தயாரிப்பாளர் ஆகி விட்டார் விஜய் சேதுபதி .
விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் , காமன் மேன் கணேஷ் இணைந்து தயாரிக்க, விஜய்துபதி, ரமேஷ் திலக் , அஷ்ரிதா, ஆறு பாலா ஆகியோர் நடிக்க பிஜூ விஸ்வநாத் என்பவர் ஒளிப்பதிவு , படத்தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய் .
ஒரு வருடத்துக்கு முன்பு விஜய் சேதுபதி தயாரித்து நடிக்க ஆரம்பித்த சங்குதேவன் படம் நின்று போன நிலையில் , திட்டமிட்டு இந்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்து முடித்து இருக்கிறார் விஜய் சேதுபதி . (லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்துக்கொண்டு இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை படமும் முக்கால்வாசி முடிந்து விட்டது )
ஒரு ஆம்புலன்ஸ், அதில் ஒரு நோயாளி பெரியவர் , அந்த நோயாளிக்கு ஒரு அட்டெண்டர் , ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர் இவர்களின் 48 மணி நேர நிகழ்வுகளே இந்தப் படமாம் . படத்தின் கதைக்கு ஏற்ப, ‘பயணம் சென்று முடியும் இடம் என்பது எல்லை இல்லை . பயணமே எல்லை’ என்று பொருள்படும் JOURNEY IS DESTINATION என்ற துணை வாசகமும் படத்தின் பெயருக்கு கீழே இருக்கிறது
‘படத்தில் அந்த அட்டெண்டர் அல்லது டிரைவர்தான் விஜய் சேதுபதி. முதியவர் யார்?’ என்றுதானே கேட்கத் தோன்றுகிறது . ஆனால் அப்படி இல்லை . அந்த முதியவர்தான் விஜய் சேதுபதி ! அட்டெண்டர் ஆக ரமேஷ் திலக், டிரைவராக ஆறு பாலா. ரமேஷ் திலக்கின் காதலியாக அஷ்ரிதா .
ஆரம்பத்தில் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் எண்ணமே இல்லையாம். “முதியவர் கேரக்டருக்கு பலரையும் கேட்டும் யாரும் ஒத்துக் கொள்ளாததால் நான் நடித்தேன். என் மேக்கப் மேனிடம் ‘எனக்கு ஓல்டு கெட்டப் போட்டுப் பார்க்கலாமா?’ என்று கேட்டேன் . அப்படி போட்டுப் பார்த்து இயக்குனரை அழைத்து ஸ்டில்ஸ் எடுத்து, பண்ணலாம் என்று முடிவான பிறகுதான் நடிக்க ஆரம்பித்தேன் . அதன் பிறகுதான் தயாரிப்பாளர் கணேஷுக்கு நானே நடிக்க இருப்பதை சொன்னேன் .
கணேஷ் எனது பால்ய கால நண்பர் . ஆரஞ்சு மிட்டாய் கதையை அவரிடம் நான் சொன்னபோது , நானும் படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன் என்றார் . அவரையே தயாரிப்பாளர் ஆக்கி விட்டேன்.
படத்தில் நான் நடிக்கும் அந்த முதியவர் கேரக்டரை பார்க்கும் யாருக்கும் அவர்களுடைய அப்பா ஞாபகம் வரும் . எனக்கு கதையை படித்த உடனேயே வந்தது . அதனால்தான் படத்தில் ஒரு இடத்தில் ரமேஷ் திலக் கேரக்டரின் அப்பாவின் போட்டோ வர வேண்டிய இடத்தில் என் அப்பாவின் போட்டோவை வைத்தேன் ” என்கிறார் விஜய் சேதுபதி .
தயாரித்து நடிப்பது மட்டும் அல்லாமல் இந்தப் படத்தின் வசனத்தையும் விஜய் சேதுபதி எழுதி இருக்கிறார். பாடலும் எழுதி இருக்கிறார் .
ஆம்புலன்ஸ் கதையில் ஆரஞ்சு மிட்டாய் எங்கே வருகிறது ?
” ஆரஞ்சு மிட்டாய் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையில் இருக்கும். வாழ்க்கை என்பது சந்தோசம் என்ற இனிப்பும் , பிரச்னை என்ற புளிப்பும் கலந்த ஒன்னுதான் . அதான் அந்தப் பெயரை வைத்தோம் ” என்கிறார் இயக்குனர் .
சுவைக்கட்டும் !