பால்ம்ஸ்டோன் மீடியா சார்பில் ராஜீவ் பனக்கல் தயாரிக்க, பிரசாத் பிரபாகரின் திரைக்கதை இயக்கத்தில், ஆஸ்கர் விருது வென்ற- திரைப்பட ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி நடித்திருக்கும் படம் ஒரு கதை சொல்லட்டுமா? ஒரு கதையாவது சொல்கிறார்களா? பேசுவோம் .ரசூல் பூக்குட்டி அவராகவே நடித்திருக்கும் படம் .
கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான ஆடிப் பூரம்
திருவிழாவில் பல்வேறு இசைக் கருவிகள் மற்றும்
அனைத்து சப்தங்களையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்பது
மலையாளியான ரசூல் பூக்குட்டியின் லட்சியம்.
அதற்காக செலவு செய்து அந்த வாய்ப்பை தரும் ஒருவர் ரசூல் பூக்குட்டியை மரியாதைக் குறைவாக நடத்த , பாதியிலேயே பணியை விட்டு விட்டுப் போகிறார் ரசூல் .

பார்வையற்ற மாற்றுத் திறனாளி இசைக் கலைஞர் மூலமாக பார்வையற்ற பலரை வழியில் சந்திக்கிறார் ரசூல் .
அவர்கள் தங்கள் வாழ்நாள் ஆசையே , பூரம் திருவிழாவின் முழு ஒலிகளையும் கேட்கவேண்டும் என்பதுதான் என்று கூற, மீண்டும் பணிக்கு திரும்பும் ரசூல் , பணியை தொடர்கிறார் .
ஆனால் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரால் பாதிக்கப்பட்ட ஒருவன் அவரை தண்டிப்பதாக எண்ணி , பிரச்னை செய்ய , பதிவுக் கருவிகள் பழுதாகி விடுகின்றன .
பூரம் திருவிழாவின் முக்கிய இசை வடிவமான பாண்டி மேளத்தை ரசூலால் பதிவு செய்ய முடியாமல் போகிறது திருவிழாவும் முடிந்து விட, ரசூல் மனம் உடைய , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .
மலையாள இன உணர்வோடு கேரளத்தின் பெருமை சொல்ல இப்படி ஒரு படம் எடுத்திருக்கும் ரசூலை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . நம்ம ஊர்லயும்தான் திரியுதுகளே .. முன்னூறு கோடி நானூறு கோடிக்கு வித்தை காட்டிகிட்டு …..

இசை, வாண வேடிக்கை , யானைகள் பலவேறு அம்சங்களையும் விவரிக்கிறது படம் . அவ்வளவு சப்தத்திலும் யானைகள் நிதானம் இழக்காமல் நடந்து கொள்வதன் காரணம் உட்பட பல விசயங்களை
படம் பேசுகிறது .
இந்தியாவின் முதல் பெண் பாகரான ஒருவரையும் படத்தில் காட்டுகிறார்கள் . சிறப்பு .
படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு நாம் மலையாளி நம்ம கேரளம் நம்ம பண்பாடு என்ற மலையாளிகளின் பெருமிதமும் மொழி வழி இனப்பற்றும் பொங்கி
வழிகிறது . இங்க என்னடான்னா படத்திலேயே ஜாதி மத வெறியும் மொழி வழி இனப்பற்றும் ஒன்னு என்று விஷம் விதைக்கும் அயோக்கியக் கூட்டம் அதிகம் ஆகி விட்டது .

ரசூலுக்கு நடிப்பு சாத்தியப்படவில்லை . ஆனால் அந்த ஒலிக்கலை சாதனையாளனுக்கு அது ஒன்றும் குறையாக தெரியவில்லை . ஆனால் மற்றவர்களின் நடிப்பும் செயற்கை .
ஆவணப் படம் , திரைப்படம் இரண்டுக்கும் மத்தியில் பயணிக்கிறது படம் .
திருச்சூர் பூரம் திருவிழா முக்கியமான ஒன்றுதான் . ஆனால் இந்தியாவின் மிக சிறப்பான பண்டிகை அதுதான் என்கிறார்கள் சிரிப்புதான் வருகிறது . அதற்கு இணையாக தமிழ் நாட்டின் திருவையாறு தியாகராஜர் ஆராதனையைதான் சொல்கிறார்கள் .
மதம் மொழி இனம் கடந்த அறிவும் நன்றி உணர்வும் ஒன்றாக கலந்த பொங்கல் பண்டிகை இவர்களுக்கு தெரியவில்லை .
அல்லது பூரம் இசை விழா என்று சொன்னால் வேண்டுமானால் அதை திருவையாறு தியாக ராஜ ஆராதனையுடன் ஒப்பிடலாம் .
ஆனால் பூரம் இந்தியாவின் மிக சிறப்பான பண்டிகையாம். அதற்கு இணை திருவையாறு தியாகராஜா ஆராதனைதானாம்
இப்படி குருட்டாம்போக்கில் பல கும்மிகள் அடிக்கிறார்கள் .

கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி . சிறப்பு .
ஒரு கேள்வி கேட்கட்டுமா ? பூரம் திருவிழாவின் மிக பெரிய இசை கொண்டாட்டமே , பாண்டி மேளம் தான் (நம்ம நாதஸ்வரத்தை மேல் கீழாக தொங்க விட்டுக் கொண்டு அடிப்பது) என்கிறார்கள்
ஆனால் அப்புறம் பாண்டி என்ற சொல் மட்டும் எப்படி பல மலையாளிகளுக்கு தமிழர்களை கிண்டலாக சொல்ல பயன்படும் சொல்லாக இருக்கிறது ?
புரியலையே …
ஒரு கதை சொல்லட்டுமா … இனப் பெருமிதம் !