் – கைலாசம் என்ற முதியவரை (விஜய் சேதுபதி) மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணி தரப்படுகிறது .
நகரை ஒட்டிய ஒரு கிராமத்தில் பெரிய வீட்டில் தனியாக வாழும் கைலாசத்தைப் போய்ப் பார்த்தால் அவருக்கு மாரடைப்பு வந்ததற்கான அறிகுறியே இல்லை . தவிர அவர் அகம்பாவம் பிடித்த மனிதராக இருக்கிறார் . இதுவரை 27 முறை ஹார்ட் அட்டாக்குக்கு ஆளாகி இப்போது 28 ஆவது முறை ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக கூறும் அவர், மிக இயல்பாக எதோ சினிமாவுக்கு கிளம்புவது போல மருத்துவமனைக்குக் கிளம்புகிறார்.
அதே நேரம் மருத்துவ மனைக்கு வந்ததும் கைலாசத்தைப் பரிசோதித்த டாக்டர் மிக ஆபத்தான நிலையில் கைலாசம் இருப்பதை சொல்கிறார் . அந்த நிலையில் அவரை கைவிட்டுப் புறக்கணித்துப் போக மனம் வரவில்லை சத்யாவுக்கு . எரிச்சலுடனே அவருடன் புழங்குகிறான் . ஒரு நிலையில் அவரது அடிப்படைக் குண இயல்புகள் சத்யாவுக்குப் புரிய ஆரம்பிக்கிறது.
சத்யாவை அவமானப்படுத்தும் டாக்டரை கண்டித்து அதனால் பாதிக்கப்படுவது, காவ்யாவுடனான சத்யாவின் கல்யாண பிரச்னைக்கு தீர்வு கிடைக்க காரணமாக இருப்பது ஆகியவை நடக்கும்போதுதான் அவர் பலாப்பழம் போன்ற இயல்புள்ளவர் என்பது புரிகிறது ( வெளியே முள், அடுத்து சவ்வு . அப்புறம்தான் இனிய சுளை)
யாருமே இல்லாத தனிமை காரணமாகவே அடிக்கடி இப்படி உடம்பு சரியில்லாததைப் பயன்படுத்தி 108 மருத்துவ நபர்களை வர வரவைத்து அவர்களோடு இருப்பதுவும் அப்போதும் கூட, அவரது கர்வ குணத்தை மாற்றிக் கொள்ளாமல் நடந்து கொள்வதும் சத்யாவுக்கு புரிகிறது.
இப்படி ஒரு வயதான கேரக்டரை எடுத்துக் கொண்டு நிதானமாக அனுபவித்து நடித்து இருக்கும் விஜய் சேதுபதி முதல் பாராட்டுக்குரியவர் . கைலாசத்தின் கையில் உள்ள ஆரஞ்சு மிட்டாய் இந்த கேரக்டர் என்றால் அதை கைலாசம் ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் போல இந்தக் கேரக்டரையும் ரசித்து ருசித்து நடித்துள்ளார் சேதுபதி.
நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ரமேஷ் திலக் சிறப்பாக செய்து இருக்கிறார் .ஒரு பக்கம் காதல் பிரச்னை , இன்னொரு பக்கம் கைலாசம் பிரச்னை இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிப்பதை முக பாவங்களால் மட்டும் காட்ட முயலாமல், உடல் மொழிகளால் காட்டி இருக்கும் விதம் மிக அருமை.
நண்பராக வரும் ஆறு பாலா நடிப்பில் சில ஆரம்ப காலக் குறைபாடுகள் இருந்தாலும் அவரது குரலும் பாமரத்தனமான தோற்றமும் ரசிப்புக்கு உரிய விசயமாக ஆகி விடுகின்றன.
கதாநாயகி அஷ்ரிதா இயல்பாக இருக்கிறார் .
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அருமை. என்றாலும் படத்தில் அந்தப் பாடல்களுக்கு வேலை கம்மி. ஆனால் அழுத்தம் , சோகம் , அதிர்ச்சி , நகைச்சுவை இவற்றை பின்னனி இசை மூலமே கொண்டு வருகிறார் .
பெரிதாக சம்பவங்கள் இல்லாத – இயல்பான நிகழ்வுகளின் தொகுப்பான ஒரு திரைக்கதையை நல்ல விஷுவல்களோடு ஃபாஸ்ட் கட்டிங் உத்தியில் சொல்லி, பெரிதாக போரடிக்காமல் கொண்டு போய் இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எடிட்டர் இயக்குனர் பிஜு விஸ்வநாத் .
அதே ஒரு குறும்படத்தை திரைப்படம் அளவுக்கு விரித்து இருப்பது போன்ற உணர்வைத் தருவதும்…
திரைக்கதையின் போக்கிலேயே வரும் பல சம்பவங்களை அழுத்தமாக சொல்லி சுவாரசஸ்யத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒரு வித மேட்டிமைத்தன்மை கலந்த அலட்சியத்தோடு கடந்து போவதும்….
ஏதோ பெரிதாக நடக்க இருப்பது போன்ற தேவையில்லாத பரபரப்புகளை அடிக்கடிக காட்டி கடைசிவரை அப்படி எதுவுமே இல்லாமல் படத்தை முடிக்கும் உதார்த்தனமும் …..
வெகு ஜன ரசனை மத்தியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஆனாலும் இந்தப் படம் ஒரு வித்தியாசமான அனுபவம் .
ஆரஞ்சு மிட்டாய் … எளிய சுவை